×

ஒலிம்பிக் திருவிழா 2024: நூலிழையில் நழுவிய பதக்கம்; மீராபாய் ஏமாற்றம்

மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடை பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை மீராபாய் சானு ஸ்நேட்ச் முறையில் 88 கிலோ, கிளீன் & ஜெர்க் முறையில் 111 கிலோ என மொத்தம் 199 கிலோ தூக்கி 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கத்தை நழுவவிட்டார். தாய்லாந்தின் கம்பவோ சுரோட்சனா 200 கிலோ தூக்கி (88+112) வெறும் 1 கிலோ வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த பிரிவில் சீனாவின் ஹோ ஜிஹுயி (89+117) தங்கம், ருமேனியாவின் மிஹேலா வாலன்டினா (93+112) வெள்ளி வென்றனர்.

* அரையிறுதியில் அமன் ஷெராவத் தோல்வி
ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 57 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்திய வீரர் அமன் ஷெராவத் (20 வயது) தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (ரவுண்ட் ஆப் 16) ஐரோப்பிய சாம்பியன் விளாடிமிர் எகோரோவை (வடக்கு மேசிடோனியா) 10-0 என வீழ்த்திய அமன், அடுத்து காலிறுதியில் நடப்பு உலக சாம்பியன் ஸெலிம்கான் அபகரோவை (அல்பேனியா) 12-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜப்பானின் நம்பர் 1 வீரர் ரெய் ஹிகுச்சியிடம் 0-10 என போராடி தோற்றார்.

* ஒலிம்பிக் கிராமத்தில் விதிமீறல்: அன்டிம் பாங்கலுக்கு சிக்கல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை அன்டிம் பாங்கல், தனது அடையாள அட்டையை சகோதரியிடம் வழங்கி ஒலிம்பிக் கிராமத்துக்குள் அனுப்பிய விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அடையாள அட்டையை பரிசோதித்த பாதுகாப்பு அதிகாரிகள், ஆள் மாறாட்டம் செய்ய முயன்றதாக அன்டிம் சகோதரியை கைது செய்து விசாரணை நடத்தினர். இருவரையும் உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்போவதாக தகவல் வெளியானதுடன், விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அன்டிம் பாங்கலுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்பட்டதாகவும் செய்தி பரவியது. எனினும், இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த தகவலை மறுத்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பாக பாரிஸ் ஒலிம்பிக் நிர்வாகிகளுடன் இணைந்து தீவிரமாக விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

* சித்ரவேல் 12வது இடம்
ஒலிம்பிக் ஆண்கள் மும்முறை தாண்டுதல் தகுதிச் சுற்றின் ஏ பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் (தமிழ் நாடு), 3 வாய்ப்புகளில் அதிகபட்சமாக 16.25 மீட்டர் தாண்டி 12வது இடம் பிடித்தார் பிரவீன். அதனால் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். குறைந்தபட்சம் 16.79 மீட்டர் தாண்டியவர்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். போர்ச்சுகல் வீரர் பெட்ரோ 17.44 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்தார். தகுதிச்சுற்று பி பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் அப்துல்லா 16.49 மீட்டர் தாண்டி 13வது இடத்தை பிடித்தார். அதனால் மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் பதக்க கனவு பறிபோனது.

* ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவு பைனல் இன்று இரவு நடைபெற உள்ளது. இதில் பிரான்ஸ் – ஸ்பெயின் அணிகள் களம் காணுகின்றன. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஸ்பெயின் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இப்போது தொடர்ந்து 2வது முறையாக பைனலில் விளையட உள்ளது. இதற்கு முன் ஆன்ட்வெர்ப் (1920), சிட்னி (2000) ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளியும், சொந்த மண்ணில் நாட்ந்த பார்சிலோனா(1992) ஒலிம்பிக் போட்டியில் தங்கமும் வென்றது. இப்போது 5வது முறையாக பைனலில் விளையாடுகிறது. பிரான்ஸ் அணி ஏற்கனவே லாஸ்ஏஞ்சல்ஸ் (1984) ஒலிம்பிக்கில் தங்கம், சொந்த மண்ணில் நடந்த பாரிஸ் (1900) ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றுள்ளது. பிரான்ஸ் அணிக்கு இது 3வது பைனலாகும்.

* இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள ஒலிம்பிக் போட்டியாக மகளிர் கோல்ப் இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நூலிழையில் பதக்கத்தை நழுவவிட்ட அதிதி அசோக், இந்த முறை பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கி உள்ளார். அவருடன் மற்றொரு இந்திய வீராங்கனை தீக்‌ஷா தாகரும் பங்கேற்கிறார். நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்றின் முடிவில் தீக்‌ஷா 7வது இடத்தையும், அதிதி 13வது இடத்தையும் பிடித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த 2வது சுற்று முடிவில் தீக்‌ஷா 4 இடங்கள் முன்னேறி 3வது இடம் பிடித்து பதக்கக் கனவை உருவாக்கினார். அதே நேரத்தில் நம்பிக்கை நட்சத்திரம் அதிதி 2 இடங்கள் பின்தங்கி ஆரம்பத்தில் 15வது இடத்துக்கு நகர்ந்தாலும், 2வது சுற்றின் முடிவில் 11வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்தார். இன்று 3வது சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது. பதக்கங்களை முடிவு செய்யும் இறுதிச் சுற்று நாளை நடக்கும்.

* ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் தடகளப் போட்டியின் பைனல் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. அதில் இந்தியா சார்பில் அவினாஷ் சேபிள் (29) பங்கேற்றார். தொடக்கத்தில் முதல் 10 இடங்களுக்குள் ஓடிய அவினாஷ் இறுதியில் 11வது இடத்தையே பிடித்தார். அவர் பந்தயத் தொலைவை கடக்க 8 நிமிடம், 14.18 விநாடிகள் எடுத்துக் கொண்டார். இந்தப்பிரிவில் மொரோக்கா வீரர் சவுஃபைன் (8 நிமிடம், 6.05 விநாடி), அமெரிக்க வீரர் கென்னத் (8 நிமிடம், 6.41 விநாடி), கென்ய வீரர் ஆப்ரகாம் (8 நிமிடம், 6.47விநாடி) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்து முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

* துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் ஏ பிரிவு லீக் ஆட்டம் கொல்கத்தா விவேகானந்தா அரங்கில் நடந்தது. அதில் மோகன் பகான் எஸ்ஜி, இந்திய விமானப்படை எப்டி அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மோகன் பகான் ஆட்டத்தின் 4வது நிமிடம் முதல் 90வது நிமிடம் வரை அடுத்தடுத்து கோலடித்த வண்ணம் இருந்தது. விமானப்படை அணியின் முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. இறுதியில் 6-0 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அபாரமாக வெற்றி பெற்றது. ஏ பிரிவில் முதல் இடத்தில் உள்ள மோகன் பகான் தனது கடைசி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியுடன் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் ஆக.18ம் தேதி நடைபெறும்.

* சீனாவில் நடைபெறும் பாஜி சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி/ஆத்யா வாரியத் இணை, சீனாவின் சி சியாங் மா/மெங் யிங் வூ இணையுடன் மோதியது. அதில் இந்திய இணை 23-21, 21-16 என்ற நேர் செட்களில் கடுமையாக போராடி வென்றது. எனினும் இந்த ஆட்டத்தை 36 நிமிடங்களில் முடித்து காலிறுதிக்கு முன்னேறியது இந்திய இணை.

The post ஒலிம்பிக் திருவிழா 2024: நூலிழையில் நழுவிய பதக்கம்; மீராபாய் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : OLYMPIC FESTIVAL 2024 ,MEERABAI ,Meerabai Chanu ,Mirabai ,Dinakaran ,
× RELATED ஒலிம்பிக் திருவிழா 2024: டேபிள் டென்னிசில் அகுலா அமர்க்களம்