புதுடெல்லி: நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்று ஜூன் 4ம் தேதி முடிவுகள் வௌியாகின. இதில் வினாத்தாள் கசிவு, ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதனிடையே கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு சர்ச்சைகள் காரணமாக தேர்வு நாள் மாற்றப்பட்டு ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் கசிந்ததாக தகவல் பரவியது. மேலும் ரூ.70 ஆயிரம் வரை வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டெலிகிராம் குழுவில் தகவல்கள் பகிரப்பட்டது தொடர்பாகவும் புகார்கள் எழுந்தன.
ஆனால் இதனை தேசிய தேர்வு முகமை மற்றும் ஒன்றிய அரசு முற்றிலும் மறுத்துள்ளது. இதையடுத்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை அவசரமாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனாஸ் தன்வீர் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு நாளை (இன்று) விசாரித்து உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.
The post ரூ.70 ஆயிரத்துக்கு வினாத்தாள் விற்பனை? முதுநிலை நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது appeared first on Dinakaran.