பாரிஸ்: ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் பங்கேற்க இருந்த நிலையில், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து வினேஷ் தனது X வலைத்தள பக்கத்தில், ‘மல்யுத்தம் எனக்கு எதிராக வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள், உங்கள் கனவும் எனது தீரமும் தகர்ந்துவிட்டன. இனியும் போராடும் ஆற்றல் என்னிடம் இல்லை. மல்யுத்தம் 2001-2024 இடம் இருந்து விடைபெறுகிறேன்’ என உருக்கமாக தகவல் பதிந்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நம்பர் 1 வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான யூயி சுசாகி (ஜப்பான்), ஓக்சனா லிவாச் (உக்ரைன்), யுஸ்னெய்லிஸ் கஸ்மன் லோபஸ் (கியூபா) என தொடர்ச்சியாக 3 வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த வினேஷ், துரதிர்ஷ்டவசமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தார். 2 கிலோ கூடுதலாக இருந்த எடையை குறைப்பதற்காக வினேஷ் இரவு உணவை தவிர்த்து, கடுமையான உடற்பயிற்சி, ரத்ததானம், தலை முடியை வெட்டிக் குறைத்தது என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இத்தனை போராட்டத்துக்குப் பிறகும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிக்கப்பட்டதால் மனம் உடைந்த நிலையிலேயே தனது ஓய்வு முடிவை வினேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில், வினேஷ் தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், ‘வினேஷ் ஓய்வு அறிவிப்பு பற்றி சமூக வலைத்தளத்தில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.
அவரது இந்த முடிவால் நானும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். சோகமான தருணத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை அவர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். விரைவில் அவருடன் இது குறித்து பேசுவேன்’ என்றார். ‘2028 ஒலிம்பிக்கில் வினேஷ் பங்கேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவர் நாடு திரும்பியதும் இது குறித்து பேசி, முடிவை மாற்றிக்கொள்ள வலியுறுத்துவேன்’ என்று வினேஷின் நெருங்கிய உறவினரும் முன்னாள் வீரருமான மகாவீர் போகத் கூறியுள்ளார்.
* அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்… அரியானா அரசு அறிவிப்பு
அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘அரியானாவின் தீரம் மிகுந்த மகள் வினேஷ், ஒலிம்பிக்கில் அபாரமாக செயல்பட்டு பைனலுக்கு தகுதி பெற்றார். சில காரணங்களுக்காக அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், எங்கள் அனைவருக்கும் அவர் சாம்பியன் தான். பதக்கம் வென்ற சாதனையாளராகவே அவரை உற்சாகமாக வரவேற்று பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீரர்/வீராங்கனைக்கு அளிக்கப்படும் அனைத்து மரியாதைகள், விருதுகள், சலுகைகள், வசதிகள் வினேஷுக்கும் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார். அரியானா அரசு சார்பில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோருக்கு ரூ.6 கோடி, வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு ரூ.4 கோடி, வெண்கலத்துக்கு ரூ.2.5 கோடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
போகத்தின் சாதனை சரித்திரம்…
* அர்ஜுனா விருது 2016
* லாரியஸ் விருது 2019
* கேல் ரத்னா விருது 2020
* காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 3 தங்கம்
* உலக சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலம்
* ஆசிய விளையாட்டு போட்டியில் 1 தங்கம், 1 வெண்கலம்
* ஆசிய சாம்பியன்ஷிப்பில் 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்
* இளைஞர் மல்யுத்தத்தில் 1 வெள்ளி
The post மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு… வேதனையுடன் விலகினார் வினேஷ் போகத் appeared first on Dinakaran.