திருமலை: ஆந்திராவில் மக்கள் தொகை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட இருந்த தடைச்சட்டத்தை ரத்து செய்து அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரபாபுநாயுடு தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பின் வீட்டு வசதித்துறை அமைச்சர் பார்த்தசாரதி நிருபர்களிடம் கூறியதாவது:
மாவோயிஸ்ட்கள் (சிபிஐ) இயக்கத்தின் மீது ஒரு ஆண்டுக்கு தடை நீடித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆந்திராவில் கருவுறுதல் விகிதம் குறைவாக உள்ளது. தேசிய அளவில் கருவுறுதல் விகிதம் 2.1 ஆக இருந்தால், ஆந்திராவில் 1.5 ஆக உள்ளது. மக்கள் தொகை மேலாண்மைக்கு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. வரும் நாட்களில், ஆந்திராவில் இளைஞர்கள், மக்கள் தொகை குறையும் அபாயம் உள்ளது.
மாநிலத்தில் கருத்தரிப்பு விகிதம் குறைந்து வருவது குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தோம். இதைப்பற்றி பெரிய அளவில் விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் நகராட்சி, பஞ்சாயத்து தேர்தலில் நிற்பதை தடுக்கும் சட்டத்தை ரத்து செய்ய மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தடை சட்டம் ரத்து; 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் ஆந்திர தேர்தலில் இனி போட்டியிடலாம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.