நன்றி குங்குமம் தோழி
*ரவா தோசை மொறுமொறு என்றிருக்க அரிசி மாவு, ரவா இவ்விரண்டையும் சம அளவு கலந்து ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவையோ அல்லது வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவையோ கலந்து தோசை வார்த்தால் தோசை மொறுமொறுவென்று தனிச் சுவையுடன் இருக்கும்.
* வடைக்கு மாவு அரைக்கும் போது நீர் சிறிது அதிகமாகிவிட்டால், ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விட வேண்டும். மாவு இறுகி விடும்.
* காலிஃப்ளவர் கூட்டு செய்யும் பொழுது பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை தாளித்துக் கொட்டி சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, இன்ஸ்டன்ட் எலுமிச்சம் பொடி சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
* மஞ்சள் முள்ளங்கியை வேகவைக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரையும் கலந்து வேகவையுங்கள். முள்ளங்கி மிகவும் சுவையாக இருக்கும்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
* கட்லெட் செய்ய கைவசம் ரொட்டித் தூள் இல்லையென்றால், பொரித்த அரிசியை மாவாக்கி பயன்படுத்தலாம்.
* இட்லி பொடி அரைக்கும் போது கொஞ்சம் நிலக்கடலை சேர்த்து அரைத்தால் சுவையோ சுவை.
* பிஸ்கெட் போட்டு வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரை போட்டு வைத்தால் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
* கிழங்குகள் சீக்கிரம் வேக உப்பு கலந்த நீரில் பத்து நிமிடம் ஊற வைத்து பிறகு வேகவைக்கலாம்.
– விசாலாட்சி கண்ணன், ஓசூர்.
*எந்த வகையான பாயசம் தயாரித்தாலும் அத்துடன் இரண்டு தேக்கரண்டி பாதாம் பவுடர் அல்லது குலோப் ஜாமூன் மிக்ஸ் பவுடர் சேர்த்துக் கொண்டால் பாயசம் மணமும்,
ருசியும் பிரமாதமாக இருக்கும்.
*பால் பாயசம் செய்வதற்கு அரிசியை நன்றாகக் களைந்து அரை மணி நேரம் ஊறவைத்துப் பிறகு பாலில் வேகவைக்க வேண்டும். மேலும் சிறிது சிறிதாக பாலைச் சேர்த்துக் கொண்டு வந்தால்தான் பாயசம் நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும்.
*மூன்று முந்திரிப் பருப்பு, சிறிதளவு கசகசாவை ேசர்த்து அரைத்து கடலை மாவு, தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவு சாதத்தையும், சர்க்கரையையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து அத்துடன் பால் சேர்த்தால் திடீர் பால் பாயசம் ரெடி.
– எஸ்.பாவனா, திண்டுக்கல்.
*உளுந்துடன் 2 தேக்கரண்டி பச்சரிசி சேர்த்து அரைத்து, கேரட் துருவி கலந்து வடை செய்தால் சுவையாக இருக்கும்.
*தேங்காய் பர்பி செய்யும் போது ஒரு மூடி தேங்காய் என்றால் ¼ கிலோ பொட்டுக்கடலை மாவு சேர்த்து, ஏலக்காய் சேர்த்து பர்பி செய்தால் சுவையாக இருக்கும்.
*¼ கிலோ ஜவ்வரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் ஒரு கைப்பிடி கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் சோள மாவு கலந்து செய்தால் சுவையான அல்வா ரெடி.
– டி.கே.வேலு, புதுச்சேரி.
* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது ஊறவைத்த பச்சரிசியுடன் ஒரு மூடி தேங்காய்த் துருவல், ஒரு கரண்டி பழைய சாதம் இவற்றையும் போட்டு அரைத்தால், ஆப்பம் வாசனையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* உருளைக் கிழங்கை பொரிக்கும் போது சிறிது பயத்த மாவை உருளைக் கிழங்கு மீது தெளித்தால், பொரியல் மொறுமொறுப்பாக இருக்கும்.
* குருமா, சட்னிக்கு தேங்காய் அரைக்கும் போது சிறிது முந்திரிப் பருப்பை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
– கே.எல்.புனிதவதி,கோவை.
வாழைக்காய் மதுர் வடை
தேவையானவை:
வாழைக்காய் – 2,
ரவை – 100 கிராம்,
மைதா மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – 50 கிராம்,
கடலை மாவு – 50 கிராம்,
பெருங்காயப் பொடி – 1/2 ஸ்பூன்,
இஞ்சி – 1/2 இஞ்ச்,
பச்சை மிளகாய் – 6,
வெங்காயம் – 100 கிராம்,
கடலைப்பருப்பு – ஒரு கரண்டி,
எண்ணெய் – 200 கிராம்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை தோல் சீவி துருவிக்கொள்ளவும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பை ஒருமணி நேரம் ஊறவிட்டு வடித்துக்கொள்ளவும், எண்ணெய் தவிர எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். உப்பு, கறிவேப்பிலை. கொத்தமல்லி சேர்த்து வடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டுக் கொண்டு இந்த மாவை வடையாகத் தட்டி போட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.
– நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.
திடீர் டிபன் செய்ய…
* புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் ரவை போல் உடைத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது வெந்நீரில் ஊறவைத்து சட்டென்று தோசை வார்க்கலாம்.
* அடைக்கு வேண்டிய பருப்புகளை ரவையாக உடைத்து வைத்திருந்தால், வெந்நீரில் ஊறவைத்து, உடனடியாக அடை வார்த்து விடலாம்.
* வெந்தயத்தை வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டால், தோசை மாவு, சாம்பார், வற்றல் குழம்பில் சேர்க்கலாம். மணம் கூடும்.
– எஸ்.ராஜம், திருச்சி.
The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.