நன்றி குங்குமம் தோழி
வெள்ளந்தியான மனிதருக்கு கல்யாணம். இவருக்கு சொந்தமாக ஜமா (நாடகக்குழு) ஒன்றை தொடங்க வேண்டும் என்பதுதான் கனவு. இவர் நாடகத்தில் பெரும்பாலும் பெண் வேடமிட்டு நடிப்பதாலேயே திருமணமாகாமல் தடை ஏற்படுகிறது. அதனால் அவரின் அம்மா நாடகத்தில் அவர் நடிக்கக்கூடாது என்று கூறுகிறார். தன்னுடைய கனவிற்கு தடையாக இருக்கும் அம்மா மற்றும் தன்னை காதலிக்கும் பெண் என இருவரையும் வேண்டாமெனச் சொல்லி விலகி செல்கிறார். ஜமா எதற்காக தொடங்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன? அவர் ஜமா தொடங்கினாரா? அவருக்கு திருமணம் ஆனதா? காதல் கைகூடியதா என்பதுதான் மீதிக் கதை.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பற்றியதுதான் ஜமா. படத்தின் கதை முழுவதுமே தெருக்கூத்தை பற்றியே பேசுகிறது. கதை எங்கும் மாறாமல் தான் சொல்ல வேண்டிய விஷயத்தை முதல் பிரேமிலிருந்து கடைசி வரை அச்சு பிசகாமல் நகர்கிறது. தெருக்கூத்து என்றால் எப்படி நடக்கும். அதன் இயக்கம் எப்படி இருக்கும். அதற்குள் இருக்கும் கலைஞர்களின் வாழ்வியல், தெருக்கூத்தில் போடப்படும் வேடங்கள், அதில் பாடும் பாடல்கள் என எல்லாமே தெருக்கூத்தை பற்றியே படம் முழுக்க விவரிக்கிறது.
கூழாங்கல் படத்தை தயாரித்த லேர்ன் அண்ட் டீச் தயாரிப்பு நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. புதுமுக இயக்குநரான பாரி இளவழகன் எழுதி, இயக்கி இந்தப் படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார். பெண் வேடமிட்டு நாடகங்களில் நடிக்கும் கதாப்பாத்திரம் என்பதால் பெண்களின் உடல் அசைவுகளையும், அவர்களை போலவே பேசுவது, நடப்பது என எல்லாவற்றிலுமே அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியதற்காகவே இளவழகனை பாராட்ட வேண்டும். வெகுளி மனிதராக இருப்பதும், தன் கனவின் மீதான பிடிவாதத்தை சொல்லும் போதும், பெண் கதாப்பாத்திரமாக வேடமிட்டு சிரிப்பதும், ஒப்பாரி வைக்கும் போதும், அதே சமயத்தில் கம்பீரமாக அர்ஜுன் வேடத்தில் நடிப்பதும், தன் இயலாமையை வெளிப்படுத்துவது என படம் நெடுகவும் பாரி இளவழகன் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
ஜெகதாம்பாளாக நடித்திருக்கும் அம்மு அபிராமி வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய காதலை வீட்டார் எதிர்க்கும் போது அதை எதிர்த்து சண்டையிடுவது, காதலனுக்கு அறிவுரை சொல்வது, யாருக்கும் பயப்படாமல் எதிர்த்து பேசுவது என அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி போகிறார். சேத்தன், கதாம்பி தாண்டவம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நல்ல பலமான கதாப்பாத்திரம். அதே நேரத்தில் நன்றாக நடிப்பு தேவைப்படும் கதாப்பாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார் சேத்தன். இளவரசன் கதாப்பாத்திரம்தான் படத்தின் முக்கியமானது. அதற்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார் கிருஷ்ணா டேயல். தனக்குப் பிடித்த விஷயம் கைவிட்டுப் போனதும் மலை மேல் நின்று அழும் காட்சி அபாரமான நடிப்பு. இது தவிர நாயகனின் அம்மா, குழுவில் இருக்கும் கதாப்பாத்திரங்கள் எல்லாமே நல்ல தேர்வு. அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தின் பலமே இசையும், ஒளிப்பதிவும்தான். இளையராஜாவின் இசை படம் முழுக்க ராஜ்ஜியம் செய்துள்ளது. பின்னணி இசையிலேயே கதையின் ஆழத்தை மனதில் பதிவு செய்கிறார். படத்தில் வரும் ஒரே பாட்டிலும் அவர் தன் ரத்தின முத்திரையை பதிவு செய்துள்ளார். படத்தின் இன்னொரு பலம் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணா திருவண்ணாமலை அழகை அட்டகாசமாக படம் பிடித்திருக்கிறார்.
‘அவனுக்குன்னு ஒரு தனி வாழ்க்கை இருக்குது… அது அவன்தான் முடிவு பண்ணணும்’, ‘பொம்பளைங்க கூடதான் என்கூட பேசறாங்க…’ போன்ற வசனங்கள் கூர்மை.
பெண்ணை போன்று ஒரு ஆண் நடந்து கொண்டால் எப்படியெல்லாம் ஒருவரை கேலியாக பார்ப்பார்கள் என்பதையும், ஒரு ஆண் பெண்ணுடன் நின்று சமைப்பது, கூட்டாக இருக்கும் பெண்களுடன் உட்கார்ந்து ஒரு ஆண் பேசுவது எல்லாமே தவறாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை பற்றியும் பேசுகிறது இந்தப் படம். பெண்களின் சாயலை கொண்ட ஆண்கள் இருந்தால் தவறா? சமையல்கட்டு பெண்களுக்கான இடம் மட்டுமா என்பதைப் பற்றியும் கேள்விகளை எழுப்புகிறது. ஒரு மனிதர் யதார்த்தமாகவும் வெகுளியாகவும் இருந்தாலே அவரை கேலிக்குரிய நபராகவும் கோமாளியாகவும்தான் பார்க்கிறோம்.
தெருக்கூத்தில் எந்தப் பாடல்களை எப்படி பாடுவார்கள்… என்னென்ன வேடங்களை இடுவார்கள்… ஒரு தெருக்கூத்து கலைஞனின் ஆசை என்னவாக இருக்கும் என தெருக்கூத்து கலைஞர்களின் அகம் சார்ந்த ஆசைகளையும் அதற்காக நடக்கும் போட்டிகளையும் தந்திரங்களையும் பேசுகிறது ஜமா. ஒரு நாடகக் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்பதையும், தெருக்கூத்தில் உள்ள நுட்பமான அரசியலையும் பேசி இருக்கிறது ஜமா.
தொகுப்பு: மா.வினோத்குமார்
The post ஜமா appeared first on Dinakaran.