×

தாயை தரக்குறைவாக பேசியதால் தந்தையை கொன்ற மகன் கைது: எண்ணூரில் பயங்கரம்

திருவொற்றியூர்: தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற மகனை கைது செய்துள்ளனர். தாயை பற்றி தரக்குறைவாக பேசியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வீரய்யா (65). இவர் மணலி புதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளர். இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள், ராஜேஷ் (38) என்ற மகன் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டதால் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் ராஜேஷ் பணியாற்றிய வருகிறார். நேற்றிரவு நாகம்மாள், ராஜேஷ் ஆகியோர் சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது குடிபோதையில் தள்ளாடியபடி வந்த வீரய்யாவை மனைவி கண்டித்துள்ளார். ‘’இப்படி தினமும் குடித்துவிட்டுவந்தால் குடும்பத்தை யார் பார்ப்பது? மகனுக்கு வயசாகிறது. இன்னும் திருமணம் செய்து வைக்க முடியவில்லை’ என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து பெற்றோரை ராஜேஷ் சமாதானப்படுத்தியுள்ளார். அந்த சமயத்தில் வீரய்யா, மனைவியை அசிங்கமாக பேசியுள்ளார்.

இதன்காரணமாக கடும் கோபம் அடைந்த ராஜேஷ், ‘’என் தாயை பற்றி தவறாக பேசுகிறாயா’ என்று கூறி வீட்டில் இருந்த கட்டையை எடுத்துவந்து வீரய்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பின் மண்டையில் பலத்த காயம் அடைந்த வீரய்யா மயக்கம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகம்மாள் கூச்சல் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்தவெள்ளத்தில் துடித்த வீரய்யாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அந்த ஊழியர்கள் வந்து பார்த்துவிட்டு வீரய்யா இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதனிடையே வீட்டின் முன் ஆட்கள் திரண்டதால் ராஜேஷ் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எண்ணூர் போலீசார் வந்து வீரய்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக எண்ணூர் காவல் சரக உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையில், 3 தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், காலடிப்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ராஜேஷை கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவரை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தாயை தரக்குறைவாக பேசியதால் தந்தையை கொன்ற மகன் கைது: எண்ணூரில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Ennoor ,Veeraiah ,Ernavur Adi Dravidar Colony, Chennai ,Pudunagar, Manali ,
× RELATED போக்குவரத்து போலீசார் சார்பில்...