நன்றி குங்குமம் தோழி
‘டாப் குக் டூப் குக்’கின் மென்டார் செஃப் செரூபா
‘‘எங்க வீட்டில் என்னையும் சேர்த்து ஐந்து பேர். நாங்க அனைவரும் அவங்கவுங்க துறையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறோம். சின்ன வயசில் இருந்தே எனக்கு சமையல் மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது. அதுதான் இப்போது என்னுடைய முழு நேர துறையாக மாறியுள்ளது’’ என்றார் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டாப் குக் டூப் குக்’கின் மென்டார் செஃப் செரூபா. ‘காரிஸ்’ என்ற பெயரில் கேக் ஸ்டுடியோ அமைத்து, ஆர்டர் மூலம் டால் கேக்குகளை டெலிவரி செய்வது மட்டுமில்லாமல், காபி மற்றும் கேக் ஷாப் அல்லது உணவகம் அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கி வருகிறார்.
‘‘6ம் வகுப்பு படிக்கும் போதே சமைக்க ஆரம்பிச்சேன். மாஸ்டர் செஃப் மற்றும் TLC சேனலில் வரும் சமையல் நிகழ்ச்சிகளை பார்த்து குறிப்பு எடுத்து சமைப்பேன். அப்பா சாட்டட் அக்கவுன்டென்ட் என்றாலும், எங்களுக்குப் பிடித்த துறையை தேர்வு செய்ய முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். அம்மா பள்ளி ஆசிரியை. அவங்க ஒரு விஷயத்தில் ஸ்ட்ரிக்ட். அதாவது, நான் சமைக்க கிச்சனுக்குள் போனா, திரும்பி வரும் போது கிச்சனை கிளீன் செய்திட்டு வரணும். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என் விருப்பத்தை புரிந்து கொண்டு அப்பா மைக்ரோவேவ் அவன் வாங்கிக் கொடுத்தார். அதில் பேக்கிங் செய்ய கத்துக்கிட்டேன். குக்கீஸ் பிரவுனி எல்லாம் புரொபஷனலா செய்ய தெரியாது என்றாலும், சரியான பக்குவத்தில் செய்வேன்.
அந்த ஆர்வம்தான் எதிர்காலத்தில் ஒரு தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் பதிவு செய்திருந்தது. தொழில்முனைவோரை ஆங்கிலத்தில் Entrepre neurன்னு சொல்வாங்க. நான் அந்த வார்த்தைக்கான உச்சரிப்பை மட்டும் தெரிந்து கொண்டு யார் என்னை கேட்டாலும் நான் Entrepre neur ஆகப் போறேன்னு சொல்வேன். +2வில் ஷோம்சயின்ஸ் துறையை தேர்வு செய்தேன். பிறகு சென்னையின் பிரபல கல்லூரியில் ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் நிர்வாகம் துறையை தேர்ந்தெடுத்தேன்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் விடுமுறை நாட்களில் பல ஓட்டல்களில் பயிற்சிக்காக செல்வேன். அதன் மூலம் செயல்முறையாக ஓட்டலில் உள்ள கிச்சன் எவ்வாறு செயல்படும் என்று தெரிந்து கொண்டேன். கடைசி வருடம் பெங்களூரில் உள்ள பிரபல ஓட்டலில் பயிற்சி மேற்கொண்ேடன். என் திறமைக்கான வேலையும் அங்கு கிடைத்தது. ஆனால் எனக்கு ஓட்டல் துறையில் குறிப்பாக கிச்சனில் வேலை செய்ய விருப்பமில்லை. காரணம், அங்கு என்னைப் போல் நிறைய பேர் இருப்பாங்க. பத்தில் ஒருவராக செயல்பட விருப்பமில்லை.
என் திறமையை தனியாக வெளிப்படுத்த விரும்பினேன். அதனால் சென்னை எக்மோரில் அமைந்துள்ள பிரபல காபி ஷாப்பில் செஃப்பாக வேலைக்கு சேர்ந்தேன். ஒரு வருடத்தில் தலைமை செஃப்பானேன். இந்த துறையில் அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்த்ததால், என் முதுகுத் தண்டினை பாதித்தது. சிகிச்சைப் பெற்று என் உடல் முழுமையாக குணமானதும், மீண்டும் கஃபே ஒன்றில் தலைமை செஃப்புக்கான வாய்ப்பு வந்தது. அங்கு நான்கு வருடம் இருந்தேன். அங்குதான் டால் கேக்ஸ் (உயரமான கேக்) செய்ய துவங்கினேன்.
என்னுடைய ஸ்பெஷல் பேக்கரி என்றாலும், அதில் நான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காகவே நான் டால் கேக்குகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்ய துவங்கினேன். அதனைத் தொடர்ந்து ‘காரிஸ்’ என்ற பெயரில் தனிப்பட்ட கேக் ஸ்டுடியோ அமைத்து அதில் ஆர்டர் முறையில் கேக்குகளை தயாரித்து தருகிறேன். மேலும் ஒரு உணவகம் அமைக்க என்ன தேவை என்று ஆலோசனை மட்டுமில்லாமல், அதனை முழுமையாக அமைத்தும் தருகிறேன்’’ என்றவர், டாப் குக் டூப் குக்கின் மென்டார் செஃப் குறித்து விவரித்தார்.
‘‘மீடியா மேசன் நிறுவனத்தின் முந்தைய பிராஜக்டில் நடிகை ஸ்ருதிகாவிற்கு பயிற்சி அளித்திருக்கிறேன். எனக்கு அந்த தயாரிப்பு குழுவில் உள்ள ரூபா மேடம் முதற்கொண்டு எல்லோரையும் தெரியும். அவங்க இந்த நிகழ்ச்சியை துவங்கிய போது, என்னை அணுகி போட்டியாளர்களுக்கு மென்டார் செஃப்பாக வர முடியுமான்னு கேட்டாங்க. எனக்கு ஏற்கனவே பயிற்சி அளித்த அனுபவம் இருந்ததால் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.
என்னுடைய டீமில் மூணு போட்டியாளர்கள் (சுஜாதா, ஷாலி அப்புறம் விஜயன்) அவங்களுக்கு நான் சமையல் பயிற்சி கொடுக்கணும். ஒரு உணவை சமைப்பது முதல் அதனை பிளேட்டிங் செய்வது வரை பயிற்சி அளிக்கணும். சுஜாதாவிற்கு சமையல் தெரியும். ஆனா, அவங்க வீட்டில் சமைக்கக் கூடிய சாதாரண உணவுகளைதான் செய்வாங்க. அவங்களுக்கு இன்னோவேஷன் மற்றும் ப்யூஷன் உணவுகளை சொல்லிக் கொடுக்கணும். ஷாலிக்கு சமையலே தெரியாது. அவங்களுக்கு அடிப்படை சமையலில் இருந்து சொல்லிக் கொடுத்தேன்.
விஜயன் சாரும் ஓரளவு சமைப்பார். சமையலில் இவங்க மூவரின் பலம் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தான் பயிற்சி கொடுப்போம். போட்டியின் போதுதான் என்ன சமையல் செய்யணும்னு சொல்வாங்க. அதனால் ஒரு காய்கறி அல்லது இறைச்சி உணவு என்றால் அதில் என்னென்ன வித்தியாசமான உணவுகளை சுவை மாறாமல் எப்படி தயாரிக்கலாம் என்று ஆலோசனை வழங்குவோம். உதாரணத்திற்கு தயிர் சாதம் என்றாலும் அதை பீட்ரூட் மற்றும் சிறுதானியங்களில் எவ்வாறு சமைக்கலாம்னு சொல்லித் தருவோம். அசைவத்தில் கடல் உணவில் நீச்ச வாசனை வராமல் சுவையும் மாறாமல் கொடுக்கணும். செஃப் பட் அசைவம் சாப்பிடமாட்டார், முகர்ந்து பார்ப்பார்.
அதில் கொஞ்சம் வாடை வந்தாலும் முகம் சுளித்திடுவார். சுஜாதா சுறா புட்டு செய்த போது, அதை மஞ்சள், உப்பு சேர்த்து நன்கு கழுவி ஆவியில் வேகவைக்க சொன்னேன். அப்படி செய்தால், நீச்ச வாடை வராது. இவங்க எல்லோரும் நடிப்பு துறையில் பிசியா இருப்பதால் பயிற்சி எல்லாம் தொலைபேசி மூலம்தான் கொடுக்கிறேன். பயிற்சியில் ரொம்ப முக்கியமானது, ஒரு உணவு சரியா வரலைன்னா அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதுதான்.
நிகழ்ச்சியை டி.வியில் பார்க்க சுவாரஸ்யமா இருக்கும். ஆனால் அவங்க பல இடைஞ்சலுக்கு மத்தியில் ஒரு உணவை தயார் செய்வாங்க. இதற்கு அடிப்படை சமையல் தெரிந்திருந்தால் தான் டூப் குக்குகளிடம் வேலை வாங்க முடியும். ஒருமுறை எள் சேர்த்து உணவு தயாரிக்கணும். நான் போனில்தான் அவங்களுக்கு குறிப்பு சொல்ல முடியும். சுஜாதா கரெக்டா வெள்ளை எள் சேர்த்தாங்க. தீனா கருப்பு எள் சேர்த்துட்டார். நான் வந்து பார்த்த போது அந்த உணவு கருப்பா இருந்தது.
எனக்கு என்னென்னு புரியல. கேட்ட போது கருப்பு எள் பயன்படுத்தியதாக கூறினார். அப்பதான் புரிந்தது, குறிப்பு சொல்லும் போதும் கவனமா இருக்கணும்னு. மற்றொரு முறை ஷாலி கேவர் செய்தாங்க. ஆனா, அவங்க நினைச்சது போல வரல. புதுசா செய்யவும் நேரமில்லை. அதே கேவரை லேயர் போல அமைத்து டிரபிலாக மாற்றினோம்’’ என்றவர், பெண்கள் சமையல் துறையில் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் அதை எப்படி சக்சஸா மாற்றணும் என்று ஆலோசனை வழங்கினார்.
‘‘ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறை. ஒரு பெண்ணாக வரும் போது, முழு உழைப்பை போடணும். எப்போதுமே கவனமா இருக்கணும். உணவு சார்ந்து உங்களை அப்கிரேட் செய்துக்கணும். திடீரென பெரிய ஆர்டர் வரும். அந்த சமயத்தில் நான் ஒரு பெண் என்னால் செய்ய முடியாதுன்னு சொல்ல முடியாது. சில சமயம் நம் மனம் புண்படும்படி விஷயங்கள் நடக்கும். அதை நினைத்து கண் கசக்கினால் அதுவே நம்முடைய பலவீனமாக மாறும். அதனால் என்ன நடந்தாலும் யார் என்ன சொன்னாலும், நம் வேலையில் கவனமா இருக்க பழகிக்கணும். அடுத்து உலகின் சிறந்த கல்லூரியில் படிச்சிருந்தாலும், இந்த துறையை பொறுத்தவரை அனுபவம் மற்றும் திறமைதான் பேசும். ஒரு கடையில் பரோட்டா போடும் மாஸ்டர் அதற்காக சிறப்பு படிப்பு எல்லாம் படிக்கல. முழுக்க முழுக்க திறமை மற்றும் அனுபவம்தான்.
தற்போது, பல பெண்கள் சிறிய அளவில் உணவகங்களை அமைத்து வெற்றிகரமா நடத்தி வராங்க. கடின உழைப்பு அவசியம். அதே சமயம் ஆரோக்கியத்தின் மேலும் கவனம் செலுத்தணும். அடுத்து சைலன்ட் பார்ட்னரா ஒருவரை நியமிப்பது நல்லது. சமையலை ஒருவர் பார்த்துக் கொண்டால் லாப கணக்குகளை மற்றவர் பார்த்துக் கொள்வார். ஒருவரே எல்லா வேலையும் பார்த்தால், தொழிலை சரியாக நடத்த முடியாது. கடைசியாக கடின உழைப்பிற்கு கண்டிப்பா அங்கீகாரம் கிடைக்கும். அதற்கு பொறுமை அவசியம். உங்களின் பலம் என்னவென்று தெரிந்து கொண்டு அதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
என் ஸ்பெஷாலிட்டி டால் கேக். இதை ஒரு சிலர்தான் இங்கு செய்றாங்க. அதில் பெரும்பாலானவர்கள் ஒரு கேக்கினை மறுபிரதி செய்கிறார்கள். நான் அப்படி ெசய்வதில்லை. இது முழுக்க முழுக்க கிரியேட்டிவிட்டி சார்ந்தது. அதனால் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வடிவமைப்பேன். ஆர்டரின் பேரில் செய்வதால், ஃப்ரெஷ்ஷாக கொடுக்க முடிகிறது. மேலும் ஒரு உணவகம் முழுமையாக அமைக்க ஆலோசனையும் வழங்கி வருகிறேன்.
சில உணவகங்களில் கேக் செய்ய போதிய இடம் இருக்காது. அவர்கள் கப் கேக்ஸ், பிரவுனி, பிளாக் பாரஸ்ட் என விரும்பும் வெரைட்டிகளை ஆர்டர் மூலம் செய்து கொடுக்கிறேன். எதிர்கால திட்டம் டால் கேக்கில் மேலும் பல வெரைட்டி தரணும். ஆதரவற்ற பெண்களுக்காக ஒரு இல்லம் அமைக்கணும். அதில் சின்னதா கஃபே அமைத்து, அவர்களுக்கு பேக்கிங் பயிற்சி கொடுத்து, அதன் மூலம் அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரணும். இதுதான் என்னுடைய வாழ்நாள் கனவு’’ என்று புன்னகைத்தார் செஃப் செரூபா.
தொகுப்பு: ப்ரியா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
The post ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரணும்! appeared first on Dinakaran.