×

தமிழக மீனவரை நடுக்கடலில் தாக்கி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

வேதாரண்யம்: தமிழக மீனவரை நடுக்கடலில் தாக்கி உபகரணங்களை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை வடக்கு தெருவை சேர்ந்த விமலா(55) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன்(48), சாணக்கியன்(32), அமுதகுமார்(58), பாக்கியராஜ்(40), தேத்தாகுடி தெற்கு தெருவை சேர்ந்த நாகராஜ்(60) ஆகியோர் ஆறுக்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்றனர். நேற்றிரவு ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே 20 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு பைபர் படகில் தமிழ் பேச தெரிந்த இலங்கையை சேர்ந்த 5 பேர் வந்தனர். திடீரென இவர்களில் 3 பேர் ஆயுதங்களுடன் ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்களின் படகில் ஏறினர். பின்னர் மீனவர்கள் விரித்து வைத்திருந்த வலையை எடுக்க கூறி அன்பழகனை மூங்கில் தடியால் தாக்கினர். பின்னர் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டினர். இதையடுத்து மீனவர்களின் படகில் இருந்த 400 கிலோ மீன்கள், வலை, திசைகாட்டும் கருவி, ஒரு பேட்டரி, டார்ச் லைட், ஸ்டவ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற மீன்பிடி உபகரணங்களின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

இதையடுத்து நள்ளிரவு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு 5 மீனவர்களும் திரும்பி கிராம பஞ்சாயத்தாரிடம் நடந்த சம்பவத்தை கூறினர். பின்னர் கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த அன்பழகனை சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது தலையில் 3 தையல் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர் கதையாக இருக்கும் நிலையில், இப்போது கொள்ளையர்களின் அட்டூழியமும் அதிகரித்துள்ளது. இதனால் மீன்பிடி தொழிலையே விடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர் கதையாக இருக்கும் நிலையில், இப்போது கொள்ளையர்களின் அட்டூழியமும் அதிகரித்துள்ளது.

The post தமிழக மீனவரை நடுக்கடலில் தாக்கி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vedaranyam ,Anbazhagan ,Vimala ,Arukattuthura North Street, Nagai District ,
× RELATED ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்