×

பழனி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முத்தாய்ப்பாக அமையும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (08.08.2024) ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு மற்றும் 11 செயற்பாட்டு குழுக்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநாட்டு பணிகள் தொடர்பாக ஒவ்வொரு குழுவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம், அடுத்தாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், இதர மாநாட்டு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழு கூட்ட முடிவுகளின்படி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 131 முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழ்நாட்டை தவிர இதர மாநிலங்களிலிருந்து 526 முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருகப் பக்தர்கள் பங்கேற்க விரும்பம் தெரிவித்துள்ளனர். இம்மாநாட்டில் தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர் போன்றவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகளும், பணமுடிப்பும் வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரை 65 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதற்கென அமைக்கப்பட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலித்து விருதாளர்களை தேர்வு செய்யும். இம்மாநாட்டில் வெளிநாட்டை சேர்ந்த 39 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றார்கள். மேலும், மலேசியாவிலிருந்து 35 நபர்களும், ஜப்பானிலிருந்து 70 நபர்களும், சுவிட்சர்லாந்திலிருந்து 15 நபர்களும் குழுக்காக தங்களது சொந்த செலவில் மாநாட்டில் பங்கேற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பழனியில் நடைபெறும் மாநாட்டிற்காக 10,000 நபர்கள் அமரும் வகையில் மாநாட்டு பந்தலும், மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருகப் பக்தர்களுக்காக 15 இடங்களில் உணவருந்தும் கூடங்களும், அறுபடை வீடுகளின் அரங்குகள், சிறப்பு புகைப்பட கண்காட்சி, வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருகை தரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு 500 தங்கும் அறைகளும், திருக்கோயில் தங்கும் விடுதியில் 135 அறைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு வளாகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளும், கல்லூரி வளாகத்தில் போதிய கழிப்பிட வசிதிகள் இருப்பினும் கூடுதலாக 60 இடங்களில் தற்காலிக கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்படுவதோடு, அவ்வபோது தூய்மைப் பணிகளை மேற்கொள்ள சுழற்சி முறையில் 480 தூய்மைப் பணியாளர்களும் பணியமர்த்தம் செய்யப்பட உள்ளனர். மேலும், பாதுகாப்பு பணியில் 1,200 காவல் துறையினர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுவதோடு, விபத்து மற்றும் அவசர உதவிகளுக்கு போதிய தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், அரசு மருத்துவக் குழு, அப்பல்லோ, இராமச்சந்திரா மற்றும் காவேரி மருத்துவமனைகளின் சிறப்புக் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருகைதரும் முக்கிய பிரமுகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் வகையில் துறையிலிருந்து செயல் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நிலையிலான அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மாநாடு தொடர்பாக விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுவதோடு, மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. இம்மாநாட்டிற்காக ரூ.1.10 கோடி நன்கொடையாக வழங்கிட உபயதாரர்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளனர். மேலும், அரசு சார்பில் ரூ.3 கோடியும், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடியும் நிதி வழங்கப்படுகிறது. கூடுதல் நிதி தேவைக்கேற்ப அரசிடம் கோரிக்கை வைப்போம்.

மாநாடு நடைபெறும் நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளாக இருப்பதனால் உள்ளூர் விடுமுறை தேவை இருக்காது. தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்ச்சாலைகளுக்கு மேற்கண்ட நாட்களில் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாநாடு தொடர்பான பணிகளை துறை செயலாளர், ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால் இம்மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முத்தாய்ப்பாக அமையும்.

காசி-இராமேசுவரம் ஆன்மிகப் பயணத்தை ஒன்றிய அரசு தொடங்குவதற்கு முன்பே கடந்த 04.05.2022 அன்று நடைபெற்ற 2022 -2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது முதன்முதலாக அறிவிப்பை வெளியிட்டோம். முதல் பயணத்தை 22.02.2023 அன்று இராமேசுவரத்தில் தொடங்கி மூன்று கட்டங்களாக 200 மூத்த குடிமக்களை அரசு நிதியில் ரூ.50 இலட்சத்தில் காசிக்கு அழைத்துச் சென்று வந்தோம்.

அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் முதல் பயணத்தை 31.01.2024 அன்று தொடங்கி 5 கட்டங்களாக 300 நபர்களை ரூ.75 லட்சம் அரசு மானியத்தில் அழைத்து சென்று வந்துள்ளோம். இந்தாண்டு 420 மூத்த குடிமக்களை ரூ.1.05 கோடி அரசு மானியத்தில் 7 கட்டங்களாக அழைத்து செல்ல அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். ஒன்றிய அரசுக்கு தோன்றுவதற்கு முன்பாகவே இராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்தை அறிவித்து இதுவரை 500 மூத்த குடிமக்களை அழைத்து சென்று செயல்படுத்திய ஆன்மிக அரசு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு என்பதனை அண்ணாமலை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்து பணிகளும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாநாட்டில் முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோரின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சுகி சிவம், மு.பெ.சத்தியவேல் முருகனார், தேசமங்கையர்க்கரசி, மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், தவத்திரு இரத்தினகிரி பாலமுருனடிமை சுவாமிகள், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா. சுகுமார், ந.திருமகள், சி.ஹரிப்ரியா இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பழனி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முத்தாய்ப்பாக அமையும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Palani, International Muttamil Murugan Conference ,Hinduism ,Minister ,P. K. Sekarpapu ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Minister of ,Hindu ,Religious Affairs ,P. K. ,International Muttamil Murugan Conference Coordinating Committee ,Action Committees ,Palani ,Office Meeting Hall ,Sekarbaba ,
× RELATED பழநியில் இரண்டு நாள் நிகழ்ச்சி...