நன்றி குங்குமம் டாக்டர்
இனி யோகம் பயில்வோம்!
எந்த நீண்ட மரபும் மூலநூல்கள் என சிலவற்றை அல்லது முதன்மை நூல் என ஒன்றை அடிப்படையாக வைத்தே அதன் அத்தனை பாடங்களையும் வடிவமைத்து இருக்கும், யூதர்களின் ‘ தோஹ்ரா ‘ இஸ்லாமியர்களின் ‘திருக்குரான் ‘ கிருத்துவர்களின் ‘விவிலியம் ‘ போல இந்திய நூல்களில் முதன்மை நூல்கள் மூன்று, அவை பிரம்ம சூத்திரம் பகவத்கீதை , உபநிடதங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆயுர்வேதத்தில் முதன்மை நூல்கள் மூன்று , யோகத்திலும் அப்படி முதன்மை நூல்கள் என மூன்றை சொல்லலாம். இப்படி மூன்று பெரும் நூல்களை ‘பிருஹத்-த்ரையி’ என்பர். முப்பெரும் நூல்கள்.
ஆயுர்வேத முப்பெரும் நூல்களுக்கு , சரஹ சம்ஹிதை , சுஸ்ருத சம்ஹிதை , அஷ்டாங்க ஹிருதயம் என்று பெயர். அதே போல யோக நூல்கள் மூன்று அவை , பதஞ்சலி எழுதிய யோகசூத்திரம் , சுவாமி ஸ்வாத்மா ராமா எழுதிய ‘ஹடயோக பிரதீபிகை’ மற்றும் யோக உபநிஷத்துக்கள் { இவை இருபத்தி ஒரு நூல்களின் தொகுப்பு}
நாம் இதுவரை பார்த்த அத்தனை கருத்துக்களும், யோகமரபின் அனைத்து முறைகளும், பயிற்சிகளும் பாடங்களும் , மேலே சொல்லப்பட்ட இந்த மூன்று நூல்களின் மூலத்திலிருந்தே எடுக்கப்பட்டவையாக இருக்கும்.
அதிலும் பதஞ்சலி எழுதிய சூத்திரமே யோகத்தை பற்றிய முழுமையான பார்வையை கொண்டிருக்கிறது. இதில் பதஞ்சலி நூற்றுத்தொண்ணூற்று ஆறு சூத்திரங்களை நான்கு பாதங்களாக { அத்தியாயங்களாக } பிரித்து எழுதி இருக்கிறார்.
முதல் பாதமே சமாதி பாதம் எனும் ஒருவர் வாழ்வில் அடைந்தே தீரவேண்டிய நிலை மற்றும் அதன் மேன்மையும் , அவசியமும் பேசப்படுகிறது. கிட்டத்தட்ட மொத்த நூலும் இந்த முதல் முதல் அத்தியாயத்தை நோக்கி வருவதற்கான வரைபடம் மட்டுமே என சொல்லலாம். ‘சமாதி’ எனும் நிலை அதில் என்ன நிகழ்கிறது என்பதை தெளிவுபடுத்தும் ஐம்பத்தியோரு சூத்திரங்கள் அடங்கியது.
இரண்டாவது அத்தியாயம் சாதனா பாதம் இன்று நாம் யோகம் சார்ந்து பேசும் அத்தனை விஷயங்களும் , பயிற்சிகளும், யோகக்கருத்துகளும் இந்த இரண்டாம் பாகத்தில் அடக்கம் ஐம்பத்திஐந்து சூத்திரங்களை கொண்ட இந்த பகுதி , அடையவேண்டிய இலக்கு ‘சமாதி ‘எனும் நிலை ஆனால் அதற்கான திட்டவட்டமான வரையறை, மற்றும் ஏறிச்செல்லவேண்டிய படிநிலைகள் என ஒரு சாதகனுக்கு தோன்றக்கூடிய அனைத்து வித வினாக்களுக்கும் பதில் சொல்லும் பகுதி இது. இதில் தான் பதஞ்சலியின் அஷ்டாங்க மார்க்கம் எனும் தனித்துவமான பாதை சார்ந்து தெளிவான விளக்கம் சொல்லப்படுகிறது.
மூன்றாவதாக, விபூதி பாதம் எனும் அத்தியாயம் , இதில் யோக சாதனையின் பெருமைகளும், அதன் மூலம் சாதகன் அடையக்கூடிய சித்திகளும் விரிவாக சொல்லப்படுகிறது, பெரும்பாலான குருமார்கள் இந்த பகுதியை மிகுந்த கவனத்துடன் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது தான் நம் மரபில் வழக்கம், ஏனெனில் இதில் சொல்லப்பட்டிருக்கும் அஷ்டமா சித்திகள், பிறர் மனதை படித்தல், காற்றில் பறத்தல், வருங்காலத்தை கணித்தல் போன்ற அமானுஷ்ய செயல்களில் ஆர்வம் ஏற்பட்டு ஒரு சாதகன் இந்த இடத்திலேயே அதிக காலம் இருந்துவிடுவதோ , இவற்றில் ஈர்க்கப்பட்டு தவறான எண்ணங்களுக்கு யோகத்தை பயன்படுத்தக்கூடாது என்பதாலோ, இந்த விபூதி பாதத்தை முடிந்தரை ‘அனுபவித்துவிட்டு கடந்து செல்’ என்றே அறிவுரை வழங்குவர்.
நிறைவாக, கைவல்ய பாதம் எனும் அத்தியாயம் இதை அரவிந்தர் ‘ முழுமையான ஒருமைப்பாடு என்கிறார். பதஞ்சலி சொல்லும் ‘யோகி தன் உண்மை சொரூபத்தில் இருப்பான் ‘ என்பதை பேசும் பகுதி இது முப்பத்து மூன்று சூத்திரங்கள் அடங்கிய நிறைவுப்பகுதி, இதில் கைவல்யம் எனும் இரண்டற்ற ஒற்றைப்பெரும்நிலை பற்றி பேசப்படுகிறது. ஒரு யோக சாதகன் அல்லது யோகத்தை கற்க நினைப்பவன், ஆசனம், பிராணாயாமம் , தியானம் , யோகத்தத்துவம் என எங்கிருந்து தொடங்கினாலும் அவன் பதஞ்சலியின் மாணவனே. நாம் கடந்த ஐம்பது அத்தியாயங்களில் பேசிய ஒவ்வொரு சொல்லும் பதஞ்சலியின் சொல்லே.
ஆகவே அவருடைய முதல்
சூத்திரத்தில் நிறைவு செய்வோம்.
‘அத யோக அனுசாஸனம்’
ஆம் இனி யோகத்தை பற்றி
விளக்குவோம்.
இனி யோகம் பயில்வோம்.
சரல் தனுராசனம்
இந்த பகுதியில் நாம் ‘சரல் தனுராசனம்’ எனும் பயிற்சியை காணலாம், தனுராசனம் செய்யும் அளவுக்கு உடலில் நெகிழ்வுத்தன்மை இல்லாதவர்கள் இந்த ஆசனத்தை முயற்சி செய்யலாம், யோகமரபில் மிக முக்கியமான பயிற்சியாக இதை வடிவமைத்து வைத்துள்ளனர். பல நோய்களுக்கு சிகிச்சையாகவும் அறிவுறுத்தப்படுகிறது.
நெற்றி தரையில் படும்படி குப்புறப்படுத்த நிலையில் இரு கால்களையும் மடக்கி, கைகளால் பிடித்துக்கொண்டு, மூச்சை உள்ளிழுத்தபடி தலை, கழுத்து நெஞ்சுப்பகுதியை மேல்நோக்கி உயர்த்தவும் , மூச்சு வெளியே செல்லும்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும். இப்படி பத்து முறை செய்யவும்.
The post ங போல் வளை- யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.