×

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்: திமுக, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

டெல்லி: வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு திமுக. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்; ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா அரசியல் அமைப்பின் அடிப்படை மீதே தாக்குதல். வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை உறுப்பினர் ஆக்குவது மக்களின் மத உரிமை மீதான தாக்குதல். ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர் இடம்பெற முடியும் என்று யாராவது சிந்திக்க முடியுமா? குருவாயூர் தேவசம்போர்டு நிர்வாகத்தில் இந்து அல்லாத ஒருவருக்கு இடம்தர முடியுமா?.

மராட்டியம், அரியானா உள்ளிட்ட மாநில தேர்தலை மனதில் கொண்டு சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்ததாக கண்டனம் தெரிவித்தார். ரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அதன் அடிப்படையையே சிதைக்கிறீர்கள். தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய அரசு நாளை கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்ஜெயின் சமூகம், பார்சிகளுக்கு எதிராகவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று குற்றம் சாட்டினார். மத சுதந்திரம், கூட்டாட்சி தத்துவம் என்று அனைத்துக்கும் எதிரானது புதிய சட்டத் திருத்தம். நாட்டு மக்களை பிளவுபடுத்துவதே இந்த சட்டத்திருத்தத்தின் நோக்கம் என்றும் குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்.பி.கனிமொழி; மதசார்பற்ற நாடான இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிராக சட்டத்திருத்தம் கொண்டு வருவது தவறு. இஸ்லாமியர்களுக்கான வக்ஃபு வாரியத்தில் பிற மதத்தவரை எப்படி கொண்டு வர முடியும்? அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிராக செயல்படுகிறது ஒன்றிய அரசு. கூட்டாட்சி தத்துவம், மத சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராக வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது. வக்பு வாரிய சட்டதிருத்தம் இஸ்லாமியர்ளுக்கு முற்றிலும் எதிரானது

அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல. வக்பு வாரிய சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக முன்தேதியிட்டு சட்டத்தை அமல்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்? நாட்டின் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்கு முற்றிலும் எதிரானது வக்பு வாரிய சட்டத்திருத்தம் என்று கூறினார்.

The post வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்: திமுக, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Congress ,Delhi ,Union Minister ,Kiran Rijiju ,Vakpu ,Lok ,Sabha ,Secretary General ,K. C. Venugopal ,Union Government ,Board of Vakpu ,Dinakaran ,
× RELATED மத, சாதிய வெறுப்புணர்வை முறியடிக்க...