பெரியபாளையம், ஆக. 8: பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் மாளிகைபட்டு ஆரணி ஆற்றில் இரவு நேரத்தில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே தும்பாக்கம் சுடுகாடு பகுதியில் தொடர் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. எனவே, நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் இருந்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் மாளிகைபட்டு கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் தும்பாக்கம்- கீழ் மாளிகைபட்டு இடையே உள்ள ஆரணி ஆற்றுப்பகுதியில் 6 வழி சாலை பணிகளும், புதிய மேம்பாலம் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட இரு கிராமங்களின் பகுதி விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்கள் ஆரணி ஆற்றின் கரையை ஒட்டி உள்ளது. இந்நிலையில், பட்டா நிலங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்தும் அதிலிருந்து தண்ணீரைக் கொண்டு நிலக்கடலை, நெற்பயிர், சாமந்தி, வெண்டை, கத்திரிக்காய், கீரை வகைகளை உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதி விவசாயிகள் ஆரணி ஆற்றின் நிலத்தடி நீர்மட்டத்தை நம்பி முப்போகம் பயிர்களை விளைவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தக் கீழ் மாளிகை பட்டு எல்லையொட்டி தும்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான சுடுகாடு அமைந்துள்ள பகுதியில், கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து ஆரணி ஆற்றில் பாதை அமைத்து மணல் கொள்ளையர்கள் பொக்லைன் இயந்திரங்களை வைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாவது: ஆரணி ஆற்றில் நள்ளிரவில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. மேலும் தாங்கள் கிராமத்திற்கு தேவையான குடிநீருக்காக ஆற்றில் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் இந்த ஆழ்துளை கிணறுகளின் பைப்புகளையும் சேதப்படுத்தி சென்றிருப்பதால் குடித்தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
மேம்பாலம் அருகே மணல் அள்ளப்படுவதால் எதிர் காலத்தில் மேம்பாலத்திற்கும் ஆபத்து ஏற்படும், அதே சமயம் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படும். மேலும் இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள், காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை, எனவே மாவட்ட கலொக்டர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த மணல் கொள்ளையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்தனர். கு டிநீருக்காக ஆற்றில் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மணல் கொள்ளையர்கள் இந்த ஆழ்துளை கிணறுகளின் பைப்புகளையும் சேதப்படுத்தி சென்றிருப்பதால் குடித்தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
The post பெரியபாளையம் அருகே தும்பாக்கம் சுடுகாடு பகுதியில் ஆரணி ஆற்றில் இரவு நேரத்தில் தொடரும் மணல் கொள்ளை: நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.