×

இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பாக ஹால்மார்க்கிங், ஐஎஸ்ஐ முத்திரை பற்றிய விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர், ஆக. 8: இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்) மேலாண்மை திட்டச் சான்றிதழ் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கலை பொருட்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய தர நிர்ணய அமைவனம் தொழிற்சாலைகள், அரசு கல்வியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களிடையே தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும். ஹால்மார்க்கிங் கடைபிடிக்காத நகைக் கடைக்காரர் மற்றும் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு திட்டங்கள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள தங்கம், வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது குறித்தும் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பேரணி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக காமராஜர் சாலை வரை சென்று மீண்டும் எம்ஜிஆர் சிலை வந்து அடைந்தது. இதில் 100 கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த நடைபயணத்தில் இந்திய தர நிர்ணய அமைவனம் அனைத்து நுகர்வோரையும் ஹால்மார்க்கின் 3 கூறுகளான ஹால்மார்க் லோகோ, காரட்டேஜ், நேர்த்தித்தன்மை, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட தயாரிப்புகள், பிஐஎஸ் பதிவு செய்யப்பட்ட முத்திரையிடப்பட்ட தயாரிப்புகள் மற்றும் பிஐஎஸ் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க பிஐஎஸ் கேர் செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் லோகோ அவசியம் குறித்த போஸ்டர்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் வெளியிட்டார்.

The post இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பாக ஹால்மார்க்கிங், ஐஎஸ்ஐ முத்திரை பற்றிய விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : ISI ,Indian Standards Institution ,Thiruvallur ,Indian Standards Organization ,Ministry of Consumer Affairs, Food and Public Supply, ,Government of India ,ISI Mark ,Dinakaran ,
× RELATED அனுமதியற்ற கல்வி நிறுவன...