×

ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் 2024: தலைவர்கள் ஆதரவு

* ஜனாதிபதி திரவுபதி முர்மு: பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தி, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளன. தகுதிநீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 140 கோடி மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார். வினேஷ், இந்தியப் பெண்களின் உண்மையான மன உறுதியை வெளிப்படுத்துவதுடன், இந்தியாவில் இருந்து வருங்கால உலக சாம்பியன்கள் உருவாக ஊக்கமளிக்கிறது. எதிர்காலத்தில் அவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்.
* உள்துறை அமைச்சர் அமித் ஷா: வினேஷ் போகத்திற்கு நடந்த இந்த துரதிர்ஷ்டம் ஒரு விதிவிலக்கு. அவர் மீண்டும் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன்.
* நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு: வினேஷ் போகத் இந்தியாவின் நம்பிக்கை. பெருமையின் கலங்கரை விளக்கம்.
* காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: இந்தியாவின் பெருமை வினேஷ் போகத். அவர் உலக சாம்பியன்களை தோற்கடித்தார், ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். நீதிக்காக நடைபாதையில் போராட்டம் நடத்துவது முதல் ஒலிம்பிக் போட்டியின் உச்ச மேடையை அடைவது வரை அவரது பயணம் கடினமானது. அவருக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். எங்கள் சாம்பியனுக்கு நீதி வழங்க வேண்டும். நாங்கள் எப்போதும் உன்னுடன் இருக்கிறோம். எங்கள் பிரார்த்தனைகளும் உன்னுடன் உள்ளன. உங்கள் தைரியம் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. நீங்கள் அதிக உறுதியுடன் திரும்புவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
* நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி : உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களை தோற்கடித்து பைனலுக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத், தொழில்நுட்ப காரணங்களால் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல, அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இன்றும் உங்களுக்கு பக்கபலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது.
* காங்கிரஸ் எம்பி ரந்தீப் சுர்ஜேவாலா: 140 கோடி இந்தியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது மிகப்பெரிய வெறுப்பு சதி. ஆனால், நாடு வினேஷ் போகத்துடன் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்
* பிரியங்கா காந்தி: என் சகோதரி, உன்னைத் தனியாகக் கருதாதே, நீ எப்போதும் எங்களின் சாம்பியனாக இருப்பாய் என்பதை நினைவில் கொள்.
* முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்: இந்தியா ஒரு விளையாட்டு தேசமாக உயர்வதைக் கண்டு மகிழ்ச்சியடையாதவர்கள், இந்தியாவின் பதக்க நம்பிக்கைக்கு எதிராக சதி செய்துள்ளனர். இது நாசவேலையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். வெறும் 100 கிராம்தான் பிரச்னை. விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் ஐந்து முதல் ஆறு கிலோ வரை குறைக்கலாம். பசி, தாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த எங்களுக்குத் தெரியும்.

* 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றது ஏன்?
வினேஷ் போகத் வழக்கமாக 53 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டிகளில் தான் பங்கேற்று வந்தார். ஆனால், இந்த முறை மற்றொரு இந்திய வீராங்கனை அன்டிம் பாங்கல் அந்த பிரிவில் பங்கேற்பதற்கான ஒலிம்பிக் ஒதுக்கீட்டு இடத்தை உறுதி செய்துவிட்டதால், வினேஷ் வேறு வழியில்லாமல் கடுமையாக முயற்சித்து தனது உடல் எடையை குறைத்து 50 கிலோ எடை பிரிவில் களமிறங்கத் தயாரானார். முன்னாள் பாஜ எம்பி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன், இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து வெடித்த போராட்டத்தில் வினேஷ் மும்முரமாக இருந்ததால், அவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக போதிய அவகாசம் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

* வெள்ளி யாருக்கும் இல்லை!
போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, மகளிர் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் யாருக்கும் அளிக்கப்படாது. பாரிஸ் ஒலிம்பிக் விதிமுறைகளின் படி, இந்த பிரிவில் ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* பிரான்சில் எடை கூடுமா!
அட்சரேகை, அது சார்ந்த புவியீர்ப்பு விசை மாறுபாடு, காந்தப் புலன்களின் ஈர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒருவரின் உடல் எடை உலகின் வெவ்வேறு பகுதிகளில் சற்று கூடுவது அல்லது குறைவது இயல்புதான் என கூறப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் 70 கிலோ எடை கொண்ட ஒருவர், பாரிசில் தனது எடையை அளவிட்டால் அது 0.21 கிராம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

* எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் குறித்து பேச கார்கேவுக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது, ​​எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போகத்துக்கு நீதி கோரி முழக்கங்களை எழுப்பினர். ஆனால், அவையில் எதுவும் பதிவு செய்யப்படாது என்று அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். இதையடுத்து, இந்த பிரச்னை குறித்து பேச விரும்புவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே அனுமதி கோரினார். அதற்கு தன்கர் அனுமதி மறுத்து, நிதிஒதுக்கீடு விவாதம் நடைபெறும் என்று கூறினார். கார்கே பேச தன்கர் அனுமதி மறுத்ததைக் கண்டித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

* பைனலில் மாற்றம்
மகளிர் மல்யுத்தம் 50 மீட்டர் ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் அமெரிக்காவின் சாரா ஹில்டிபிரான்ட் உடன் வினேஷ் இன்று மோதுவதாக இருந்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அரையிறுதியில் வினேஷிடம் மண்ணைக் கவ்விய கியூபா வீராங்கனை யூஸ்னெய்லிஸ் கஸ்மன் பைனலில் சாராவுடன் தங்கப் பதக்கத்துக்காக மோதுவார். ஜப்பானின் யூயி சுசாகி, ஓக்சனா லிவாச் (உக்ரைன்) வெண்கலப் பதக்கத்துக்காக ‘ரெபஷாஜ்’ போட்டியில் வெற்றி பெற்று வருபவர்களுடன் மோதுவார்கள்.

* உரிய நடவடிக்கை எடுக்க பிரதமர் வலியுறுத்தல்
வினேஷ் போகத் தகுதிநீக்க விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, விளக்கம் அளித்த ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘இது தொடர்பாக உலக மல்யுத்த அமைப்புக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாரிசீல் உள்ள இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார். ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான ஆயத்த பயிற்சி, முன்னேற்பாடுகள் அனைத்திலும் வினேஷ் போகத்தை தயார்படுத்த அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்தது. அவருக்கான தனிப்பட்ட பணியாளர்கள் கூட நியமிக்கப்பட்டனர். வேண்டிய நிதி உதவிகளையும் அரசு செய்துள்ளது’ என்றார்.

* காங்கிரஸ் பொதுச் செயலர் ரந்தீப் சுர்ஜேவாலா, ‘வினேஷ் போகத் தகுதிநீக்கத்துக்கு மோடி போடும் ஆறுதல் ட்வீட்கள் பலன் தராது. போகத்துக்கான நீதியை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.

* பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பாஜ எம்பி.யாக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்து வந்தார். அவர் தங்களுக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான ஷாக்சி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட 7 வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். மேலும், ஒரு மைனர் மல்யுத்த வீராங்கனையும் அவர் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டை தெரிவித்தார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும்படி வலியுறுத்தி, கடந்தாண்டு ஜனவரியில் இந்த வீராங்கனைகள் அனைவரும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அப்போதைய ஒன்றிய பாஜ அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். ஆனால், 3 மாதங்கள் கடந்த பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஏப்ரலில் இந்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இந்த முறை ஒரு மாதத்துக்கும் மேலாக, இரவுப் பகலாக போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த வீராங்கனைகள் மீது போலீசார் தடியடி நடத்தி, சாலைகளில் விரட்டிச் சென்று குண்டு கட்டாக கைது செய்தனர். இந்த போராட்டங்களில் போகத் முக்கிய பங்காற்றினார். இறுதியில், இந்த பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான், கடந்தாண்டு ஏப்ரல் 28ம் தேதி பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் போக்சோ உட்பட் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் விலகினார்.

* விளையாடிய ‘விதி’முறைகள்! அனுமதிக்கப்பட்ட எடை
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் எந்த மல்யுத்த வீரருக்கும் ஒரு கிராம் சலுகை கூட கிடைக்காது. ரேங்கிங் தொடர்களில் ஒருவர் 2 கிலோ சலுகையைப் பெறுகிறார். அதாவது போட்டி நாளில் ஒருவர் 52 கிலோவாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒலிம்பிக் விதிகள் கடுமையானவை.

* குறைந்த அவகாசம்
ஒலிம்பிக்கில், மல்யுத்த போட்டி 2 நாட்கள் நடைபெறும். ஒருநாள் முன்பாக, போட்டியிடும் மல்யுத்த வீரர்கள் எடை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். முதல் நாளில், மல்யுத்த வீரர் பிரத்யேக ஆடை அணிந்து, 30 நிமிடம் பல முறை தனது எடையை அளவிட வேண்டும். மருத்துவப் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று நோய் இருப்பது உறுதியானாலும் தகுதிநீக்கம் தான். நகங்கள் வெட்டப்பட வேண்டும். தங்கப் பதக்கம், வெண்கலப் பதக்கம், ப்ளே-ஆப் மற்றும் ரெபஷாஜ் போட்டிகளுக்கு மீண்டும் தகுதிபெறுவோர் 2வது நாளில் எடை சோதனைக்கு வர வேண்டும். கால அவகாசம் 15 நிமிடங்கள் மட்டுமே. இங்குதான் வினேஷின் எடை 50.1 கிலோவாக இருந்தது. 15 நிமிட அவகாசம் முடிந்ததும், வினேஷின் பதக்க நம்பிக்கை தகர்ந்தது.

* எடை கூடியது எப்படி?
வினேஷ் பெரும்பாலும் 55-56 கிலோ எடையுடன் இருந்தார். 50 கிலோ பிரிவுக்கு தகுதிபெற்றதும், ஒவ்வொரு போட்டிக்கும் முன் அவர் குறைந்தது 6 கிலோ எடையைக் குறைக்க போராடினார். திடீர் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான செயல். முதல் நாளுக்குப் பிறகு, அவர் சுமார் 1.5 கிலோ அதிகரித்தார். முந்தைய நாள் எடை குறைத்த அவரால், மறுநாள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அதைச் செய்ய முடியவில்லை. மேலும் திடீர் எடை குறைப்பு சில கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம் மற்றும் மருத்துவர்கள் அதை அனுமதிப்பதில்லை. காயம் காரணமாக வினேஷ் விலகியிருந்தாலும் பதக்கத்தை காப்பாற்றியிருக்க முடியாது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பார். முதல் நாள் போட்டியின்போது அவர் காயமடையவில்லை. எனவே 2ம் நாள் எடை பதிவு செய்ய ஆஜராக வேண்டியிருந்தது.

* மேல்முறையீடு செய்ய முடியுமா?
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் சஞ்சய் சிங், வினேஷுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஐஓசிக்கு கடிதம் எழுதியுள்ளார். 6 முறை உலக சாம்பியனும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான அமெரிக்காவின் ஜோர்டான் பர்ரோஸ் கூட, வினேஷுக்கு வெள்ளி வழங்கவும், 2வது நாள் சலுகை வழங்கவும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

* முந்தைய தகுதிநீக்கம்
2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு முந்தைய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில், 400 கிராம் எடை அதிகமாக இருந்ததற்காக வினேஷ் ஒருமுறை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

The post ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் 2024: தலைவர்கள் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Olympic Festival Paris 2024 ,President ,Drarubathi Murmu ,Vinesh Bhog ,Paris Olympics ,Dinakaran ,
× RELATED ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் 2024: லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 கவுன்ட் டவுன் தொடங்கியது