ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் தகுதி நீக்கம்: வெறும் 100 கிராம் எடை கூடிவிட்டதாக காரணம் கூறியதால் அதிர்ச்சி

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியின் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவரது தகுதிநீக்கம் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (29) 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்றார். நேற்று முன்தினம் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நம்பர் 1 வீராங்கனை, 4 முறை உலக சாம்பியன், ஒலிம்பிக்கில் நடப்பு சாம்பியன் யூயி சுசாகியுடன் (ஜப்பான்) மோதினார். இதுவரை தோல்வியையே சந்திக்காத சூப்பர் ஸ்டார் வீராங்கனையான யூயி சுசாகிக்கு எதிராக வினேஷ் சாதிக்கும் வாய்ப்பே இல்லை என்பதே மல்யுத்த நிபுணர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால், அந்த கணிப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் களத்தில் அபாரமாக செயல்பட்ட வினேஷ் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி அசத்தினார்.

உலக அளவில் மல்யுத்த அரங்கில் அதிர்வலைகளை எழுப்பிய இந்த அதிர்ச்சி வெற்றியோடு நிற்கவில்லை போகத்தின் வெற்றிப் பயணம். அடுத்து காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை ஓக்சனா லிவாச்சுடன் மோதிய வினேஷ் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறினார். வினேஷ் பங்கேற்கும் 3வது ஒலிம்பிக் போட்டி இது. 2016ல் பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக், அடுத்து 2020 டோக்கியோ ஒலிம்பிக்சில் நழுவிய பதக்க வாய்ப்பை இந்த முறை தட்டித் தூக்குவார் என்ற எதிர்பார்ப்பு இன்னும் பலமடங்காக அதிகரித்தது. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில், அரையிறுதியில் கியூபாவின் யுஸ்னெய்லிஸ் கஸ்மன் லோபஸ் சவாலை சந்தித்த வினேஷ் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அமர்க்களமாக வென்று பைனலுக்கு முன்னேறியதுடன், இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்து சாதனை படைத்தார்.

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்த வெற்றியால் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியான நிலையில், பரபரப்பான இறுதிப் போட்டியிலும் வெற்றியை வசப்படுத்தி நடப்பு தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தருவார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இடியாய் இறங்கிய முடிவு: இந்த நிலையில், தங்கம்/வெள்ளிக்கான பைனல், வெண்கலப் பதக்கங்களுக்கான ‘ரெபஷாஜ்’ வாய்ப்பில் பங்கேற்க இருந்த வீராங்கனைகள் அனைவருக்கும் நேற்று காலை உடல் எடை பரிசோதனை நடைபெற்றது. தகுதிசுற்று மற்றும் பதக்க போட்டிகளுக்கு தனித்தனியே ஒரு நாள் முன்பாக உடல் எடை பரிசோதனை நடத்தப்படும். நேற்று காலை ஒலிம்பிக் நிர்வாகிகள் முன் நடந்த உடல் எடை பரிசோதனையில் 100 முதல் 150 கிராம் வரை வினேஷ் எடை அதிகமாக இருந்துள்ளது. இதனால், இறுதிப் போட்டியில் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்தது.

மேலும், நேற்று முன்தினம் அவர் பெற்ற வெற்றிகளும் ரத்து செய்யப்பட்டன. தங்கப் பதக்கத்துக்காக காத்திருந்த இந்திய ரசிகர்களின் இதயத்தில் இந்த தகவல் பேரிடியாக இறங்கியது. மகளிர் குத்துசண்டையில், ஆண் தன்மைக்கான குரோசோம்கள் அதிகம் இருப்பதாக உலக பாக்சிங் கூட்டமைப்பால் தடை செய்யப்பட்ட வீராங்கனையை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதித்துள்ளவர்கள்… வெறும் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததற்காக வினேஷ் போகத்தை தகுதிநீக்கம் செய்வதா என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும், கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன. முன்னாள் பாஜ எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன், இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து வெடித்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலையில் இருந்தார்.

இதன் பின்னணியில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏதேனும் சதி நடந்திருக்கும் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, சாப்பிடாமல் இரவு முழுவதும் தூங்காமல் உடற்பயிற்சி செய்தது உள்ளிட்ட காரணங்களால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு வினேஷ் போகத் மயக்கமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக இருந்தாலும், தாய்நாட்டுக்காக பதக்கம் வெல்ல முடியவில்லையே என்ற சோகத்தில் ஆழ்ந்துள்ளார். துரதிர்ஷ்டவசமான இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல துறைகளை சார்ந்த பிரபலங்கள், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் போகத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

The post ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் தகுதி நீக்கம்: வெறும் 100 கிராம் எடை கூடிவிட்டதாக காரணம் கூறியதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: