×

மரம் செடி கொடிகளை இப்பொழுது நாம் கண்ணால் கூட பார்க்க முடியவில்லையே? இறை சம்பிரதாயத்தில் விருட்ச தரிசனம் என்பார்களே சரியா?

வாஸ்தவம் தான். விருட்ச தரிசனம் வினைகளைப் போக்கும் என்பார்கள். ஆனால் நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து விட்டோம். நகரங்களில் எங்கு பார்த்தாலும் கான்கிரீட் கட்டிடங்களும் தண்ணீர் உள்ளே போக முடியாத தார் சாலைகளும்தான் இருக்கின்றன. வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. இது தவிர்க்க முடியாதது என்றாலும்கூட இபொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை நம்முடைய வீட்டின் பால்கனி போன்ற பகுதிகளிலோ சிறிய வீடாக இருந்தாலும் மாடியில் கிழக்குப் பகுதி களில் துளசிச்செடி மற்றும் சிறு கொடி தாவரங்கள் போன்றவற்றை வளர்க்கலாம். துளசி வில்வம் புஷ்ப செடிகள் இவற்றை பார்க்கும்போது நம்முடைய மனது தெளிவு பெறும் அது மட்டுமல்ல நம் வீட்டு மலர்களை நம் கையால் பறித்து இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்வது என்பது விலை கொடுத்து வாங்கும் மலர்களை விட சிறப்பான வழிபாடு. குறைந்தபட்சம் சுற்றுச் சுவரை ஒட்டி செவ்வரளிச் செடிகளைச் வளர்க்கலாம் அதற்கு பெரிய அளவில் இடம் தேவை கிடையாது.

ஏகாதசி கிருத்திகை முதலிய விரதங்களில் பட்டினி இருக்கிறோமே அதனால் என்ன பயன்?

– கார்த்திகா, திருச்சி.
விரதம் என்பது வைராக்கியமாக இருப்பதைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நாம் உறுதியோடு கடைப்பிடிப்பது விரதம். இன்னும் சொல்லப்போனால் விரதம் என்பதற்கு கொள்கை என்று ஒரு பொருள் உண்டு. ராமன், அடைக்கலமானவர்களை காப்பாற்றுவதை தன்னுடைய விரதம் என்று குறிப்பிடுகின்றார். (ததாதி ஏ தத் விரதம் மம) எனவே பகவானை நினைப்பது, அடைய முயற்சிப்பது போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி வழிபடுகின்ற முறைதான் விரதம். கடவுளைப் பற்றி நினைக்கின்ற பொழுது நமக்கு உணவு பற்றிய சிந்தனை வராது என்பதற்காக எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்கின்ற முறையை வைத்தார்கள். அதில் ஆரோக்கியத்தையும் இணைத்தார்கள். அதனால் இரண்டு பலன்கள் கிடைத்தன. ஒன்று உள்ளம் பலப்பட்டது. இரண்டு உணவு உண்ணாமல் ஒரு நாள் உபவாசம் இருந்ததால் உடலும் பலப்பட்டது. இதை விட வேறு என்ன பயன் வேண்டும்.?

தவறு செய்பவர்களைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?

– சதீஷ், சென்னை.
பொதுவாக எல்லோரும் உடனே அந்தத் தவறைச் சுட்டிக் காட்டுவார்கள் அறிவுரை கூறுவார்கள். அதெல்லாம் சரிதான். அதற்கு முன்னால் அந்தத் தவறு உங்களிடமும் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் முதலில் அந்த தவறை திருத்திக் கொள்ளுங்கள் என்றுதான் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

நாம் எந்த சூழ்நிலையில் மற்றவர்களிடம் ஆலோசனையும் அறிவுரையும் பெறுவது சரியாக இருக்கும்?

– மகேஷ், சிவகங்கை.
மற்ற சூழ்நிலையில் நாம் ஆலோசனை பெறுகிறோமோ இல்லையோ ஆனால் நிச்சயமாக இரண்டு நேரங்களில் நாம் கட்டாயம் மற்றவர்கள் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒன்று நாம் மிகப்பெரிய வெற்றி பெறும் பொழுது, இரண்டு மிகப்பெரிய தோல்வி அடையும் பொழுது.

நம்முடைய முதல் எதிரி யார்? நண்பன் யார்?

– ஜெயராம், கேரளா.
இரண்டும் நம்முடைய மனம்தான். அதனால் தான் பெரியவர்கள் மனதைப் பார்த்து ‘‘மனமே, என்னோடு ஒத்துழைக்க வேண்டும்’’ என்று பாடி யிருக்கின்றார்கள். “துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே, (என்னுடைய மனமே, இறைவனுடைய திருவடியை நீ வணங்க வேண்டும்) என்பது நம்மாழ்வார் பாசுரம். “நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே’’ என்பது ராமானுஜ நூற்றந்தாதி பாசுரம் இரண்டிலும் நெஞ்சை இணைத்துக் கொள்வதற்கு காரணம், நெஞ்சு ஒத்துழைத்தால் தான் எந்த விஷயத்திலும் முன்னேற முடியும். அது ஆன்மிக விஷயமாக இருந்தாலும் சரி.குழந்தைகள் கல்வி அறிவு பெற எந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்?அறிவு தெய்வம் ஹயக்ரீவரை வணங்கினால் சகல கலைகளும் பாகம்படும். சரஸ்வதி தேவியின் குருவாக ஹயக்ரீவரைச் சொல்வார்கள். காலையில் பூஜை அறையில் குழந்தைகள் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தங்கள் பாடத்தைப் படிக்கும் பொழுது, மனதில் நிற்கும். கல்வியில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அந்த ஸ்லோகம்:

ஞானானந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

இறந்த பிறகு என்ன நடக்கும்?

– உமாகாய்த்திரி, திருநெல்வேலி.
ஒருமுறை சுவாமி வேதாத்திரி
மகரிஷியிடம் ஒருவர் கேட்டார்.
‘‘செத்த பிறகு என்ன நடக்கிறது?’’
அப்பொழுது வேதாத்திரி மகரிஷி சிரித்துக்கொண்டே சொன்னார்.‘‘அந்த அனுபவம் இப்போது எனக்கு இல்லை. நான் செத்த பிறகு தானே எனக்குத் தெரியும். அந்த அனுபவம் வரும்போது அங்கே வாருங்கள். நீங்களும் கேளுங்கள். நானும் சொல்கிறேன்.’’ என்றாராம் செத்த பிறகு என்ன நடந்தால் என்ன? அது நமக்குத் தெரியவா போகிறது. எனவே அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. இருக்கும் போது நாம் சரியாக நடந்து கொள்கிறோமா என்பதுதான் நமக்கு முக்கியம்.

கம்பர் சடகோபர் அந்தாதி என்று ஒரு நூலை எழுதியிருப்பதாகச் சொல்கிறார்களே? சடகோபர் யார்?

– சரவணன், மயிலாடுதுறை.
நம்மாழ்வாருக்குச் சடகோபர் என்று பெயர். கம்பராமாயணத்தை எழுதி அரங்கேற்றம் செய்ய முயன்றபோது சில தடைகள் ஏற்பட்டன. அப்பொழுது பகவானே, ‘‘நம்மைப் பாடினாய், சரி, நம் சடகோபனைப் பாடினாயா?’’ என்று கேட்க, சடகோபராகிய நம்மாழ்வார் மீது அற்புதமான அந்தாதி இயற்றினார் அதை இயற்றி அரங்கேற்றிய பிறகுதான் கம்பனுடைய இராமாயணம் தடையில்லாமல் அரங்கேறியது. நம்மாழ்வாரின் பெருமையையும், அவர் இயற்றிய திருவாய்மொழியின் பெருமையையும் சொல்லும் அதி அற்புதமான நூல் இது. தென் தமிழத்தில் சில ஆலயங் களில் சடகோபர் அந்தாதி சேவிக்கும் வழக்கம் உண்டு.

கடவுளை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும்?

– பெருமாள், திண்டுக்கல்.
அவர் மகிழ்ச்சிக்கு நாம் செய்யக்கூடியது என்ன இருக்கிறது. அவர் சதா ஆனந்தமாகவே இருப்பார். நிலையான ஆனந்தம் தான் கடவுள். ஆயினும் சில விஷயங்களை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். உலகத்திலேயே கடவுளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல் பெற்றோர்களை மகிழ்விப்பது. அதை முறையாகச் செய்பவர்களின் வாழ்க்கையில் எந்தத் தொல்லையும் வருவதில்லை. மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோபவ என்பது தானே வேத வாக்கியம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அல்லவா? பெற்றோர்களை புறக்கணித்துவிட்டு செய்யும் தவத்தினாலோ தானத்தினாலோ பயன் இல்லை.

அஷ்டமச் சனி ஏழரைச் சனி போன்ற கஷ்ட காலங்களில் சனியை எப்படி வழிபடுவது? அதன் பாதிப்பிலிருந்து எப்படித் தப்பிப்பது?

– ஸ்ரீ ராம், பெங்களூர்
சனி என்பது வேகக் குறைவைக் குறிக்கும். சோம்பலைக் குறிக்கும். அவர் விந்தி விந்தி நடப்பதால் உடல் ஊனத்தைக் குறிக்கும். எனவே சனியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற பாதிப்பில் இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். கறுப்புநிறஆடை போர்வை கம்பளி தானம் செய்யுங்கள். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுங்கள். இவைகள் காலம் காலமாகச் செய்யப்படும் பரிகாரங்கள். ஆனால் இதற்கு மேல் கொண்டு நான் சொல்லுகின்றேன். இந்த காரியத்தை இன்றே முடித்தாக வேண்டும் என்று திட்டமிட்டு முடியுங்கள். நல்ல ஆலோசனைகளைக் கேட்டு காரியங்களை செய்யுங்கள். யாருக்கும் எந்த தீமையும் நினைக்காதீர்கள். இதைச் செய்தாலே பெரும்பாலும் சனிதோஷத்தில் இருந்து வெளியே வந்துவிடலாம். 

அருள்ஜோதி

 

The post மரம் செடி கொடிகளை இப்பொழுது நாம் கண்ணால் கூட பார்க்க முடியவில்லையே? இறை சம்பிரதாயத்தில் விருட்ச தரிசனம் என்பார்களே சரியா? appeared first on Dinakaran.

Tags : Vrutsha ,Vridsha ,Dinakaran ,
× RELATED ஹார்ன்பில்