நன்றி குங்குமம் டாக்டர்
உளவியல் ஆலோசனை எல்லோரும் வழங்கலாமா?
மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி
நீங்கள் நினைத்த மாத்திரத்தில் உடன்படாத திமிரும், செருக்கும், அன்பும், கருணையும் கொண்டதுதான் மனிதமனம். மனித மனத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பலரும் விரும்புகிறார்கள். விசில் திரைப்படத்தில் நடிகர் விவேக் ஒரு காமெடி சீன் வைத்திருப்பார். அதாவது மருமகள் மாமியார், ஒரு பெண் கோவிலில் வேண்டுவது போல் இருந்தாலும், அவர்கள் அனைவரும் மனசுக்குள் பேசுவது விவேக்கிற்கு மட்டும் கேட்கும். அந்த நேரங்களில் எல்லாம், விவேக்பயந்து போய், மனிதர்களின் வெளியே பேசும் பேச்சிற்கும், மனசுக்குள் பேசும் பேச்சிற்கும் இடையே உள்ள வித்தியாசமே தெரியாமல் இருப்பதே சிறந்தது என்பார். அதுதான் உண்மையும் கூட.
உண்மையில் அது எந்தளவிற்கு சரியாக இருக்கும் என்பது பற்றிய புரிதல் இல்லை என்றே தெரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால், இன்றைக்கு கவுன்சிலிங் என்பது மிகவும் பிரபலமான வார்த்தையாக வெகுஜன மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. உண்மையில் கவுன்சிலிங் என்பது என்ன? என்பதும், அதில் அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? என்பதை வைத்து அனைவராலும் எளிதாக கவுன்சிலிங் செய்ய முடியும் என்பது பலராலும் இன்றும் நம்பப்பட்டு வருகிறது. இந்தக் கூற்று உண்மையா என்றால், உண்மை தான்.
இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சில இக்கட்டான காலக்கட்டத்திலும் அல்லது மனக்குழப்பத்திலும் இருக்கும் நேரங்களில், மற்றொரு மனிதன் பேசும் வார்த்தைகளாலும், நேரம் செலவிட்டு அவர்களுடைய இருப்பை நிரூபிக்கும் போதும், பாதிக்கப்பட்ட நபருக்கு இம்மாதிரியான செயல்கள் பெரிய ஆறுதலைக் கொடுக்கும். சக மனிதனின் ஆறுதலும், அரவணைப்பும் கிடைக்கும் போது, அது தான் இந்த வாழ்க்கையின் மீது மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு சிறந்த உதாரணமாக ஒவ்வொரு நபருக்கும் முதல் கவுன்சிலர் அவர்களுடைய அம்மாவும், ஆசிரியரும்தான் பெரும்பாலும் இருப்பார்கள்.
இந்த இரண்டு பேரும், என்றைக்குமே குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். அது குழந்தைகளுக்கும் நன்றாக தெரியும். ஆனாலும், குழந்தைகளின் மனதில் இவர்களுக்கென்று ஒரு எல்லைக்கோடு வைத்து, அதற்கு மேல் அவர்கள், மனம் திறந்து பேச மாட்டார்கள். இந்த இடம் தான் மிக முக்கியமாக அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது. இங்கு நமக்கு நெருங்கிய வட்டத்தில், நாம் மனதார நம்பும் உறவுகள், நமக்கே நமக்காக வாழும் நபர்கள் என்று எத்தனை மனிதர்கள் சூழ இருந்தாலும், அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் மனம் விட்டு இயல்பாக, அவர்களின் பிம்பங்களை உடைத்து பேச யாரும் விரும்பமாட்டார்கள்.
அதனால் இங்குள்ள ஒவ்வொரு மனிதனும் கவுன்சிலர்தான். ஆனால் அந்த கவுன்சிலர் என்ற வார்த்தைக்கு ஒரு எல்லைக்கோடு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த எல்லைக்கோட்டிற்கு மேல் பேச முடியாத, நபர்களுக்கு கண்டிப்பாக மனநல மருத்துவர்கள் அல்லது மனநல நிபுணர்களின் உதவியை நாம் நாட வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.
மனிதர்களின் மனங்களை தெரிந்து கொள்வது என்பது மிகவும் சவாலானது. மனிதன் எந்தளவிற்கு மேன்மையானவன் என்பது உண்மையோ, அதற்கு நேரெதிராக மனிதன் கீழ்மையானவன் கூட. அதனால் தான், மனிதர்களின் ரகசியங்களை வெகுஜன மக்களால் தெரிந்து கொள்ளும் போது, அதை தண்டனைக்குரியதாக மட்டுமே பார்க்கிறார்கள். இதனால் தான், மனிதர்கள் ரகசியங்களை வெளிப்படையாக பேச பயப்படுகிறார்கள். உண்மையில், ஒவ்வொரு மனிதர்களின் மனதின் ரகசியங்களுக்குள் சென்று வருவது என்பது, குகையின் இருளுக்குள் சென்று ஒரு சிறு வெளிச்சத்தை ஏற்றுவது போலானது.
ஏனென்றால், இங்கு நாம் பிறந்தது முதல், நம் வீட்டிலிருந்து, நாம் படிக்கும் பள்ளிகளிலிருந்து, நாம் வேலை பார்க்கும் அலுவலகங்களிலிருந்து அனைத்திலும் ஒழுக்கம் என்ற வார்த்தைக்கு மிகவும் கட்டுப்பட்ட நபராக இருக்க வேண்டுமென்பதே எழுதப்படாத ஒரு சட்டமாக இருக்கிறது. அதற்கான மதிப்பை, ஒவ்வொரு மனிதனும், அவர்களது நடத்தை மூலம், அந்த ஒழுக்கத்தை ஓரளவிற்கு நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் மனித மனமோ குரங்கு போன்றது. இந்நேரத்தில் எதை யோசிக்கும், எந்த செயலைச் செய்யும், எந்த வார்த்தையை எந்த நேரம் மட்டுமரியாதை இல்லாமல் பேசும் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியாது.
சமூகம் விதித்திருக்கும் எந்த ஒழுக்கத்தை மனிதன் மீறுகின்றானோ, அப்போது அவன் வசிக்கும் வீடு, பள்ளி, அலுவலகம் அனைத்துமே தன்னுடைய பதற்றத்தையோ அல்லது அருவறுப்பையோ அல்லது வெறுப்பையோ வெளிப்படுத்தும். மனித மனதிற்கு என்றுமே எதைச் செய்ய வேண்டாம், எதை யோசிக்க வேண்டாம், எதை கற்றுக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறோமோ, அதைத்தான் செய்ய வேண்டுமென்று மனித மனம் விரும்பும். அதனால் தான், மனித எண்ணங்களை சரி செய்வதற்கு, தத்துவம் சார்ந்து எண்ணம் போல் வாழ்க்கை என்ற வரியைத் தொடர்ந்து கூறுகிறோம்.
ஏனென்றால், நம் சமூகத்தைப் பொறுத்தவரை இங்கு குடும்பமும், கலாச்சாரமும், சடங்கு, சம்பிரதாயங்களும் மிக முக்கியமானது. அதில் ஏதோ ஒரு எல்லைக் கோட்டை மீறினாலும், இங்கு மிகப்பெரிய துரோகமாக கருதப்படும். அதனால் தான், ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய ரகசியங்களை, அந்தரங்க விஷயங்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறார்கள். இங்கு ஒரு நபரின் மனதுக்குள் நடக்கும் எல்லை மீறல் எண்ணங்களால், அவர்கள் வசிக்கும் சூழலில் சிறு பிரச்சனை உருவானாலும், அந்த ஒரு நபருக்கும் மட்டும் கவுன்சிலிங் செய்ய முடியாது. அதை எதிர்கொள்ளும் அவர்கள் சூழலில் இருப்பவர்களும் கலந்து கொள்ளும் போது மட்டுமே, ஓரளவு பிரச்சனையை புரிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு மனிதனும், சக மனிதர்களின் மனதைப் புரிந்து கொள்ள எடுக்கும் முயற்சியானது, சமூகக் கட்டுப்பாடுகளால், கலாச்சார நம்பிக்கைகளால் நிறைந்து இருக்கும். ஒரு சில நேரங்களில் மனிதர்களின் மனசஞ்சலங்களை, சக மனிதன் தெரிந்து கொள்ளும் போது, அந்நேரத்தில் புரிந்து கொண்டு, அவர்களை சரி செய்ய முயற்சி செய்வார்கள். ஆனால் ஏதோ ஒரு நெருடல் இருக்கும் போது, தெரிந்து கொண்ட நபரால் இயல்பாக இருக்க முடியாது. அது இரு மனிதர்களின் நடத்தைகளிலும் மாற்றத்தை உருவாக்கும். இரு மனிதர்களின் நடத்தை மாற்றம் என்பது, ஒரு குடும்பத்தை கண்டிப்பாக பாதிக்கும்.
அதனால்தான் மனிதன் அன்றைய தினத்தில் இருந்து மனிதர்கள் செய்யும் பாவங்களை குறைப்பதற்கு தத்துவம், ஆன்மிகம், உளவியல் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். தத்துவ ரீதியாக சித்தர்களை மனதுக்குள் வைத்து தியானம் இருப்பதும், ஜனனம், மரணம் பற்றிய கொள்கைகளை இயற்கையுடன் கலந்து உயிர், உடல் என்று தனித்தனியாக சுத்தப்படுத்தவும் முயற்சி செய்வார்கள். ஆன்மீக ரீதியாக விரதங்கள், பரிகாரங்கள் இருந்து தங்களை சுத்தப்படுத்தும் முயற்சியிலும் இருப்பார்கள். இவை எல்லாம் போக, தற்போதைய நவீன சமூகத்தில் அறிவியல் ரீதியாக மனநல மருத்துவத் துறை சார்ந்து சிகிச்சை எடுக்க வருகிறார்கள்.
இங்கு ஒரே சமூகம், ஒரே கொள்கை என்றெல்லாம் கிடையாது. அப்படி இருக்கும் போது, எல்லாவித ஏற்றத் தாழ்வுகள் கடந்தும் அவரவர்க்கு தெரிந்த வகையில் ஓரளவு நேர்மையாக இருக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் எல்லா நேரமும் மனிதர்கள் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட நேரங்களில் சக மனிதர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், இங்கு சரி, தவறு அல்லது நீதி, தண்டனை இவற்றில் ஒன்று மட்டுமே கொடுக்க வேண்டுமென்பது நியதியாக இருக்கிறது. அதனால் மனிதன் மனத்தளவில் ஒழுக்க மீறலை ஏற்படுத்தும் போது, அவனுக்கு தண்டனை மட்டுமே கிடைக்க வேண்டுமென்று சொல்லும் மனிதர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது.
அந்த தண்டனையில் இருந்து தப்பிக்க தான், ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு காலகட்டத்தில், தங்களைத் தாங்களே மன்னிக்க, விதம் விதமான முறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு மனிதரையும் விரும்புகிறேன் என்று சொல்வதற்கு பலரும் இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு மனிதரையும் புரிந்து கொள்கிறேன் என்று சொல்வதற்கு விரல் விட்டு எண்ணுமளவிற்கு கூட மனிதர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதே சவாலாக இருக்கிறது. அதனால் சக மனிதனின் ரகசியங்களை புரிந்து கொள்வது என்பது, மற்றொரு மனிதனின் மனதையும் தொந்தரவுக்குள்ளாக்கும் விஷயம் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
எந்தவிதமான ஒழுக்க எல்லைக் கோட்டை மனித மனம் தாண்டினாலும், அவற்றை எல்லாம் மீறி, முறையாக கேட்டுப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு நடத்தை சார்ந்து என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைத் தான் உளவியல் மருத்துவம் செய்து கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகில் அல்ல, என்றைக்குமே கவுன்சிலிங் என்பது அனைவராலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை சரியானது அல்ல என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டாலே போதுமானது.
The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.