×

இந்தியாவுக்கு எதிரான கட்சிகள் வங்கதேசத்தில் ஒன்று கூடியதால் கடந்த கால சுமையை மீண்டும் சுமக்க வேண்டுமா..? ஒன்றிய அரசின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார நிபுணர் பேட்டி

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான கட்சிகள் வங்கதேசத்தில் ஒன்று கூடியதால், கடந்த கால சுமையை மீண்டும் சுமக்க வேண்டுமா? என்று வெளிவிவகார நிபுணர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் சூழல்கள் மாறியுள்ளதால், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் வங்கதேசத்தில் பெரும் அரசியல் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தில் சமீப காலமாக நடந்த கலவரம், ேஷக் ஹசீனா அரசின் வீழ்ச்சி ஆகியன, இந்தியாவிற்கு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? வங்கதேசத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பது குறித்து, வெளிவிவகார நிபுணரும், டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான ஹேப்பிமான் ஜேக்கப் அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசின் வீழ்ச்சியும், அதனால் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவை எந்த வகையில் பாதிக்கும்? வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவது உறுதி. அதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இந்தக் கலவரங்கள் நடைபெற்ற காலத்தில் வங்கதேசத்தில் உள்ள மற்ற அதிகார மையங்களுடன் இந்தியா எந்த விதமான தொடர்புகளையும் மேற்கொள்ளவில்லை. ஷேக் ஹசீனா தலைமையிலான அரசின் மீது மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தியது. எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியும், ஜமாத்-இ-இஸ்லாமியும் இந்தியாவுக்கு எதிரானவை என்பதால் அவர்களுடன் தொடர்பில் இல்லை.

இதற்கிடையில், ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நட்பாக இருப்பவர் என்பதால், அவர் நீண்ட காலம் ஆட்சியில் இருப்பார் என்றும், அவரது அரசு வீழாது என்றும் இந்தியா நம்பியது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை இந்தியாவின் எல்லை மாநிலங்களில், குறிப்பாக அசாம், மேற்குவங்கத்தில் விளைவுகளை ஏற்படுத்தும். ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட தீவிர இஸ்லாமிய அமைப்புகளின் இந்திய விரோத தாக்கம் நம்மை நிச்சயம் பாதிக்கும்.

வங்கதேசத்தில் இந்திய விரோத சக்திகள் இனிமேல் தலைதூக்கும். பொதுவாக வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு உணர்வு வலுவாக உள்ளது. தற்போது ஜமாத்தே இஸ்லாமி போன்றவர்கள் முன்னிலையில் இருப்பதால், அங்குள்ள சிறுபான்மையினர் பெரும் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். பொதுவாக, மத அடிப்படைவாதத்தின் எழுச்சி, சிறுபான்மையினர் இந்தியக் குடிமக்களாக இல்லாவிட்டாலும் அவர்கள் மீதான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும். அதனை இந்தியா எதிர்கொள்ளும்.

மேலும் வங்கதேசத்தின் மீது சீனா ஆதிக்கும் அதிகமாகும் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் சீனாவும் ஹசீனாவை வளர்த்தது. ஆனால் வங்கதேசத்தில் சீனாவுக்கு எதிரான சூழல் இல்லை. இந்திய எதிர்ப்பு தான் வலிமையாக உள்ளது. இதற்கு காரணம், வங்கதேசத்திற்கும் சீனாவுக்கும் இடையே மத, மொழி, இன உறவுகள் இல்லை. ஆனால் மேற்கூறிய அனைத்து காரணிகளாலும் இந்தியா – வங்கதேசத்துடன் தொடர்புடையதாக உள்ளன. புவிசார் அரசியல் நெருக்கடியுடன், மத மற்றும் இன சவாலையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்திய எல்லை மாநிலங்களில் குடியேறியவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை இந்தியா எடுப்பதாலும், அவர்களை சந்தேகத்துடன் பார்ப்பதாலும், அந்நாட்டில் இந்திய எதிர்ப்பு உணர்வு அதிகமாக உள்ளது.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதால் வங்கதேசத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
தெற்காசியாவில் வளர்ந்து வரும் நாடாக வங்கதேசம் உள்ளது. எதற்கும் உதவாத, பொருளாதார ரீதியாக உடைந்த நாடு என்று ஹென்றி கிஸ்ஸிங்கரால் எழுதப்பட்ட வங்கதேசம், தெற்காசியாவில் முக்கிய நாடாக வளர்ந்துள்ளது. பொருளாதார குறிகாட்டிகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அவர்களின் தனிநபர் வருமானம் இந்தியாவை விட மிக அதிகம். இவையெல்லாம் வங்கதேசத்தை முன்னோக்கி கொண்டு சென்றது. இனியும் அவ்வாறு நடக்கும் என்று சொல்ல முடியாது.

ராணுவ ஆட்சியையும், இடைக்கால அரசையும் கடந்து தேர்தல் மூலம் புதிய ஜனநாயக அரசு ஆட்சிக்கு வந்தால்தான் வங்கதேசம் இயல்பு நிலைக்குத் திரும்பும். இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி அமலில் உள்ளது. வங்கதேசத்திலும் அவ்வாறு நடந்தால், அடுத்ததாக இன்னொரு முறை ஜனநாயகம் சீர்குலைவதைக் காணமுடியும்.

வங்கதேச மாணவர் போராட்டத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
ஷேக் ஹசீனாவின் ஆட்சியை மாணவர்கள் சர்வாதிகார ஆட்சியாக பார்த்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டதில் இருந்தே தெரிகிறது. ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. வாளை எடுத்தவன், வாளால் கொல்லப்படுவான் என்பது போலத்தான் ஹசீனாவின் நிலையும். ஆனால் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியது, வங்கதேசத்திற்கு நல்ல காலமாக இருக்காது. வங்கதேசத்தில் நடக்கும் போராட்டங்கள், அந்த நாட்டை அதன் அனைத்து பிரச்னைகளிலிருந்தும் விடுவிக்காது.

தடை செய்யப்பட்ட சில அமைப்புகளின் ஆதரவு பெற்ற ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற கட்சிகள் வங்கதேசத்தை ஆட்சி செய்தால், அந்த நாடு மோசமான நிலைக்கு தள்ளப்படும். ஆனால் வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமையும் என்று கூறியுள்ளனர். எனவே விஷயங்கள் முற்றிலும் மோசமாக இருக்கும் என்று கருத முடியாது. ஆனால் இவை அனைத்தும் ராணுவத்தின் அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்தே அமையும்.

முகமது யூனுஸ், ராணுவம் ஒருபுறம், பிஎன்பி, ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மறுபுறமும் இணைந்து சுதந்திரமான முடிவை எடுக்க முடியுமா?
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முகமது யூனுசை ஆதரித்தாலும், ராணுவம் எல்லாவற்றையும் விட பலமாக உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமியைப் பொறுத்தவரை முகமது யூனுசை பெரிய மனிதராக்க உடன்பட மாட்டார்கள். எனவே வரும் நாட்களில் வங்கதேசத்தில் அதிகாரப் போட்டி ஏற்படும். ஒரு பக்கம் ராணுவம், மறுபுறம் பிஎன்பி, மறுபுறம் ஜமாத்-இ-இஸ்லாமி. அவர்களில் யாரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. எனவே வங்கதேசத்தை முன்னெடுத்து செல்வது பெரும் சவாலாக இருக்கும்.

வங்கதேச நெருக்கடியை இந்தியா எப்படி சமாளிக்கும்?
இந்தியாவுக்கு இப்போதைய ஆலோசனை என்னனென்றால், வங்கதேசத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஒருங்கிணைய வேண்டும். ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் யாரும் நிரந்தர எதிரி இல்லை. ஷேக் ஹசீனா போய்விட்டார். கடந்த கால சுமையை மீண்டும் இந்திய அரசு சுமக்கக் கூடாது. மனித உரிமை மீறல்கள் குறித்து சிவில் சமூகம் விவாதிக்கும். அரசின் பணி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த விஷயத்தில், ஒன்றிய அரசின் பணி என்னவென்றால், இந்தியாவிற்கு பாதுகாப்பான வங்கதேசத்தை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் நடந்ததை மறந்துவிட்டு, எதிர்காலத்தில் இந்தியா பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்பு கொள்ள வேண்டும். வங்கதேசத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கு எதிராக தீங்கு விளைவிக்கும் வகையில் பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இன்றைய நிலையில் இந்தியாவை சுற்றியுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகள் சவாலாக உள்ளன. அந்த பட்டியலில் வங்கதேசமும் வரப்போகிறது. இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்நிய நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவது தான் ராஜதந்திரமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனாவின் ஆட்சியை மாணவர்கள் சர்வாதிகார ஆட்சியாக பார்த்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டதில் இருந்தே தெரிகிறது. ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. வாளை எடுத்தவன், வாளால் கொல்லப்படுவான் என்பது போலத்தான் ஹசீனாவின் நிலையும்.

The post இந்தியாவுக்கு எதிரான கட்சிகள் வங்கதேசத்தில் ஒன்று கூடியதால் கடந்த கால சுமையை மீண்டும் சுமக்க வேண்டுமா..? ஒன்றிய அரசின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார நிபுணர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Union ,NEW DELHI ,India ,Sheikh ,EU government ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை...