×

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கிராமங்கள் மட்டுமின்றி, அதன் அருகே இருந்த அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் நிலச்சரிவால் உருக்குலைந்து போனது.

நிலச்சரிவின் கோரதாண்டவத்தால் வீடுகள், சாலைகள், வாகனங்கள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் கிராம மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போனார்கள். நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மண்ணில் புதைந்தவர்கள், காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இன்னும் 180 பேரை காணவில்லை. சூரல்மலை கிராமம் மற்றும் முண்டக்கை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த வாரம் நேரில் சென்று ஆய்வு செய்தார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு குறித்து ராகுல் காந்தி மக்களவையில் பேசியதாவது, பாதிப்புகள், இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை எதிர்பார்க்கிறோம்.

கொள்கைகளை தள்ளிவைத்துவிட்டு அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டது ஆறுதலான விஷயம். வயநாட்டிற்கு சென்று அங்குள்ள மோசமான நிலைமையை எங்கள் கண்களால் பார்த்தோம். 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், ராணுவம், கடற்படை, விமானப்படை, தீயணைப்புத் துறை மற்றும் அண்டை மாநிலங்களாக கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்டவைகளின் உதவிகளை நான் பாராட்ட விரும்புகிறேன்.

சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் மீட்புப் பணிக்கு உதவி செய்தனர். வயநாட்டில் பேரிடரை தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்கவும், மக்களின் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கவும் நிதியுதவியை விடுவிக்குமாறும் கேட்டு கொள்கிறேன். மேலும், வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் இவ்வாறு தெரிவித்தார்.

The post வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Rahul Gandhi ,Lok Sabha ,Delhi ,Wayanadu ,Mundakka ,Suralmalai ,Meppadi ,Kerala ,Dinakaran ,
× RELATED ஆணவ அரசின் அவமதிப்பு: ராகுல்காந்தி