பெரம்பலூர் : தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கினால் பெரம்பூர் மாவட்டத்தில் உள்ள 3,300 மாணவர்கள் பயன்பெற வாய்ப்புள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 3300 மாணவர்கள் பயன்பெறவுள்ள, தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழாவை சிறப்பாக நடத்து தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பெரம்பலூரில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவினை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமை வகித்து பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ஒரு முன்னோடி திட்டமான தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தை வருகிற 9ம்தேதி கோவையில் தொடங்கிவைக்க உள்ளார். அன்றே தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்தத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் 32 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3,300 மாணவர்கள் பயன்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான மாணவர்களுக்கு முறையாக இத்திட்டம் சென்று சேருகிறதா என்பதை கல்லூரி நிர்வாகத்தினர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
நடைபெற உள்ள வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் அமர்வதற்கான போதிய இருக்கைகள், குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதை அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைக்க உள்ள நிகழ்ச்சி யின் நேரலையை அனைத்து கல்லூரிகளிலும் ஒளிபரப்பு மேற்கொள்வதற்கு கல்லூரி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள தகுதியுடைய மாணவர்களில் வங்கி கணக்கு இல்லாதவர்க ளுக்கு வங்கிக்கணக்கு தொடங்குதல், வங்கி கணக்கு புதுப்பித்தல், வங்கி கணக்குடன் ஆதார் இணைத்தல் உள்ளிட்ட பணிகளை வங்கி மேலாளர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், பெரம்பலூர் சப். கலெக்டர் கோகுல், மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், மாவட்டசமூகநல அலுவலர் ஜெய, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் 3,300 மாணவர்கள் பயன்பெறும் தமிழ் புதல்வன் திட்டம் 9ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.