×

வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு அரசியல் செய்கிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு அரசியல் செய்கிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 9 நாள் ஆனது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெயில், மழை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்தப் பகுதிகளில் தினமும் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை கிடைத்த உடல்களின் எண்ணிக்கை 410ஐ தாண்டி விட்டது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களது உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே நிலச்சரிவு அபாயம் நிறைந்த வயநாட்டு பகுதியில் சட்டவிரோதமாக கேரள அரசு குடியேற்றம் செய்ததாக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் விமர்சனம் வைத்திருந்தார். இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்பொழுது கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. கேரளாவின் மலைப் பகுதியைப் பற்றி சிறிதளவு அறிவும், புரிதலும் உள்ளவர்கள் கூட அங்கு வசிக்கும் மக்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூற மாட்டார்கள்.

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள அரசுக்கு எதிராக கட்டுரைகளை எழுதுமாறு, ஒன்றிய அரசு விஞ்ஞானிகளை நிர்ப்பந்தம் செய்வதாக தகவல் வெளியாகின்றன. வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு அரசியல் செய்கிறது. முண்டக்கை பகுதியில் சட்டவிரோத கனிம சுரங்கங்கள் இல்லாத நிலையில், அரசியல் நோக்கில் அங்கு பல கனிம சுரங்கள் செயல்படுவதாக செய்திகள் பரப்பப்படுகின்றன என்று கூறினார்.

 

The post வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு அரசியல் செய்கிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன் appeared first on Dinakaran.

Tags : EU Government ,Wayanadu ,Kerala ,PM ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Chief Minister ,Kerala State ,Wayanadu District Suralmala ,Mundakka ,Punjrimatam ,Atamale ,
× RELATED கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு...