சிவகங்கை, ஆக. 7: சிவகங்கை நகராட்சி குப்பைகளை முந்தைய இடத்திலேயே கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினந்தோறும் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மானாமதுரை சாலையில் உள்ள சுந்தரநடப்பு கிராம எல்லையில் கொட்டி வந்தனர். இங்கு குப்பை கொட்டி வருவதற்கு அவ்வப்போது கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கண்மாய் மற்றும் ஆழ்குழாய் நீரில் கழிவுகள் கலப்பதால் தொற்றுநோய் ஏற்பட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக கூறி இங்கு நகராட்சி குப்பைகளை கொட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதனால் பல ஆண்டுகளாக இங்கு குப்பை கொட்டப்படுவதில்லை. குப்பை கொட்டுவதற்கான மாற்று இடம் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை.
இதனால் நகர்ப்பகுதியிலேயே பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளால் துர்நாற்றம் ஏற்படுவது, சுகாதாரக்கேடு, குப்பைகளுக்கு தீ வைப்பது என அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில் சுந்தரநடப்பு கிராம எல்லை பகுதியிலேயே குப்பை கொட்டி தரம் பிரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிவகங்கையில் நகராட்சி குப்பைகளை கொட்ட இடப்பிரச்னைக்கு தீர்வு: நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.