×

வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த ஹசீனாவுக்கு அடைக்கலம் தர இங்கிலாந்து மறுப்பு: மேலும் சில நாள் இந்தியாவில் தங்க வாய்ப்பு

புதுடெல்லி: வங்கதேசத்தில் இருந்து தப்பி வந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது சகோதரி ஷேக் ரெஹனாவுடன் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். டெல்லியில் இருந்து அவர்கள் இங்கிலாந்துக்கு அடைக்கலம் தேடிச் செல்ல திட்டமிட்டிருந்தனர். ரெஹனாவின் மகள் துலிப் சித்திக் இங்கிலாந்தில் நாடாளுமன்ற ஆளுங்கட்சி எம்பியாக உள்ளார். ஆனால், இதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அளித்த பேட்டியில், ‘‘வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

அங்கு நடந்த சம்பவங்கள் ஐநா தலைமையிலான முழுமையாக, சுதந்திரமான விசாரணைக்கு தகுதியானது’’ என்றார். இங்கிலாந்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘இங்கிலாந்து வந்த பிறகு யாரும் அடைக்கலம் வேண்டுமென கேட்க முடியாது. அதே போல, அடைக்கலம் அல்லது தற்காலிக அகதியாக இருக்க கோரிக்கை விடுப்பதற்காக இங்கிலாந்துக்கு பயணிக்க யாருக்கும் அனுமதி தருவதற்கான சட்ட விதிகள் எதுவும் இல்லை.

சர்வதேச பாதுகாப்பை வேண்டுவோர், அவர்கள் விரைவாக எந்த நாட்டிற்கு செல்ல முடியுமோ அங்குதான் முதலில் அடைக்கலம் கேட்க வேண்டுமென சர்வதேச விதிமுறைகள் இருக்கின்றன’’ என்றனர். ஹசீனாவின் சகோதரி மகள் தற்போது எம்பியாக இருப்பதால் ஹசீனாவுக்கு அடைக்கலம் தருவது அரசியல் ரீதியாக ஆளுங்கட்சிக்கு சிக்கல் ஏற்படும் என இங்கிலாந்து அரசு தயங்குகிறது. இதன் காரணமாக மேலும் சில நாட்கள் ஹசீனா இந்தியாவில் தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஹசீனா இந்திய அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளார். மேலும், பின்லாந்தில் அடைக்கலம் தேடிச் செல்லலாமா என்பது குறித்தும் ஹசீனா யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

The post வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த ஹசீனாவுக்கு அடைக்கலம் தர இங்கிலாந்து மறுப்பு: மேலும் சில நாள் இந்தியாவில் தங்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : UK ,Hasina ,Bangladesh ,India ,New Delhi ,Former ,Sheikh Hasina ,Sheikh Rehana ,Delhi ,England ,Rehana ,Tulip Siddique ,
× RELATED ஹசீனாவை நாடு கடத்த நடவடிக்கை: வங்கதேசம் அறிவிப்பு