×

வங்கதேச விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு: அனைத்து கட்சி கூட்டத்தில் உறுதி

புதுடெல்லி: வங்கதேச விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் உறுதி அளித்துள்ளன. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்தது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வங்கதேச நிலவரம் குறித்தும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச ராணுவ தளபதியிடம் இந்தியா பேசியிருப்பது குறித்தும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் எம்பிக்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது ராகுல் காந்தி, ‘‘வங்கதேச வன்முறையில் வெளிநாட்டு அரசுகள், குறிப்பாக பாகிஸ்தானின் கைவரிசை இருக்கிறதா?’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘வங்கதேசத்தின் அமைதியின்மையில் அந்நிய சக்திகளின் பங்கை மறுப்பதற்கில்லை.

அங்குள்ள சிறுபான்மையினரின் வீடுகள், சொத்துக்கள் போராட்டக்காரர்களால் நொறுக்கப்பட்டுள்ளன. ஷேக் ஹசீனா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எனவே அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து தெரிவிக்க இந்திய அரசு அவகாசம் வழங்கி உள்ளது’’ என்றார். இதைத் தொடர்ந்து, வங்கதேச விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு தருவதாக ராகுல் உள்ளிட்ட எம்பிக்கள் வாக்குறுதி அளித்தனர்.

அதன் பின் மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளிலும் வங்கதேச நிலவரம் குறித்தும், அங்குள்ள இந்தியர்கள் குறித்தும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை சமர்பித்து பேசினார். அப்போது, வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நிலைமையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள தூதரகம் மூலமாக இந்தியர்களுடன் நெருக்கமான தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வங்கதேசத்தில் 19,000 இந்தியர்களில் 9,000 பேர் மாணவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் கடந்த மாதமே நாடு திரும்பிவிட்டதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

The post வங்கதேச விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு: அனைத்து கட்சி கூட்டத்தில் உறுதி appeared first on Dinakaran.

Tags : Union government ,Bangladesh ,New Delhi ,Sheikh Hasina ,India ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை...