×

காரில் கடத்திய ரூ.60 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 8 செல்போன்கள், ஆயுதங்களுடன் 3 பேர் கைது

களக்காடு: நாங்குநேரி அருகே காரில் ரூ.60 லட்சம் கள்ளநோட்டுகளை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே மூன்றடைப்பு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஒரு பொலிரோ காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிலிருந்த 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர்.

இதில் காரில் ஒரு பெட்டியில் ரூ.60 லட்சம் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதைநாச்சியார்புரம் விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார், 8 செல்போன்கள், 1 அரிவாள், 1 கத்தி மேலும் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 20ஐ கைப்பற்றினர்.

இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பல்வேறு இடங்களில் ஏஜென்ட்கள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கும்பலுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் கிடைத்தது எப்படி? தமிழகம் முழுவதும் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரில் கடத்திய ரூ.60 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 8 செல்போன்கள், ஆயுதங்களுடன் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalakkad ,Nanguneri ,Nella district ,Nagarko ,Dinakaran ,
× RELATED களக்காட்டில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு