×

மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்ட கிராம மக்கள் ஒருதரப்பினர் எதிர்ப்பால் போலீஸ் குவிப்பு தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர்

தண்டராம்பட்டு, ஆக.7: தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் மாரியம்மன் கோயிலில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அகரம்பள்ளிப்பட்டு ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காலம்காலமாக வழிபட்டு வந்த தொண்டமானூர் கிராம மக்கள் பிரிந்து சென்று, தென்பெண்ணை ஆற்றின் வலது கரையில் கடந்த 2004ம் ஆண்டு புதிதாக மாரியம்மன் கோயிலை கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 3வது செவ்வாய்க்கிழமையும் ஒரு சமூகத்தினர் இந்த கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டு செல்கின்றனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இரவு வீதியுலா வரும் அம்மன் அந்த சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஒரு சமூகத்தினர் ஆடி மாதம் 3வது செவ்வாய்க்கிழமை இரவு உலா வரும் அம்மன் தேரானது தங்களது பகுதிக்கும் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தார் நடராஜனிடம் மனு அளித்தனர். அதன்பேரில், கடந்த மாதம் 29ம் தேதி தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினருடன் அமைதி கூட்டம் நடந்தது. அப்போது, இருதரப்பினரும் கூறிய கருத்துக்கள் திருவண்ணாமலை ஆர்டிஓவிடம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக தொண்டமானூர் மாரியம்மன் கோயிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் அலுவலர்கள் கடந்த 4ம் தேதி கொண்டு வந்தனர். இந்நிலையில், ஆடி 3ம் செவ்வாய்க்கிழமையான நேற்று மாலை ஒரு சமூகத்தினர், எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதி வழியாக அம்மன் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டு சென்றனர். இதனை ஆர்டிஓ மந்தாகினி கண்காணித்தார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்பி கூடுதல் பொறுப்பு ஆல்பர்ட் ஜான், ஏடிஎஸ்பி சவுந்தர்ராஜன், தாசில்தார் நடராஜன், டிஎஸ்பி முருகன் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

The post மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்ட கிராம மக்கள் ஒருதரப்பினர் எதிர்ப்பால் போலீஸ் குவிப்பு தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் appeared first on Dinakaran.

Tags : Mariyamman temple ,Thondamanur ,Thandarampatu ,Thondamanur Mariamman temple ,Goddess ,Amman ,Agarampallipattu Panchayat, Thiruvannamalai District ,Pongal ,Mariamman temple ,Dinakaran ,
× RELATED கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு