வேலூர், ஆக.7: அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்து பிளஸ்2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ₹5 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதால் அவர்களின் வங்கி விவரங்கள் சேரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், தங்கள் படிப்பு முடிந்து உயர் கல்வி பயிலச்செல்லும்போது இடைநிற்றலை தவிர்க்க தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2011-12ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ், 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தம் ₹5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த கல்வியாண்டில் 2022-2023 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, தகுதிபெற்ற மாணவ, மாணவிகளின் விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டன. அதில் கணிசமான மாணவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் நிதியுவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10, 11 வகுப்பு பயின்று 12ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ₹5000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு என 2022-2023ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிைலை, மேல்நிலை பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள 5 லட்சத்து 16 ஆயிரத்து 135 மொத்த மாணவர்களில் முதற்கட்டமாக 4 லட்சத்து 64 ஆயிரத்து 684 மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி பெயர், பள்ளியின் ஐடி, மாணவரின் எமிஸ் எண், வங்கியின் பெயர், வங்கியின் ஐஎப்எஸ்சி கோர்டு எண், மாணவனின் வங்கி விவரங்கள் எமிஸ் இணையதளத்திலிருந்து பெறப்பட்டு டிஎன்பிஎப்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது எமிஸ் இணையதளத்திலிருந்து பெறப்பட்டுள்ள 4,64,684 மாணவர்களின் விவரங்களில் வெறும் 59, 283 மாணவர்களின் விவரங்கள் மட்டுமே சரியாக உள்ளதாகவும், மீதமுள்ள 4,05,401 மாணவர்களின் வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் தவறுதலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களினை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் அவசரம் என்பதால் இப்போருள் குறித்து தனிக்கவனம் செலுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post பிளஸ்2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கி விவரங்கள் சேகரிப்பு ₹5 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் appeared first on Dinakaran.