×

இலங்கையுடன் இன்று கடைசி ஒருநாள்: தொடரை சமன் செய்யுமா இந்தியா?

கொழும்பு: இலங்கை – இந்தியா மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. சூரியகுமார் தலைமையிலான அணி டி20 தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. தொடர்ந்து ரோகித் தலைமையில் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்தியா, முதல் போட்டியை சரிசமனில் முடித்தது (‘டை’). 2வது போட்டியில் இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன் குவித்த நிலையில், இந்தியா 42.2 ஓவரில் 208 ரன்னுக்கு சுருண்டது. ரோகித் – கில் இணைந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் அணிவகுப்பது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஆல் ரவுண்டர்கள் அக்சர், வாஷிங்டன் போராடினாலும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக, வாண்டர்சே – அசலங்கா சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். வாண்டர்சே 10 ஓவரில் 33 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்தியது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடக்கிறது. 2-0 என தொடரைக் கைப்பற்ற இலங்கை அணியும், 1-1 என தொடரை சமன் செய்ய இந்தியாவும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

The post இலங்கையுடன் இன்று கடைசி ஒருநாள்: தொடரை சமன் செய்யுமா இந்தியா? appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,India ,Colombo ,Suryakumar ,Dinakaran ,
× RELATED பொருளாதார நெருக்கடியில் இருந்து...