×

தனக்குப் பிடித்ததை பெண்ணால் செய்ய முடியணும்!

நன்றி குங்குமம் தோழி

பார்த்ததும் பளிச்சென்ற புன்னகையில், தன் பெர்சனாலிட்டியை இன் அண்ட் அரவுண்ட் சுயமாய் செதுக்கிய பெண்ணாய் வலம் வருகிறார் சுபா பாண்டியன். அவரின் ஒற்றைப் புன்னகை நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும். சுபாவின் மின்னல் புன்னகை மந்திரத்தை அறிய முனைந்தபோது…“ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷத்தையும் நானே எனக்காக செதுக்குனதுடா” என்கிற அஜீத் பட வசனம்தான் என் வாழ்க்கை. நூறு சதவிகிதமும் சுதந்திரமாய் வாழ்கிறேன். இந்த சுதந்திரம் வழியே எனக்கான கடமைகள் இருக்கு. இந்த இடத்திற்கு நான் வந்தது மாதிரியான விஷயங்களை எல்லா பெண்களுக்கும் கொடுக்க நினைத்து ‘அகுவா(AGUA) வுமன் லீடர்ஷிப் பிரைவேட் லிமிட்டெட்’ என்கிற கார்ப்பரேட் நிறுவனத்தையும், ‘அகுவா வுமன் ஃபவுண்டேஷன்’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தையும் தொடங்கி இரண்டுக்குமான நிறுவனராக செயல்படுகிறேன்” என்றவர் மேலே பேச ஆரம்பித்தார்.

‘‘இது முடியாது என பெண்கள் நினைப்பதற்கும், முடியும் என நினைப்பதற்கும் மெல்லிய கோடுதான் வித்தியாசம். அந்தக் கோட்டை அழிக்க எடுக்கும் முடிவுகளே வெற்றியை நோக்கி இழுக்கும். நானே அதற்கு சாட்சி’’ எனத் தன் கதையை பேச ஆரம்பித்தார் சுபா பாண்டியன். ‘‘பெற்றோர்தான் உலகமே என்று வளர்ந்த அக்மார்க் மதுரை பொண்ணு நான். என் விருப்பம் ஆசிரியர் பணி. +2 முடித்ததும், “பொண்ணை ஏன் படிக்க வைக்கிற? வேலைக்கு அனுப்பணுமா? கருப்பா இருக்கா… சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணிவை”… இப்படித்தான் சுற்றி இருந்தவர்கள் அப்பாவை உசுப்பேற்றினார்கள். எனது குடும்பங்களில் பத்தாவது முடித்ததுமே பெண்களைத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.

அப்பா ராணுவத்தில் இருந்ததால், என்னைப் படிக்க வைக்க ஆர்வம் காட்டினார். குறிப்பாக திருமணப் பத்திரிகையில் போடுவதற்கான சம்பிரதாயமாக அது இருந்தது. என்னைக் கல்லூரியில் படிக்க வைத்தது எனக்கு மட்டுமே கிடைத்த போனஸ். என் குடும்பத்தின் முதல் பட்டதாரியாகவும், படிச்சு முடிச்சு வேலைக்குப் போகிற பெண்ணாகவும் நானே இருந்தேன்.

வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கியது. 90களில் பெண்கள் திருமணம் குறித்து வெளிப்படையாய் பேசிவிட முடியாது. காலையில் பார்த்து மாலையில் முடிவு செய்த திருமணமாக எனக்கு அமைந்தது. தாலி கட்டும் போதுதான் அவர் முகத்தைப் பார்க்கிறேன். அவரை மட்டுமே நம்பி பெங்களூர் செல்கிறேன். எதிர்பாராத பிரச்னைகள் அவருடன் எனக்குத் தொடர, இந்த நிலையில் தாய்மை அடைந்து என் மகளும் பிறந்தாள். வாழவும், வாடகை கொடுக்கவும் பணம் இல்லை என்கிற நிலையில், பெற்றோர் போட்ட நகைகளை முற்றிலுமாக இழந்து, பெற்றோரிடம் இது குறித்தெல்லாம் சொல்லாமலே, என் மகளை அவர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குப் போக முடிவெடுத்த நிலையில், என் பெற்றோர் சென்னையில் அப்போது வசித்ததால், சென்னை நோக்கி அவருடன் குடும்பமாய் நகர்கிறேன்.

சென்னை சுத்தமாய் எனக்குப் புரிபடவில்லை. அப்போது எனக்கு ஆங்கிலமும் சரளமாய் பேச வராது. வேலை தேடி தினம் தினம் பல்வேறு நிறுவனப் படிகளில் ஏறி இறங்கியதில், ஒரே வாரத்தில் கால்சென்டர் பணி கிடைத்தது. இந்த நிலையில் எனக்கும் அவருக்குமாக நடந்த பல்வேறு பிரச்னைகள் என்னைத் தாண்டி என் பெண்ணையும் பாதிப்பதை தாமதமாக உணர்ந்தேன். என் மகளுக்கு அப்போது 4 வயது. விளைவு தூக்கத்தில் நடக்கும் பிரச்னை அவளுக்கு வர ஆரம்பித்தது. மருத்துவரிடம் அழைத்துச் சென்றதில், வீட்டில் நடக்கும் பிரச்னை குழந்தையை பாதிக்கிறது. முதலில் வீட்டை சரி செய்யுங்கள் என அறிவுறுத்தினார்.

எது நம்மை கட்டுப்படுத்துகிறது என்பதை நாம் உணர்ந்தால் தானே நாம் கட்டுடைத்து வெளிவர முடியும்? நான் பிறந்து வளர்ந்தது மதுரையில் ஒரு பின்தங்கிய பகுதி. சமூகக் கட்டமைப்பு… குடும்பச் சூழல்… இவற்றையெல்லாம் உதறிவிட்டு ஒரு பெண் வெளியில் வருவது அத்தனை சுலபமில்லை. எப்பொழுதுமே மற்றவரின் அளவுகோலில் நம்மை நாம் எடை போடுகிறோம்? ஒரு இலக்கணத்திற்குள் நம்மை புகுத்த சதா முயன்று கொண்டேயிருக்கிறோம்.

நம் வளர்ப்பு, நம் சமூகத்தின் பார்வை, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் எதிர்பார்ப்பு, இவற்றை வைத்தே வருடங்களை கடத்திக் கொண்டிருக்கிறோம்’’ என்ற சுபா, ‘‘நிறைய நிறைய யோசித்து, என் மகளுக்காக தெளிவான முடிவைத் தீர்க்கமாய் எடுத்தேன். இனியும் சமூகம், அம்மா, அப்பா, சொந்தம் இவற்றைப் பார்த்தால் சரியாக வராது. அவரைப் பிரியும் முடிவை ஒரே இரவில் உறுதியாய் எடுத்து, தெளிவான சுபாவாக காலை படுக்கையை விட்டு எழுந்தேன். அன்றிலிருந்து என் வாழ்க்கையில் போராட்டங்களுக்கு நடுவே பல மேஜிக்குகளும் நிகழத் தொடங்கியது.

கால் சென்டரைத் தொடர்ந்து, 2005ல் பனிரெண்டாயிரம் சம்பளத்தில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வாய்ப்புக் கிடைத்தது. நான் சிறப்பாய் பணியாற்றுவதாக, அடுத்த லெவல் குவாலிட்டி செக் பணி எனக்கு வழங்கப்பட்டது. பணியாற்றிக் கொண்டே, கம்ப்யூட்டர் தொடர்பான ஒரு சில கணினி சான்றிதழ் படிப்புகளை படிக்க ஆரம்பிக்கிறேன். என் வருமானத்தில் பாதி படிப்பிற்கே கரைந்தது. கிட்டதட்ட இந்தியாவிலும், வெளிநாடுகளிலுமாகச் சேர்த்து 16 சான்றிதழ் படிப்புகளை முடித்து கைகளில் வைத்திருந்தேன். ஆங்கிலத்தையும் நுனி நாக்கில் சரளமாக வர வைத்தேன். வாய்ப்புகளை விடாமல் கெட்டியாய் பிடித்து மேலே வருவதற்கான அத்துனை முயற்சிகளையும் செய்ததில், அடுத்தடுத்து பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் குவாலிட்டி செக் பிரிவின் உயர் அதிகாரி வாய்ப்புகள் கிடைத்தது.

நம்மை மாற்றிக் கொள்வதற்கான நேரத்தை பெண்கள் எப்போதும் தனக்குக் கொடுப்பதில்லை’’ என்கிற சுபா, ‘‘புருஷன மாத்துறேன்… பொண்டாட்டிய மாத்துறேன்னு முயற்சி எடுப்பதை விட்டுட்டு நம்மை நாமே முதலில் மாற்றினால், எல்லாமே மாறும்’’ என்கிறார் அனுபவத்தில். ‘‘எப்பொழுதும் மற்றவரிடமிருந்தே அன்பை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் நாம் நம்முடனான உறவையே தொலைக்கிறோம். என் பெண்ணுடன் எனது வாழ்வை நான்தான் லீட் பண்ணணும் என்கிற நிதர்சனம் புரிந்தபோது, மகளுக்காக என் வாழ்க்கையை மாற்றினேன். என் பெற்றோர் என்னுடன் பேசுவதை நிறுத்தினர். தொலைபேசி எண்ணையும், முகவரியையும் மொத்தமாக மாற்றி, யாரும் வேண்டாமென, என் நிறுவனம் அருகில் வீடு எடுத்து மகளுடன் செட்டிலானேன்.

வீட்டு வாடகை, மகளை சிறந்த பள்ளியில் படிக்க வைத்தது எல்லாவற்றையும் தனி மனுஷியாய் சமாளித்ததில், தன்னம்பிக்கை எனக்கு வேற லெவலில் கூடியிருந்தது. நம்மீதே நம்மால் அன்பு செலுத்த முடியாவிடில், நம்மில் இல்லாத அன்பை மற்றவருக்கு மட்டும் எப்படி கொடுத்துவிட முடியும்’’ என்கிற கேள்வியை முன் வைக்கும் சுபா! ‘‘தாக்குப்பிடிக்க முடியாமல் மகளுடன் என் பெற்றோரைத் தேடி வருவேன் என அவர்கள் நினைத்திருந்த நிலையில், அடுத்து வந்த 8 ஆண்டுகளும் எனக்கு கிடைத்த மிக முக்கியமான வருடங்களாக இருந்தது. வெறியோடு என்னை முன்னேற்றிக் கொண்டிருந்தேன்.

என் வளர்ச்சியை நிறுவனங்களும் அங்கீகரித்தன. ஒரு கட்டத்தில் டாப் பொசிஷனில் இருப்பவர்களுக்கே பயிற்சி வழங்கும் அதிகாரியாய் லீடர்ஷிப் பொசிஷனில் நியமிக்கப்பட்டேன். 2013ல் தொடங்கி பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, யுரோப்பியன் நாடுகளில் தொடங்கி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஏசிய நாடுகள், அரபு நாடுகள் என அத்தனையும் பணி நிமித்தமாக சுற்ற வேண்டி இருந்தது. இந்தியாவில் நான் இருந்ததே வருடத்தில் மூன்று மாதங்கள் என்றானது. சென்ற இடங்களில் எல்லாம் பயிற்சி வழங்கும் டாப் பொசிஷனில் இருந்தேன். எனது வருமானம் வருடத்திற்கு 48 லட்சமாக உயர்ந்திருந்தது.

உங்களை நீங்கள் உணர்ந்து, உங்கள் உணர்வுகளை நீங்கள் மதித்து, உங்களுக்கான நேரம் ஒதுக்கி, உங்களையே நீங்கள் காதலித்து, அந்தப் பெருமையில் நீங்கள் வலம் வருவதைத்தாண்டி வேறென்ன அழகிருக்க முடியும் இவ்வாழ்க்கையில்’’ என்கிற சுபா, ‘‘அடுத்து சொந்தமாக வீடு வாங்கினேன். கார் வாங்கினேன். என் மகளை சிறந்த கல்வி நிறுவனமான நிஃப்டில், அவள் விருப்பிய ஃபேஷன் டெக்னாலஜி படிப்பினை படிக்க வைத்தேன். AGUA என்ற பெயரில் கார்ப்பரேட் அலுவலகம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்திருந்தேன்’’ என அவரின் வெற்றியில் நம்மையும் திக்குமுக்காட வைத்தார். ‘‘இந்த நிலையில்தான், மோர் லைக் எ ஃப்ரெண்ட்டாக தாஸ் என்ற நண்பர் என் வாழ்வில் நுழைந்து, இணையராக என் வாழ்வை கலர்ஃபுல்லாக அர்த்தமுள்ளதாக மாற்றினார்.

ஒரு கட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றியது போதுமென, AGUAவை வுமன் லீடர்ஷிப் பிரைவேட் லிமிட்டெட் என முறையாய் பதிவு செய்தேன். இது என் தன்னம்பிக்கை மேல் நான் செய்த இன்வெஸ்ட்மென்ட்’’ என்றவர், “என்னால இதுக்கு மேல வேலை செய்ய முடியாது. என்னால் இரவுப் பணி செய்ய முடியாது. வேறு ஊரில் வேலை பார்க்க முடியாது” போன்ற சுய கதைகளை (inner narratives) பெண்கள் உடைத்தாலே வெளியில் வந்துவிட முடியும். ‘‘நாம் தவறுதலாக கற்றுக் கொண்டிருக்கும் கோணத்தை அகற்றி, நம் மீதான நம் உறவு, சுய அன்பு, நம் உண்மைகளை அறிந்து அதனுடன் சுமுகமாக எப்படி பயணிப்பது என்கிற பல ஆழமான ஆனால் எளிமையான விஷயங்களை சிந்திக்க வைக்கும் முயற்சியில் AGUA தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது’’ என்கிறார் அதே மின்னல் புன்னகையில்.

‘‘இதுவரை இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலுமாகச் சேர்த்து கிட்டதட்ட 6 ஆயிரம் பெண்களை தலைமைப் பொறுப்புக்கு உருவாக்கியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் வேலைக்குத் தேவையான திறமை யாரிடம் இருந்தாலும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, டைவர்சிட்டி…

ஈக்குவிட்டி… இன்குலூஷன் என்பதையும் பயிற்சியில் முன்னெடுத்து, பெண்கள் மட்டுமல்லாது அவர்களுடன் பணிபுரியும் ஆண்களுக்கும் பயிற்சி கொடுக்கிறேன். தற்போது வால்மார்ட், அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் கார்ட்ஸ், ஓஎல்எக்ஸ், ஹர்ஷேஸ் சாக்லேட் போன்ற குளோபல் நிறுவனங்கள் என் வாடிக்கையாளர்கள்’’ என்கிறார் சுபா பாண்டியன்.  ‘‘கார்ப்பரேட்ஸ் தாண்டி கல்லூரி பெண்கள், உழைக்கும் பெண்களையும் கருத்தில் கொண்டு அவர்களையும் ஒருங்கிணைக்கிறேன்.

எனது AGUA தொண்டு நிறுவனம் வழியாக ஈஞ்சம்பாக்கம் கடலோரம் தொடங்கி… பனையூர், நைனார் குப்பம், கானத்தூர், புது கல்பாக்கம், நெமிலி, வட நெமிலி வரை உள்ள கடலோரப் பகுதி பெண்களுக்கு செல்ஃப் லவ் குறித்து சொல்லித் தருவதுடன், இது குறித்து 30க்கும் மேற்பட்ட மாநாடுகளை பல்வேறு மாவட்டங்
களிலும், மாநிலங்களிலும் நடத்தியிருக்கிறேன்.

தனி மனுஷியாய், போராட்டங்களுக்கு நடுவே, வேலைக்குப் போய்க் கொண்டே, படித்துக் கொண்டே, மகளையும் வளர்த்து, என் கெரியரையும் உயர்த்தி, உச்சம் தொட்டு, விஸ்வரூப வெற்றியை நான் பெற்றிருக்கிறேன் என்றால், இது அத்தனையும் என்னை நான் முதலில் நேசித்ததால் கிடைத்த வெற்றி தவிர வேறென்ன’’ என்கிற சுபா, ‘‘அன்பு… அறிவு… வளர்ச்சி… மாற்றம் நோக்கிய பாதையில் AGUA’’ என்றவாறு விடைபெற்றார்.

அகுவா (AGUA)

அகுவா என்றால் ஸ்பானிஷ் மொழியில் தண்ணீர். பெண்ணும் நீரும் ஒன்று என்பதை இது குறிக்கும். நீரின்றி எப்படி வாழ முடியாதோ, அதுபோல் பெண் இன்றி உலகம் இல்லை. நீர் நிலைகளைப் போலவே பெண்களும் கிரியேட்டர்ஸ். நீர் எப்படி வளைந்து நெளிந்து கடந்து, சூழலியலோடு கலந்து உருமாறுகிறதோ… அதுபோல் பெண்களும் குளம் போல் அமைதியாகவும்… காட்டாறாய் ஆக்ரோஷமாகவும்… கடலாக ஆர்ப்பரித்தும் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post தனக்குப் பிடித்ததை பெண்ணால் செய்ய முடியணும்! appeared first on Dinakaran.

Tags : Subba Pandian ,kumkum ,Suba ,
× RELATED குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க…