×

மாமல்லபுரத்தில் பெண்களுக்கான சிறப்பு சிற்ப பயிற்சி!

நன்றி குங்குமம் தோழி

மாமல்லபுரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிற்பங்களும், அவற்றின் கலைநயங்களும்தான். தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று மாமல்லபுரம். இப்படிப்பட்ட கலைநயம் மிக்க இடங்களில் வசித்து வரும் சிற்பிகள் மற்றும் கலைஞர்களின் கலைத்திறனை பற்றி நாம் அறிந்ததே. தற்போது பல நகரங்களில் கட்டிடம் மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் பட்டப்படிப்பாக இருந்தாலும் வெகு சிலரே இந்த துறையினை தேர்ந்தெடுத்து பயில்கின்றனர். அவர்களில் பெண்களும் உண்டு. ஆனால், படிப்பிற்கு பிறகு அவர்கள் வேலைக்கு செல்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றுதான் சொல்லணும். 100ல் 70%தான் இந்த வேலையை தங்களின் துறையாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

அதில் பெண்களின் சதவிகிதம் மிகவும் குறைவு. அதில் திருமணமானப் பெண்கள், பள்ளி படிப்பிற்கு மேல் படிப்பைத் தொடர முடியாதவர்கள் மற்றும் சிற்பக் கலைகளில் ஆர்வம் உள்ள பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிற்பக் கலையை மூன்று மாத படிப்பாக பயிற்சி கொடுத்து அதன் மூலம் அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பினையும், வருமானத்தையும் ஈட்ட வகை செய்து கொடுக்கின்றனர் ஏசிடிஎஸ் அமைப்பினர். இந்தத் திட்டத்தினை தமிழக அரசின் இந்திய தொழில் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து அமைப்பின் இயக்குனரான தேவன்பு பெண்களுக்கு சிற்பக்கலை பயிற்சியினை அளிக்கிறார். இதனைப் பற்றி விரிவாகப் பகிர்கிறார் சிற்பக் கலை பயிற்சி திட்ட அலுவலர் ப்ரின்ஸ்.

‘‘ஏசிடிஎஸ், குழந்தைகள் மற்றும் பெண்களின் நலத் திட்டத்துக்காக 1991ல் இருந்து செயல்பட்டுட்டு வருகிறது. குழந்தை தொழிலாளிகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் இந்த திட்டம் முதன் முதலில் அமைக்கப்பட்டது. அதன் ஒரு கட்டமாக கல் குவாரியில் வேலை செய்யும் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்க்க முனைந்தோம். ஆனால் அதை செயல்படுத்துவது எங்களுக்கு அவ்வளவு சுலபமாக அமையவில்லை.

குவாரிகளின் தலைவர்கள் மட்டுமில்லை பெற்றோர்களுக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை. காரணம், குழந்தைகளும் வேலைக்குப் ேபானால்தான் அவர்களுக்குப் போதிய பணம் கிடைக்கும். அதனாலேயே அவர்களை பள்ளிக்கு அனுப்பத் தயங்கினார்கள். மேலும் பெற்றோர் இருவரும் குவாரியில் வேலைக்குப் போனால், வீட்டில் உள்ள சின்னக் குழந்தையை பெரியக் குழந்தைதான் பார்த்துக் கொள்ளணும். அதனால் அவர்களை பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள்.

இந்தப் பிரச்னைக்கு முதலில் தீர்வு கொடுத்தால்தான் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கும் என்று புரிந்தது. அதனால் பெற்றவர்கள் வேலை முடித்து வரும் வரை குழந்தைகளை பார்த்துக் கொள்ள நாங்க ஏற்பாடு செய்தால், பெரிய குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டவட்டமாக சொன்ன பிறகுதான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதித்தார்கள். ஆனால், அதன் பிறகும் சில சிக்கல்களை சந்தித்தோம். பள்ளி சேர்க்கும் வயதில் இருந்த குழந்தைகள் நேரடியாகப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்கள். வயதை கடந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மறுத்ததால், அவர்களுக்கு நாங்களே ஒரு பள்ளி அமைத்து வயதிற்கேற்ப பாடங்களை கற்றுக் கொடுத்து, பிறகு அரசுப் பள்ளியில் அவர்களை சேர்த்தோம்.

குழந்தைகளைத் தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் ஒரு திட்டம் அமைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன் அடிப்படையில் அங்கு கிராமத்தில் உள்ள பெண்களுக்கு என சுய உதவிக் குழுவினை அமைத்தோம். இதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கும், சேமித்த பணத்தைக் கொண்டு தொழில் துவங்குவதற்கானப் பயிற்சி அளித்தோம். அதில் தையல் கலை, ஆரி வேலைப்பாடு மற்றும் அவர்கள் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய சில வேலைகளுக்கானப் பயிற்சி அளித்தோம்.

அந்த வரிசையில் தற்போது சிற்பக்கலை பயிற்சியினை பெண்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறோம்’’ என்றவர், அந்தப் பயிற்சி குறித்து விவரித்தார்.‘‘மாமல்லபுரம் சிற்பக்கலைக்கு பெயர் போன தளம். கடினமான வேலை என்பதால் ஆண்கள் மட்டும் இதனை செய்து வந்தார்கள். இந்தக் கலையை பெண்களால் செய்ய முடியாதா என்ன? அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்தால் கண்டிப்பாக அவர்களின் வாழ்வாதாரமாக மாற்ற முடியும் என முப்பது பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிற்பப் பயிற்சி கொடுத்து வருகிறோம்.

இந்தப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலானவர்களின் குடும்பம் சிற்பக்கலை தொழில் செய்பவர்கள். மேலும் வீட்டில் இருந்து கொண்ேட பெண்கள் தங்களின் குடும்பத்தில் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய முடியும். நாங்க இந்த திட்டத்தினை அமல் படுத்த முடிவு செய்தவுடன் முதலில் சிற்பக்கலைக்காகப் பெண்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக பிரசுரங்கள் கொடுத்தோம். ஆனால், பெண்கள் யாரும் பயிற்சிக்கு முன்வரவில்லை. பிறகு சிற்பாலையில் உள்ள பெண்களை நேரில் சந்தித்து பேசினோம். அதில் பெரும்பாலானவர்களின் குடும்பம் சிற்பக்கலையில் ஈடுபட்டு இருப்பதால், பெண்களும் இதைக் கற்க தங்களின் விருப்பத்தை தெரிவித்தார்கள்.

அதில் முதற்கட்டமாக 30 பேரை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுக்க முடிவு செய்தோம். இவர்களுக்கு மாமல்லபுரம் சிற்பக் கலைக்கூட ஆசிரியர் புண்ணியக்கோடி மற்றும் சிற்பக் கலைஞர் ராஜ் இருவரும் பயிற்சி அளித்து வருகிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டு குழுவாக பிரித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் முதல் இரண்டரை மணி நேரம் ஒரு ஆசிரியரும், அடுத்த இரண்டரை மணி
நேரம் மற்றொருவரும் பயிற்சி கொடுப்பாங்க. பயிற்சி துவங்கிய ஒரு மாதத்திலே பெண்கள் நாங்க எதிர்பார்த்ததை விட வேகமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தாங்க. மேலும் அவர்கள் இந்தப் பயிற்சியினை பாதியில் நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் போக்குவரத்து செலவிற்கென ஊக்கத் தொகை வழங்குகிறோம்’’ என்றவர் தங்களுடைய அடுத்த
ப்ராஜெக்ட் பற்றி குறிப்பிட்டார்.

‘‘எங்களின் அடுத்த திட்டம் குழந்தைகளின் உரிமைக்கானது. கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு எந்தப் பிரச்னை இருந்தாலும் எந்த ஒரு தயக்கம் இன்றி ஊரின் பஞ்சாயத்து தலைவரிடம் சொல்லலாம். இதன் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் சொல்லி புரிய வைத்து வருகிறோம். அடுத்து, முதல்வரின் காலை உணவுத் திட்டம் அனைத்து பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த உணவினை அமர்ந்து சாப்பிட சில பள்ளிகளில் கூடம் இல்லை. அதனை கட்டி கொடுத்திருக்கிறோம். அடுத்து கழிப்பறை வசதி.

கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு கழிப்பறைதான் இருக்கும். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், அதனை விரிவாக்கம் செய்யாமல் இருந்தது. குறிப்பாக பெண் குழந்தைகள் பல பிரச்னைகளை சந்தித்தார்கள். அதனால் தேவையான எண்ணிக்கையில் அதனை கட்டிக் கொடுத்திருக்கிறோம். கழிப்பறைகளே இல்லாத பள்ளிகளில் ஸ்மார்ட் கழிவறைகளை அறிமுகம் செய்திருக்கிறோம்.

இதன் மூலம் அதனை சுத்தம் செய்வது எளிது. இந்தத் திட்டத்தினை 25 தொண்டு நிறுவனங்கள் இணைந்து மூன்று கிராமங்களில் உள்ள பள்ளிகளில் அமல்படுத்தி இருக்கிறோம். மேலும், தைவான் நாட்டின் ஆசியா பல்கலைக்கழக மாணவர்கள், பெண்களுக்கு சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து அவர்களுக்கென வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தராங்க.

எங்க அமைப்பு மூலம் பயிற்சி மட்டுமில்லாமல் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தருகிறோம். மேலும் ெசாந்தமாக தொழில் துவங்க விரும்புபவர்களுக்கு நிதி உதவியும் ஏற்பாடு செய்கிறோம். சிற்பக் கலைக்கான பயிற்சியை தற்ேபாதுதான் ஆரம்பித்து இருக்கிறோம். மூன்று மாத முழுமையான பயிற்சிக்குப் பிறகு இவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெண் சிற்பிகள் என சான்றிதழ் பெறுவார்கள். அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் உயரும்’’ என்று புன்னகைத்தார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post மாமல்லபுரத்தில் பெண்களுக்கான சிறப்பு சிற்ப பயிற்சி! appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Tamil Nadu ,
× RELATED மாமல்லபுரத்துக்கு அடுத்த மாதம் முதல்...