×

மாணவர்களை கவுரவிக்கும் AYDA விருது!

நன்றி குங்குமம் தோழி

மாணவர்களை ஊக்குவித்தால் அவர்கள் மேலும் மேலும் மிகவும் உற்சாகமாக தங்களின் துறையில் பல சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்பது அசைக்க முடியாத நிஜம். அவ்வாறு சாதிப்பவர்களுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்தால்… அந்த வகையில் கடந்த 17 வருடமாக நிப்பான் நிறுவனம் கட்டிடக்கலை மற்றும் உட்புறவடிவமைப்பு துறையில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக AYDA Asia Young Designer விருதினை வழங்கி வருகிறார்கள்.

உலகளவில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரு துறையிலும் ஒரு சிறந்த மாணவரை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறார்கள். இந்த வருடம் சென்னையில் நடைபெற்ற இந்த விருதில் உலகளவில் பலர் பங்குபெற்றாலும் அதில் இந்தோனேஷியா மற்றும் மலேசியாவை சேர்ந்த இரு கல்லூரி மாணவிகள் சிறந்த விருதினை பெற்றுள்ளனர். இந்த விருது ஆரம்பிக்க காரணம் மற்றும் அதனால் மாணவர்கள் அடையும் பலன் குறித்து விவரித்தார் நிப்பான் நிறுவனத்தின் தலைவரான கிளாடிஸ்.

‘‘நாங்க இந்த விருதினை கடந்த 17 வருடமாக வழங்கி வருகிறோம். இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் கடந்த எட்டு வருடமாக இதில் பங்கு பெற்று வருகிறார்கள். முதலில் ஆசியா நாடுகளுக்காக மட்டுமே இந்த போட்டி நடைபெற்றது. தற்போது எங்களின் நிறுவனம் உலகளவில் பரந்து விரிந்துள்ளதால், உலகம் முழுக்க உள்ள கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு துறை மாணவர்கள் இதில் பங்கு பெறலாம். இந்த இரண்டு துறை சார்ந்த மாணவர்களுக்காக மட்டுமே இந்த விருது வழங்கும் போட்டியினை நடத்தி வருகிறோம்.

இதில் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்து ஒரு வருடத்திற்குள் இருப்பவர்கள் பங்கு பெறலாம். காரணம், மாணவர்களுக்கு உலகளவில் அவர்களின் துறையில் இதன் மூலம் நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும். மேலும் அவர்களின் திறனும் விரிவடையும். அதற்கான வாய்ப்பினை மாணவர்களுக்கு நாங்க ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறோம்’’ என்றவர் இந்த விருதுக்காக விண்ணப்பிப்பது மற்றும் தேர்வு முறை குறித்து விவரித்தார்.

‘‘பல ஆண்டுகளாக நடை பெற்று வருவதால், பெரும்பாலான கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு கல்லூரிகள் இந்த விருது குறித்து அறிந்திருப்பார்கள். முதலில் ஒவ்வொரு கல்லூரியாக சென்று அங்குள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இந்த விருது குறித்து விவரித்தோம். ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தலைப்பு கொடுக்கப்படும். அதற்கு ஏற்ப மாணவர்கள் வடிவமைக்க வேண்டும். மாணவர்கள் வடிவமைத்த திட்டத்தினை பரிந்துரை செய்ய அந்தந்த நாட்டிற்கு ஒரு தனிப்பட்ட குழு அமைத்தோம்.

மாணவர்கள் தங்களின் முழு திட்டங்களை வரைபடமாக அங்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில் இருந்து கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு துறை சார்ந்து ஒரு சிறந்த மாணவர் தேர்வு செய்யப்படுவார். இவர்களுக்கான இறுதிக்கட்ட தேர்வில் தங்களின் திட்டத்தினை நடுவர்கள் முன் சமர்ப்பிப்பார்கள். அதில் சிறந்த திட்டத்தினை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கப்படும். கடந்த வருடம் வியட்நாமிலும், இந்த வருடம் சென்னையிலும் நடைபெற்றது. அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெற உள்ளது.

விருதுகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு உதவியாக அவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மட்டுமில்லாமல், எங்க நிறுவன சார்பில் சிறந்த கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு துறையை சேர்ந்தவர்களையும் நாங்க மென்டாராக நியமிப்போம். அவர்கள் மாணவர்கள் தங்களின் திட்டத்தினை எவ்வாறு சமூதாயத்தின் நலனிற்கு ஏற்ப சாத்தியக்கூறு படுத்தலாம் என்பது மட்டுமில்லாமல் திட்டத்தினை நடுவர்கள் முன் எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும், அவர்கள் மேடையில் எவ்வாறு நடக்க வேண்டும், வார்த்தைகள் உச்சரிப்பு, சரியான வார்த்தைகள் பயன்பாடு என அனைத்திற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும்.

வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசு மட்டுமில்லாமல் ஒரு வருடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அவர்கள் துறை சார்ந்து இன்டர்ன்ஷிப் வாய்ப்பும் அளிக்கப்படும். இந்த வருடம் 6000 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் 28 மாணவர்கள் இறுதிக்கட்ட தேர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

பொதுவாக கல்லூரி ஆரம்பித்த ஒரு மாதங்களில் இந்த விருதுக்கான அறிவிப்பு எங்களின் இணையதளத்தில் அறிவிக்கப்படும். அதற்கு ஏற்ப மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் விண்ணப்பங்களை முழுமையாக சமர்ப்பித்தால்தான் ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பிறகு முதற்கட்ட தேர்வு நடைபெறும்.

அதில் அந்த திட்டத்தினை மக்களுக்காக நடைமுறைப்படுத்த முடியுமா? அதற்கான சாத்தியங்கள் உள்ளதா என்று நடுவர்கள் பார்ப்பார்கள். அதன் அடிப்படையில்தான் சிறந்த திட்டங்கள் தேர்வு செய்யப்படும். சிலரின் திட்டம் அருமையாக இருக்கும். ஆனால் அதனை அமலாக்க முடியாது. அதனால் இந்த விருதில் வெற்றிபெற மாணவர்கள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும்’’ என்றார் கிளாடிஸ்.

அலிஃபியா (இந்தோனேஷியா) சிறந்த உட்புற வடிவமைப்பு

‘‘எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. நான் வரையும் ஓவியங்களை என் பெற்ேறாரிடம் காண்பிப்பேன். அவர்களும் என்னை மேலும் ஊக்குவிப்பார்கள். அந்த ஆர்வம்தான் என்னை இந்த துறையை தேர்வு செய்ய வைத்தது. இந்த விருது குறித்து என் கல்லூரி சீனியர்தான் எனக்கு சொன்னார். அதன் பிறகுதான் நான் விண்ணப்பித்தேன்.நான் சின்னப் பெண்ணாக பள்ளிக்கு செல்லும் போது, வழியில் குப்பை சேகரிப்பவர்களை பார்த்திருக்கேன்.

அவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து அதனை விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில் தான் வாழ்ந்து வந்தார்கள். நான் இவர்களை என்னுடைய சின்ன வயதில் இருந்து பார்த்து வருகிறேன். நான் கல்லூரியில் உட்புற வடிவமைப்பு துறையை தேர்வு செய்த போது என் மனதில் இவர்களுக்கான ஒரு கனவு இடத்தை வடிவமைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் AYDA விருது குறித்து தெரிய வந்தது. அதில் என்னுடைய திட்டத்தினை எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பதற்கான ஒரு வடிவம் கொடுத்தேன்.

இங்கு பொதுவாக பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே கொடுப்பதைவிட அதை துண்டு துண்டாக கத்தரித்துக் கொடுத்தால் அதற்கான விலை அதிகம். இவர்கள் ஒவ்வொருவரால் அந்த இயந்திரத்தை வாங்கி அதற்காக செலவு செய்ய முடியாது. அதனால் அந்த இயந்திரம் அமைத்து தனிப்பட்ட இடம் வடிவமைத்துக் கொடுத்தால், அவர்கள் அனைவரும் அங்கு அதனை துண்டுகளாக்கி அதன் மூலம் மேலும் வருமானம் பார்க்க முடியும் என்ற என் திட்டத்திற்குதான் விருது கிடைத்தது. என்னுடைய இந்த திட்டத்தினை அமல்படுத்த இந்தோனேஷிய அரசு முன்வரவேண்டும் என்பது தான் என் கோரிக்கை.’’

லிம் ஜென் யிங், (மலேசியா) கட்டிடக்கலை

‘‘நான் கடந்த வருடம்தான் பட்டப்படிப்பை முடித்தேன். தற்ேபாது வேலை பார்க்கிறேன். எங்க ஊரின் முக்கிய அடையாளம் இங்குள்ள சுங்கை பதானி என்ற நதி. தொழில்மயமாக்கல் காரணமாக இந்த நதி மாசடைந்துவிட்டது. ஆனாலும் இதைச் சுற்றி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நதியில் மீன் பிடிப்பதுதான் பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம். நதி மாசடைந்த காரணத்தால், அவர்களின் வாழ்வாதாரத்திலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நதி எங்க நாட்டின் காலாச்சாரத்தின் அடையாளம். அதை மீட்டெடுக்கும் வகையில் நீர்ப்பாசனம், போக்குவரத்து மற்றும் வணிகத்திற்கான உயிர்நாடியாக மாற்றி அமைக்கும் படி என்னுடைய பிராஜக்டில் குறிப்பிட்டு இருந்தேன். மேலும் அங்கு இந்த நதியின் வரலாற்றினை பறைசாற்றும்படி அருங்காட்சியகம் அமைத்தால் அதன் மூலம் இந்த நதியினை மாசுபடாமல் பாதுகாத்து, மக்கள் இழந்த வாழ்வாதாரத்தினை மீட்டுக் கொடுக்க முடியும்.’’

தொகுப்பு: ஷம்ரிதி

The post மாணவர்களை கவுரவிக்கும் AYDA விருது! appeared first on Dinakaran.

Tags : Nippon ,Dinakaran ,
× RELATED இனி கல் தொடாது கை!