×

கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்வதாக கூறி பெல் தொழிற்சாலை ஊழியரிடம் ஆன்லைனில் ₹1.17 லட்சம் மோசடி

*சைபர் கிரைம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்வதாக கூறி பெல் தொழிற்சாலை ஊழியரிடம் ஆன்லைனில் மோசடி செய்யப்பட்ட ரூ.1.17 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர் ஆசிஸ் ஜெயின். இவரது செல்போனுக்கு கடந்த 3ம் தேதி வந்த அழைப்பில் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். மேலும் வங்கி மூலமாக பெற்ற கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.

வங்கி ஊழியர் என்று நம்பிய ஆசிஸ்ஜெயின், விவரங்கள் மற்றும் ஓடிபி எண்ணையும் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் ஆசிஸ் ஜெயினின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 905 எடுக்கப்பட்டதாக, அவரது செல்போனுக்கு மெசேஜ் வந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்த அவர், ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் உள்ள, சைபர் கிரைம் பிரிவில் அன்றைய தினமே அவர் புகார் அளித்தார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரின் வங்கி கணக்கில் இருந்து எடுத்த பணத்தை, யாரும் பயன்படுத்தாத வண்ணம் முடக்கி வைத்தனர். தொடர்ந்து, ஆசிஸ் ஜெயின் இழந்த பணத்தை மீட்டு அவரது வங்கி கணக்கில் வைக்கப்பட்டதற்கான ஆணையை, சைபர் கிரைம் ஏடிஎஸ்பி குமார் நேற்று வழங்கினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் உடன் இருந்தார். மேலும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு எதிராக புகார் அளிக்க 1930 என்ற உதவி எண்ணுக்கு தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

The post கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்வதாக கூறி பெல் தொழிற்சாலை ஊழியரிடம் ஆன்லைனில் ₹1.17 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Bell factory ,RANIPET ,RANIPETTA ,Ranipet Bell Factory ,Dinakaran ,
× RELATED கடன் ெதாகையை திருப்பி கேட்டு நிதி...