*சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறை : வால்பாறை பகுதியில் கடந்த 2 வாரங்களாக கொட்டித்தீர்த்த கனமழை சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பகல் நேரங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு இரவு நேரங்களில் குளிர் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தது. சுற்றுலாவை நம்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
மேலும், கனமழையினால் வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை இடதுகரை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாட்டி, பேத்தி ஆகிய இருவர் பலியானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததால் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட்களிலும் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
தற்போது, வால்பாறை பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளதால் திரும்பிய இடமெல்லாம் பச்சை பசேல் என இயற்கை காட்சிகள் மனதை கவரும் விதமாக ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும், மழை குறைந்து வெயிலுடன் சாரல் மழை தொடர்வதால் சோலையார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து தொடர்வதால் சோலையார் அணை நீர்மட்டம் தொடர்ந்து 161 அடி உள்ளது.
எனவே, கரையோரம் பல்வேறு தேயிலை எஸ்டேட்களை சேர்ந்த தேயிலை தோட்டங்களை நீர் சூழ்ந்து. கடல் போல் காட்சியளிக்கிறது. சோலையார் அணையை பார்பதற்கு தினமும் பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இதனால், சோலையார் அணை சாலையோர கடை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை மலைப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது, நிலவும் லேசான சாரல், வெயில் உள்ளிட்ட பல்வேறு
காலநிலை உள்ளதால் சில எஸ்டேட்டுகளில் கவாத்து பணிகள் நீடிக்கிறது. மேலும், வெட்டப்பட்ட தேயிலை தோட்டங்களுக்கு பூஞ்சை தாக்குதலை கட்டுப்படுத்த கவாத்து செய்யப்பட்டுள்ள தேயிலைத்தோட்டங்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் வகையில் வெள்ளை நிற மருந்து தெளிக்கப்படுகிறது.
தற்போது, தேயிலை தோட்டங்களில் கவாத்து, மருந்து தெளிக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட்களில் தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருவதால் தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post வால்பாறையில் தென்மேற்கு பருவமழை குறைந்தது தேயிலை பறிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.