வாடிக்கையாளர்களின் தகவல்களை பணமாக மாற்றும் கூகுள்?: விரைவில் மாற்றம் காணப்போகும் கூகுளின் செயல்பாட்டுக்கு அமெரிக்க நீதிமன்றம் கண்டனம்

வாஷிங்டன்: ஆன்லைன் தேடுதல் மற்றும் விளம்பர உலகில் கூகுள் நிறுவனம் சட்ட விரோதமான முறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அமெரிக்க நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க சட்டத்துறை தொடர்ந்த வழக்கில் கடந்த 10 வாரங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இணைய தேடுபொறியில் முதலிடத்தை தக்க வைக்க கூகுள் சட்டவிரோதமான முறைகளை கையாள்வதாக நீதிபதி அமித்மேதா கண்டனம் தெரிவித்தார். இது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இது குறித்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெர்ரிக் கார்லண்ட் கூறுகையில்;

அமெரிக்க மக்களுக்கு இது ஒரு வரலாற்று வெற்றி என்றும், இவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்றும் கருத்து தெரிவித்தார். இதையடுத்து நேற்று அமெரிக்க பங்கு சந்தையில் ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகள் 4.3 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தனர். இந்த தீர்ப்பை அடுத்து கூகுள் அடுத்து அதன் துணை நிறுவனங்களின் வர்த்தக கொள்கை மற்றும் செயல்பாட்டில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இணைய தேடுபொறியில் சந்தையில் 90 சதவீதமும், ஸ்மார்ட்போன் இயங்கு தளத்தில் 95 சதவீதமும் கூகுளின் வசம் உள்ளது. கூகுளுக்கு சொந்தமான க்ரோம் இணையதள பிரவுசர், ஸ்மார்ட்போன்களின் ஆண்ட்ராய்டு இயங்குதளம், யூ டியூப் ஆகியவை இலவச சேவைகளை வழங்கினாலும் அவற்றில் வாடிக்கையாளர்களின் தகவல்களை பயன்படுத்தி, அதற்கேற்ப விளம்பரங்களை வெளியிட்டு வருவாய் ஈட்டுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதேபோன்று கூகுள் மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்துமாறு, செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக பணம் கொடுப்பது போன்ற போன்ற வழிமுறைகளை கூகுள் கையாள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

The post வாடிக்கையாளர்களின் தகவல்களை பணமாக மாற்றும் கூகுள்?: விரைவில் மாற்றம் காணப்போகும் கூகுளின் செயல்பாட்டுக்கு அமெரிக்க நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: