×

குவைத் நாட்டு தீவிபத்தில் கணவர் பலி 2 மகள்கள், வயதான தந்தையுடன் குடும்பம் நடத்த கஷ்டப்படும் மனைவி

*அரசு வேலை கேட்டு ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் : குவைத் நாட்டில் தீவிபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்த நிலையில் வயதான தந்தை, 2 மகள்களை வைத்து கஷ்டப்படும் மனைவி அரசு வேலை வழங்கக்கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முகமதுஷரீப் மனைவி அஷ்ரபுன்னிசா நேற்று தனது பிள்ளைகளுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் கடந்த மாதம் 12ம் தேதி குவைத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.

தற்போது வயதான தந்தை யாகூப்ஷரீப் (65), மகள்கள் நூர் அப்சா (8), நூர்ஷரீபா (4) ஆகியோருடன் வசித்து வருகிறேன். என் குடும்பத்தில் சம்பாதிப்பவர்கள் யாரும் இல்லை. வேறு எந்த வகையிலும் என் குடும்பத்துக்கு வருமானம் இல்லை. எவ்வித ஆதரவும் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனக்கு ஆதரவற்ற விதவை சான்றும் வழங்கப்பட்டுள்ளது.

நான் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். எனவே என் குடும்பத்தை நான் பாதுகாக்க நான் படித்த கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு அரசு அலுவலகங்களில் எனக்கு ஏதாவது அரசு பணி நியமனம் செய்து ஆவண செய்யுமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குவைத் நாட்டு தீவிபத்தில் கணவர் பலி 2 மகள்கள், வயதான தந்தையுடன் குடும்பம் நடத்த கஷ்டப்படும் மனைவி appeared first on Dinakaran.

Tags : Kuwait ,Villupuram ,
× RELATED விமானத்தின் கழிவறையில்...