×

ஆபத்தை தரும் ஆர்வக்கோளாறு

ஒருமுறை விமான துப்புரவுப் பணியாளர் ஒருவர் விமானத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். விமானி அறையில் ‘‘விமானம் ஓட்டுவது எப்படி’’ (ஆரம்பநிலை மாணவர்களுக்கானது) என ஒரு புத்தகம் இருந்துள்ளது. ஆர்வக்கோளாறுள்ள நமது பணியாளர் அதனை எடுத்து புரட்டிப் பார்த்துள்ளார். புத்தகத்தில் முதல் பக்கத்தில் ‘‘விமானத்தை இயக்க சிவப்பு பொத்தானை அழுத்தவும்.’’ என்று இருந்துள்ளது. அவரும் அழுத்திப் பார்த்திருக்கிறார். விமானம் இயங்க ஆரம்பித்துள்ளது. நம் பணியாளர் பரவசம் அடைந்திருக்கிறார். அடுத்த பக்கத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார். ‘விமானத்தை நகர்த்த, நீல பொத்தானை அழுத்தவும்.’’ என்று இருந்துள்ளது. அதனையும் அழுத்திப் பார்க்க, விமானம் வேகமாக நகர ஆரம்பித்திருக்கிறது.மூன்றாம் பக்கத்தில் ‘‘விமானம் வானில் பறக்க பச்சை பொத்தானை அழுத்தவும்.’’ என்று இருந்துள்ளது. அதனையும் அழுத்த விமானம் வேகமாக மேலுயர்ந்து பறக்க ஆரம்பித்துள்ளது.

நம் பணியாளர் பரவச வெள்ளத்தில் மிதந்துள்ளார்.20 நிமிஷம் கழித்து விமானத்தை கீழே இறக்க நினைத்துள்ளார். ஆதலால் நான்காம் பக்கதைப் புரட்டியுள்ளார். அதிலே ‘‘விமானத்தை எவ்வாறு தரையிறக்குவது என்பது பற்றி அறிய, நூலகக் காப்பகத்தில் இருக்கும் நூல் பகுதி 2 ஐ வாங்கவும்!’’ என்று இருந்துள்ளது.இறைமக்களே, அரைப்படிப்பு அபாயகரமானதல்ல, மாறாக அழிவைத் தரவல்லது. மேற்கண்ட கதை சிரிப்பதற்கு அல்ல, நம்மை நாமே சிந்திப்பதற்கும் தற்பரிசோதனை செய்வதற்கும் தான். பல தருணங்களில் நாமும் பொறுமையின்றி, அல்லது ஆர்வக்கோளாறு காரணங்களால் தவறான முடிவுகள் எடுத்து திக்குமுக்காடிப் போகிறோம்.விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை (நீதி.1:3) இறைவேதம் எடுத்துரைக்கிறது. ‘‘ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதன் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்’’ (பிர.7:8) என இறைவேதம் கூறுகிறது.ஆகவே எந்த செயலையும் தீர ஆராய்ந்து, பல கோணங்களில் சிந்தித்து, சரியான நபர்களிடம் நல்லாலோசனை பெற்று, இறை ஞானத்துடன் நலமான காரியத்தை தெளிவுடனும், விவேகத்துடனும் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

– அருள்முனைவர் பெவிஸ்டன்

The post ஆபத்தை தரும் ஆர்வக்கோளாறு appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை..!!