×

சென்னை எல்லை சாலை திட்டம் 133 கி.மீ. நீளத்தில் ரூ.16,212.40 கோடியில் ஆறு வழி சாலையுடன் இருபுறமும் இருவழி சேவை சாலை அமைப்பு: திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

திருவள்ளூர்: வணிக மற்றும் தொழில் வளத்தை அதிகரிக்கும் வகையில் சென்னை எல்லைச் சாலை திட்டம் 133 கி.மீ நீளத்தில் ரூ.16,212.40 கோடியில் ஆறுவழி சாலையுடன் கூடிய இருபுறமும் இரு வழி சேவைச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான திட்டங்களை விரைவாகவும், தரத்துடனும் செயல்படுத்தி முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்படி தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைத்தல், ராஜிவ் காந்தி சாலையையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலை, ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பூங்கா சந்திப்பில் நடைபெறும் U வடிவ மேம்பாலப் பணி, பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலப் பணி, தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலப் பணியை ஆய்வு செய்தார்.

மேலும் சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட வேண்டிய தொலைநோக்கு திட்டங்களின் சாத்தியக் கூறு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை கடல்வழிப்பாலம் அமைத்தல், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்டச் சாலை அமைத்தல், மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தாம்பரம் வரை உயர்மட்டச் சாலை அமைத்தல், பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள சாலையில் 5 சந்திப்புகளில் மேம்பாலம் அமைத்தல், பல்லாவரம் முதல் சென்னை வெளிவட்டச்சாலையை இணைக்கும் உயர்மட்டச் சாலை, படப்பை – மணிமங்கலம் – வரதராஜபுரம் வரையான சாலையை இணைக்கும் புறவழிச்சாலை அமைத்தல் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் கையாளும் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்தும், மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் எண்ணூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு சென்றடைய சென்னை பெருநகரத்தின் வணிக மற்றும் தொழில் வளத்தை அதிகரிக்கும் வகையில் சென்னை எல்லைச் சாலை திட்டம் 133 கி.மீ நீளத்தில் ரூ.16,212.40 கோடி மதிப்பீட்டில் ஆறுவழி சாலையுடன் கூடிய இரு புறமும் இரு வழி சேவைச் சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் 5 கட்டங்களாக எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர், திருவள்ளூர் புறவழிச்சாலை, ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோவில் வழியாக மாமல்லபுரம் வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை எல்லை சாலை பணிகளில் முதல்கட்ட பணிகள் எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை 25.40 கி.மீ. நீளத்திற்கும் ரூ.4290 கோடி மதிப்பீட்டிலும் (நில எடுப்பு உள்பட), இரண்டாம் கட்டப் பணிகள் தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை 26.10 கி.மீ. நீளத்திற்கு ரூ.2259 கோடி மதிப்பீட்டிலும் (நில எடுப்பு உள்பட) நடந்து வருகின்றன.

இப்பணிகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாமரைப்பாக்கத்தில் கள ஆய்வு செய்தார். அப்போது திட்டங்களை விரைவாகவும், தரத்துடனும் செயல்படுத்தி முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வு கூட்டம் மற்றும் கள ஆய்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், சென்னை எல்லைச் சாலைத் திட்டத்தின் இயக்குநர் ராமன், திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை எல்லை சாலை திட்டம் 133 கி.மீ. நீளத்தில் ரூ.16,212.40 கோடியில் ஆறு வழி சாலையுடன் இருபுறமும் இருவழி சேவை சாலை அமைப்பு: திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Tiruvallur ,Chennai ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வில்...