- ஜி 7
- இஸ்ரேல்
- ஈரான்
- ஹிஸ்புல்லா
- இந்தியா
- லெபனான்
- டெல் அவிவ்
- ஹெஸ்பொல்லா
- ஜனாதிபதி
- மசூத் பெஸ்கியன்
- தின மலர்
டெல் அவிவ்: ஈரானும், ஹிஸ்புல்லாவும் போருக்கு தயாரான நிலையில், இஸ்ரேலை பாதுகாக்க வேண்டி ஜி7 நாடுகள் தீவிர ஆலோசனை நடத்தி உள்ளன. இதற்கிடையே லெபனானை விட்டு வெளியேற இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தூதரகங்கள் அழைப்புவிடுத்துள்ளன.
ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார். ஜூலை 31ல் தலைநகர் தெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் இந்த பயணம் உள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் ராணுவமும், ஹிஸ்புல்லா அமைப்பும் எந்த நேரத்திலும் இஸ்ரேலை தாக்கலாம் என்று, ஜி-7 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், இஸ்ரேலின் முன்னணி நாளிதழான டைம்ஸ் ஆப் இஸ்ரேல் வெளியிட்ட செய்தியில்: ‘இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு, ஈரானின் தாக்குதலைத் தடுக்க அந்நாட்டு மீது எந்த நேரத்திலும் ராணுவ தாக்குதல் நடத்த ஒப்புதல் அளிக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.மேற்கண்ட அறிக்கையின்படி பார்த்தால், இஸ்ரேலும் போருக்கு தயாராகி வருகிறது என்பது தெளிவாகிறது. அண்மையில் லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த ராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்ரை, இஸ்ரேல் கொன்றதை அடுத்து, அவர்களும் இஸ்ரேலுக்கு எதிராக கடும் கோபத்தில் உள்ளனர். இதற்கிடையே தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டதன் மூலம் நிலைமை மேலும் சிக்கலாகி உள்ளது. இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. கடந்த 2006ல் லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஒரே பயணிகள் விமான நிலையத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது.
தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள், தங்களது குடிமக்களை லெபனானை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன. எந்த நேரத்திலும் ஈரான் – இஸ்ரேல் இடையே தாக்குதல் நடக்கலாம் என்பதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் நீடித்து வரும் நிலையில், தற்போது ஈரான் – இஸ்ரேல் போருக்கான சூழலும் எழுந்துள்ளதால் சர்வதேச நாடுகள் கவலையடைந்துள்ளன.
The post ஈரானும், ஹிஸ்புல்லாவும் போருக்கு தயாரான நிலையில் இஸ்ரேலை பாதுகாக்க ஜி7 நாடுகள் தீவிர ஆலோசனை: லெபனானை விட்டு வெளியேற இந்தியா உட்பட நாடுகள் அழைப்பு appeared first on Dinakaran.