திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்பாக்கம் அடுத்த பைராகிமடம்-அங்கமாம்பட்டு கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கான ரேஷன் கடை அங்கமாம்பட்டு கிராமத்தில் உள்ளது. இந்த ரேஷன் கடைக்கு இப்பகுதியில் உள்ள ஒரு சாலை வழியாக சென்று பொதுமக்கள், ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை, எனது நிலத்துக்கு செல்லும் பாதை என அப்பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் கூறினார். இந்நிலையில், திடீரென அந்த சாலையை தடுத்து வேலி அமைத்தார். இதனால் பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில், இன்று காலை 100க்கும் மேற்பட்டோர் கல்பாக்கம்-திருக்கழுக்குன்றம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வழி சம்மந்தமாக உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post கல்பாக்கம் அருகே கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.