×

14 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்கு அருந்ததிராய் மீது உபா (UAPA) வழக்கு!

நன்றி குங்குமம் தோழி

“தாங்கள் சரியென்று நினைத்ததை பேசியதற்காக தனது எழுத்தாளர்களை பேச விடாமல் செய்ய நேரும் ஒரு தேசத்துக்காக நான் பரிதாபப்படுகிறேன்!”
– அருந்ததிராய்

சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் மீது உபா (UAPA) சட்டம் பிரிவு 45(1ன்) கீழ் வழக்குப் பதிவு செய்ய டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யார் இந்த அருந்ததிராய்? உபா சட்டம் பாய்ந்தது ஏன்?

விரிவாகப் பார்க்கலாம்..
62 வயது நிறைந்த சுசான அருந்ததிராய் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகால யாவின் தலைநகர் ஷில்லாங்கில் பிறந்தவர். இவரின் தாயார் மேரி ரோஸ் மலையாளி. தேயிலைத் தோட்ட மேலாளரான இவரது தந்தை ரஜித் ராய் ஒரு பெங்காலி.தன்னுடைய சிறு வயதில் அருந்ததிராய் கேரளாவில் உள்ள ஆய்மணம் என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் தில்லிப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பினை முடித்தவர், பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததிராய் திரைக்கதை எழுதியதும் குறிப்பிடத்தக்கது.

அதிரடியான கருத்துகளால் அதிகம் அறியப்பட்டவரான அருந்ததிராய், தனது படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்னை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் போன்றவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். இவர் எழுதிய “தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்” நாவல் பரவலாகப் பேசப்பட்டது. தமிழில் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற தலைப்பில் இந்நூல் வெளியானது. மேகா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கேற்றார்.

இளமைக் காலம் தொட்டே அருந்ததி ராய், ஆளும் அரசுகளை எதிர்ப்பதில் துணிச்சலுடனே இருந்து வருபவர். அல்லது அவர் பேசும் விஷயங்கள் சர்ச்சையில் சிக்குகிறது என்றும் சொல்லலாம். ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2010 அக்டோபர் 25ல் “ஜம்மு- காஷ்மீர் சிவில் சொசைட்டி கூட்டமைப்பு” சார்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன், சையத் அலி ஷா கிலானி, கவிஞர் வரவர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கருத்தரங்கில் அருந்ததிராய், ‘‘காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை.

இது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவின் ஆயுதப்படைகளால் வலுக்கட்டாயமாக காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டது” என்று பேசினார். மேலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி “ஆசாதி (சுதந்திரம்) ஒரே வழி” என்ற தலைப்பில் தில்லியில் 2010 நவம்பர் மாதம் நடைபெற்ற கருத்தரங்கத்திலும், காஷ்மீர் பற்றிய தனது கருத்தை அவர் கூறினார்.அப்போது காஷ்மீர் பிரச்னை இந்திய அரசியலில் கொந்தளிப்புடன் இருந்த நேரம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மீது உரிமைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. ஜம்மு- காஷ்மீர் முழுவதும் டஜன் கணக்கில் மரணங்கள் தொடர்கதையாகி இருந்தன. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வெடித்து எழுந்தனர். அருந்ததிராய் முன்வைத்த கருத்துகள் மேலும் புயலைக் கிளப்ப, டெல்லியில் இருந்த அருந்ததிராய் வீட்டின் முன்பு அவருக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அருந்ததிராய் மற்றும் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீதும், வன்முறையை தூண்டும் வகையில் பேசினர் என்ற தேசத் துரோகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வழக்கும் தொடரப்பட்டது.‘‘சிலர் பத்திரிகைகளில் நான் வெறுக்கத்தக்கப் பேச்சுகளை பேசுவதாகவும், இந்தியாவை உடைக்க விரும்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மாறாக, நான் சொல்வது அன்பு சார்ந்தது. பெருமையிலிருந்து தோன்றுவது” என்று அருந்ததிராய் பதிலளித்தார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பிரிட்டிஷ் ஆட்சிக்கால தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்தி வைத்தது. ஆனால் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தற்போது வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் அருந்ததிராய் கைது செய்யப்பட்டால் ஜாமீன் பெற முடியாது. கிட்டத்தட்ட 62 வயதில், வெளியில் வரமுடியாத அளவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், இவரின் மொத்த வாழ்க்கையும் முடங்கிவிடும். விசாரணை முடியும் வரை பல ஆண்டுகள் கூட இவர் காவலில் வைக்கப்படலாம். அந்தளவுக்கு இந்தச் சட்டம் மிகக் கடுமையானது.

உபா சட்டம் என்பது..?

பேச்சு சுதந்திரம்… எழுத்து சுதந்திரம்… அமைப்பாகும் சுதந்திரம்… ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19-வது பிரிவு இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது.

1967ல் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ‘உபா’(UAPA) என்று அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில், ‘எது தீவிரவாத நடவடிக்கை’ என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.இந்தச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி, அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள். அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் வெளியீடுகளை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய முடியும்.

இந்தச் சட்டத்தின் பிரிவு 43-ன் படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 30 நாட்கள் போலீஸ் காவல் வழங்க முடியும். அதிகபட்சம் 90 நாட்கள் எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலில் வைக்க முடியும். 180 நாட்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலே சிறையில் அடைத்து வைக்க முடியும். எந்த நீதிமன்றத்திலும் இவர் முன்ஜாமீன் பெற முடியாது.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் பிரிவு 43-ன் படி, ஜாமீனில் வெளியே வருவது இயலாத காரியம். இவர்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள். இந்த நீதிமன்ற நடவடிக்கையை பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ பார்ப்பதற்கு அனுமதியில்லை.

விருதுகள்…

* 1997ல் ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்’ என்ற இவரின் முதல் புதினத்திற்கு புக்கர் பரிசு கிடைத்தது. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவர் பெற்றார்
* 2003ம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாடமி பரிசை பெற மறுத்துவிட்டார்.
* 2004ல் சிட்னி அமைதிப் பரிசை வென்றார்.
* 2015ல் அம்பேத்கர் சுடர் விருது இவருக்கு கிடைத்தது.

தொகுப்பு: மணிமகள்

The post 14 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்கு அருந்ததிராய் மீது உபா (UAPA) வழக்கு! appeared first on Dinakaran.

Tags : UBA ,UAPA ,Arundathirai ,Saffron ,Arundati Roy ,Dinakaran ,
× RELATED உபா வழக்கு: 4 ஆண்டாக சிறையில் இருப்பவருக்கு ஜாமீன்