கேரளா: வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரேடார் கருவிகள், செல்போன் ஜிபிஎஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். இன்னும் 200 பேரை கண்டறிய முடியவில்லை என்பதால் மீட்பு பணிகள் இன்றும் நீடித்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 387-ஆக உயர்ந்துள்ளது. 7-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்ற 206 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 700 குடும்பங்களை சேர்ந்த 2,597 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வயநாட்டில் நிலச்சரிவால் ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
மேப்பாடியில் முகாம்களாக செயல்படும் 10 பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்பவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவைக்கேற்ப அழைக்கப்படுவர். கூகுள் படிவ இணைப்பு மூலம் தன்னார்வ அணிகள் மீட்புப் பணிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
The post வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அழைப்பு! appeared first on Dinakaran.