×

எனது நண்பனை விடுவிக்காவிட்டால் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை வெடிகுண்டு வீசி கொல்வோம்: கட்சி அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு

பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திற்கு தபால் மூலமாக கடிதம் ஒன்று வந்துள்ளது.

உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உதவியாளர் செல்வம் (34) என்பவர் கடிதத்தை வாங்கி படித்துள்ளார். அதில், எனது நண்பனை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ஆம்ஸ்ட்ராங் மகளை கடத்தி கொலை செய்வேன். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருரையும் குண்டு வீசி கொலை செய்வேன் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வம், உடனே கடிதத்தை செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த கடிதம் படூர் பஜனை கோயில் தெருவில் உள்ள சதீஷ் (39) என்பவரது முகவரியில் இருந்து வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதீஷை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் பெயரை பயன்படுத்தி வேறு யாரோ கடிதம் அனுப்பியதும், அவருக்கும் இந்த கடிதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, சதீஷிடம் எழுதி வாங்கிக் கொண்டு செம்பியம் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அயனாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post எனது நண்பனை விடுவிக்காவிட்டால் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை வெடிகுண்டு வீசி கொல்வோம்: கட்சி அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Perambur ,Bahujan Samaj Party ,president ,Perampur ,Ponnai Balu ,Arkadu Suresh ,Thiruvenkadam ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது...