×

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி போராட்டம்; வங்கதேசத்தில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்: 14 போலீசார் உள்பட 91 பேர் பரிதாப பலி

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி நடந்த போராட்டத்தில் 14 காவலர்கள் உள்பட 91 பேர் பலியாகினர். வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இடஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 30 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்புகள் கடந்த மாதம் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 200 பேர் உயிரிழந்தனர். இதனிடையே இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திருந்தார்.

ஷேக் ஹசீனாவின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் கூடிய மாணவர்கள், “ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்” என்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். 2ம் நாளாக நேற்றும் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு எதிராக ஆளும் கட்சி ஆதரவாளர்களும் போராட்த்தில் குதித்துள்ளனர். இதனால் பல இடங்களில் மாணவர்களுக்கும், அவாமி லீக் கட்சி ஆதரவாளர்ளக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் மீது கற்களை வீசி மாணவர்கள் தாக்கினர். பதிலுக்கு மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் டாக்காவில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கும் தீ வைக்கப்பட்டது. பல இடங்களில் பொதுசொத்துகள் சேதமடைந்தன. நேற்று நடந்த போராட்டத்தில் 14 காவலர்கள் உள்பட 91 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த போராட்டத்தால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

The post பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி போராட்டம்; வங்கதேசத்தில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்: 14 போலீசார் உள்பட 91 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Prime Minister Sheikh Hasina ,Bangladesh ,Dhaka ,Sheikh Hasina ,Dinakaran ,
× RELATED அரசியல் கருத்துகளை சொல்வது நட்புறவை...