×

கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் விரிசல்; நிலச்சரிவு அபாயம்: மக்கள் நடமாட தடை: வருவாய்த்துறை எச்சரிக்கை பேனர்

கூடலூர்: கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அந்த பகுதிகளில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் துறை சார்பில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு மேல் கூடலூரை அடுத்த கோக்கால் பகுதியில் கடந்த பல வருடங்களுக்கு முன் அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இலவசமாக நிலம் வழங்கப்பட்டதால் இப்பகுதி ஒன்றரை சென்ட் காலனி என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக இங்குள்ள குடியிருப்புகளில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் மற்றும் நடைபாதைகளில் விரிசல் ஏற்பட்டது. முதியோர் காப்பகத்தின் ஒரு பகுதியில் உள்ள ஜெபக்கூடம் மற்றும் அருகில் உள்ள கட்டிடத்திலும் விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு தங்கியிருந்த முதியோர் 48 பேர் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இப்பகுதியில் விரிசல்கள் அதிகரித்து வந்ததால் கட்டிடங்களும் அதிகம் சேதம் அடைந்தன. பாதுகாப்பற்ற வீடுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு இடம் மாறவும், முகாம்களில் வந்து தங்கவும் வருவாய் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள 7 வீடுகளில் ஏற்பட்ட அதிகமான விரிசல் காரணமாக அங்கிருந்த 2 குடும்பத்தினர் முகாம்களிலும், மீதம் உள்ளவர்கள் வாடகை வீடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். லேசான விரிசல் ஏற்பட்ட ஆரம்ப காலகட்டத்திலேயே இப்பகுதியில் புவியியல் துறையினர் ஆய்வு நடத்தி சென்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுபோல இப்பகுதியிலும் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இது தொடர்பான வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவின. எனவே குடியிருப்பு பகுதிகளுக்கு கீழ் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அங்குள்ள நோயாளிகள் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். உள்நோயாளிகள் பிரிவுகளும் மூடப்பட்டன.

மீண்டும் மத்திய புவியியல் மற்றும் சுரங்கத் துறை நிபுணர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1ம் தேதி 2வது முறையாக இப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். நாளை (6ம் தேதி) மீண்டும் இப்பகுதியில் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இங்கு நிலச்சரிவு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இப்பகுதியில் நடமாட தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடலூர் நகராட்சி சார்பில் அப்பகுதியில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

The post கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் விரிசல்; நிலச்சரிவு அபாயம்: மக்கள் நடமாட தடை: வருவாய்த்துறை எச்சரிக்கை பேனர் appeared first on Dinakaran.

Tags : Kokal ,Kudalur ,Gokal ,21st Ward ,Kudalur Municipality ,Nilgiri District… ,Dinakaran ,
× RELATED கடன் தொல்லையால் விபரீத முடிவு விஷம்...