புழல், ஆக. 4: ரசாயன பொருட்களை ரசீது இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது, என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர், ரசாயன கிடங்கு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். அண்மையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில் சட்டவிரோதமாக ரசாயனம் பெறப்பட்டு விஷச்சாராயம் தயாரித்து விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் ரசாயன கிடங்குகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், ரசாயன மூலப் பொருட்கள் விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த விளாங்காடுப்பாக்கம், வடபெரும்பாக்கம், கிராண்ட் லைன் ஆகிய பகுதிகளில் ஏராளமான ரசாயன குடோன்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ரசாயன கிடங்கு உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செங்குன்றம் அடுத்த கிராண்ட் லைன் தனியார் அரங்கில் நேற்று நடந்தது. இதில், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் தலைமை தாங்கி ரசாயன கிடங்கு உரிமையாளர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பேசிய ரசாயன கிடங்கு உரிமையாளர்கள், காவல்துறையை அணுகுவது கடினமாக உள்ளது. காவல்துறை மக்களின் நண்பன் என்பதைப்போல காவல்துறையை அணுகும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். ரசாயன மூலப்பொருட்களை கையாள உரிமம் பெறும் வழிகளை அரசு மேலும் எளிமைப்படுத்திட வேண்டும். வெவ்வேறு துறைகளுக்கு அலைக்கழிக்கப்படாமல் ஒற்றை சாளர முறையில் உரிமம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
அதனை கேட்டறிந்த ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் பேசுகையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து ரசாயன பொருட்கள் சேமிப்பு கிடங்குகளை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ரசாயன பொருட்கள் விற்பனை தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். எந்தவிதமான ரசாயன பொருட்களையும் ரசீது இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது, என்றார். இந்நிகழ்ச்சியில், ஆவடி இணை ஆணையர் ராஜேந்திரன், செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையாளர்கள் ராஜா ராபர்ட், அசோகன், செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் ரசாயன கிடங்கு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
The post ரசாயன பொருட்களை ரசீது இல்லாமல் விற்கக்கூடாது: கிடங்கு உரிமையாளர்களுக்கு ஆவடி காவல் ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.