திருவள்ளூர், ஆக. 4: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான 3 அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிகளுக்கு வருவதற்கான கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பஞ்சாயத்து அளவிலான பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் ஆய்வு கூட்டம் நடத்தி பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளுக்கு வருவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மை கூட்டமைப்பு மூலம் ஊராட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் வழியாக பள்ளிக்குச் செல்லாமல் இடை நிற்றல் மாணவ மாணவியர்களை கண்டறிந்து வருகின்ற ஆகஸ்ட் 6, 7, 8, 9 ஆகிய தேதிக்குள் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி அளவிலான முதல் மட்ட குழு சிறப்பாக பணி மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு போதுமான அளவுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாரந்தோறும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் 15 நாட்களுக்கு மேல் வருகை தராத இடைநிற்றல் ஆக வாய்ப்புள்ள குழந்தைகளை இடைநிற்றலின்றி மீண்டும் பள்ளிக்கு வருகை புரிவதை வட்டார மற்றும் பள்ளி அளவிலான மூன்றடுக்கு குழு உறுப்பினர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல் ஏற்படுத்த வேண்டும். மேலும் வருவாய்த் துறை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் பொன்னேரி சப் – கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் தி.பரணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் (திருவள்ளூர்) சுகானந்தம், (பொன்னேரி) புண்ணியகோட்டி, ஐஆர்சிடிஎஸ் ஸ்டீபன் மற்றும் வட்டாட்சியர்கள், தன்னார்வலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post இடை நின்ற குழந்தைகள் மீண்டும் கற்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.