×

பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழாவைரூ.10 கோடி செலவில் திருச்சியில் நடத்த திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: பாரத சாரண-சாரணியர் இயக்க வைரவிழாவைரூ.10 கோடி செலவில் திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைரவிழாவை நடத்துவது தொடர்பாக பாரத சாரண சாரணியர்-தமிழ்நாடு மாநில பொதுக் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், பாரத சாரண-சாரணியர் மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் தொடக்கக் கல்வி இயக்குனரும், சாரண-சாரணியர் இயக்கத்தின் மாநில செயலாளருமான நரேஷ், மாநில முதன்மை ஆணையர் அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குனரும், மாநில துணைத் தலைவருமான கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழாவை கொண்டாடுவது தமிழ்நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்ட ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். முதற்கட்டமாக 38 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதில் வரும் பதிலை பொறுத்து, தேசிய அளவிலா அல்லது சர்வதேச அளவிலா என்பதை முடிவு செய்வோம்.ரூ.10 கோடி மதிப்பில் வைரவிழாவை முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் நடத்த அனுமதி பெற்றுள்ளோம். ஆகவே அதை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்.

சாரண-சாரணியர் இயக்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 12 லட்சம் என்ற அளவிலாவது கொண்டு வரவேண்டும். இயக்கம் வளர அனைவரும் ஒன்று சேரவேண்டும். எதிர்காலத்தில் பள்ளிக்கல்வி இயக்குனராக யார் இருக்கிறாரோ, அவர்தான் சாரண-சாரணியர் இயக்கத்தின் மாநில கமிஷனராக இருப்பார். அதுதொடர்பாக விதிமுறைகள் மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ‘‘பாரத சாரண-சாரணியர் இயக்க வைரவிழாவை திருச்சியில் நடத்துவதற்கு ஏதுவாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் எந்த மாதம், எந்த தேதி என்பதை முதலமைச்சருடன் ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும். குறைந்தது 5 நாட்களாவது விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். கர்நாடகாவில் இதற்கு முன்னதாக சர்வதேச அளவிலும், ராஜஸ்தானில் தேசிய அளவிலும் பாரத சாரண-சாரணியர் இயக்க நிகழ்வை நடத்தியுள்ளார்கள். அதனைவிட பிரமாண்டமாக நாங்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். மாணவ-மாணவிகளுக்கான ஒழுக்கம் தொடர்பான கல்வி இதுபோன்ற இயக்கங்கள் வாயிலாகத்தான் அவர்களுக்கு கிடைக்கும்’’ என்றார்.

The post பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழாவைரூ.10 கோடி செலவில் திருச்சியில் நடத்த திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bharat Sarana – Saraniyar Movement Diamond Festival ,Trichy ,Minister ,Anbil Mahesh ,Chennai ,School Education Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Bharat Sarana-Saraniyar Movement ,Bharat Sarana Saraniyar-Tamil Nadu State General Committee ,Diamond Jubilee ,Bharat Sarana-Saranyar Movement ,Bharat Sarana-Saranyar Movement Diamond Jubilee in Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் மணப்பாறையில்...