×

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு பாறைகளில் சிக்கி தவிக்கும் நாய்களுக்கு உணவு வழங்கி கவனிப்பு: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் பகுதியில் உள்ள பாறையில் சிக்கித்தவிக்கும் நாய்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் உணவு வழங்கி, உன்னிப்பாக கவனித்து வருவதாக, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வந்ததால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள பாறையில் சில நாய்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் உத்தரவிடக் கோரி விலங்குகளின் சொர்க்கம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் காந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு, அவசர வழக்காக விசாரித்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும், வருவாய் துறையினர், டிரோன் மூலம் நாய்களுக்கு உணவளித்து, அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நாய்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு பாறைகளில் சிக்கி தவிக்கும் நாய்களுக்கு உணவு வழங்கி கவனிப்பு: ஐகோர்ட்டில் அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,CHENNAI ,Tamil Nadu government ,High Court ,Cauvery ,Mettur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் நீர்வரத்து 11,631 கனஅடியாக உயர்வு..!!