சென்னை: சென்னை பீச்- காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ ரயில்’ சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. ஆனால், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் வாலாஜா ரோடு ரயில் நிலையத்துடன் சோதனை ஓட்டத்தை முடித்துக்கொண்டு பகல் 12.45 மணியளவில் சென்னை திரும்பியது. நாடு முழுவதும் குறிப்பிட்ட மார்க்கங்களில் கடந்த 2019ம் ஆண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப் பட்டது. தற்போது மும்பை- புனே, சென்னை- மைசூரு, டெல்லி- அகமதாபாத் என முக்கிய வழித்தடங்களில் 60 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் 180 நகரங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதேபோல், 250 கி.மீ தூரத்துக்குள் உள்ள முக்கிய இரண்டு நகரங்களுக்கு இடையே வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை- திருப்பதி, சென்னை கடற்கரை – காட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ரயில்கள் மெமு ரயில்கள் போல, அதேநேரத்தில் வந்தே பாரத் ரயில்களை போன்ற கட்டமைப்புடன் இயங்கும். இந்த ரயிலில் 100 பேர் வரை அமர்ந்து செல்லவும், 200 பேர் வரை நின்று செல்லவும் முடியும். மொத்தம் 12 பெட்டிகளுடன் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இந்த ரயில் இயங்கும்.
இதன் சோதனை ஓட்டம் நேற்று காட்பாடி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி, நேற்று (3ம் தேதி) காலை சென்னை வில்லிவாக்கம் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை வளாகத்தில் இருந்து 8.15 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு சென்னை பீச் வந்த வந்தே மெட்ரோ ரயில் அங்கிருந்து காலை 10 மணிக்கு காட்பாடி புறப்பட்டது. ராயபுரம், பெரம்பூர் வழியாக வில்லிவாக்கம் நடைமேடைக்கு வந்த இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் ஜனக்குமார் கர்க் அவருக்கான கண்காணிப்பு பெட்டியில் வந்தார்.
தொடர்ந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்ட வந்தே மெட்ரோ ரயில் மதியம் 12 மணிக்கு அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து காட்பாடி நோக்கி சென்றபோது, மேல்பாக்கம் அருகே தொழில்நுட்ப காரணங்களால் நின்றது. சுமார் அரை மணி நேர தாமதத்துக்கு பிறகு காட்பாடி புறப்பட்ட ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கு மதியம் 12.35 மணியளவில் வந்தடைந்தது. மீண்டும் தொழில்நுட்ப காரணங்களால் காட்பாடிக்கு செல்லாமல் வாலாஜா ரோடு ரயில் நிலையத்துடன் சோதனை ஓட்டத்தை முடித்துக்கொண்டது.
இதையடுத்து மதியம் 12.45 மணியளவில் மீண்டும் சென்னை புறப்பட்டது. ஏற்கனவே வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முன்னிட்டு, சென்னை- காட்பாடி இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வந்தே மெட்ரோவின் சோதனை ஓட்டத்தின்போது முதன்மை பாதுகாப்பு ஆணையருடன் இருந்த ரயில்வே பாதுகாப்பு பொறியியல் பிரிவை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தின் அதிர்வுகள், பாதையில் உள்ள கல்வெர்ட்டுகள், பாலங்களின் அதிர்வுகள் என அனைத்து அம்சங்களையும் நவீன கருவிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதுபற்றி தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக சோதனை ஓட்டம் வாலாஜா ரோடு ரயில் நிலையத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது’ என்றனர்.
* வந்தே பாரத் ரயில்களை போன்ற கட்டமைப்புடன் இயங்கும் இந்த ரயிலில் 100 பேர் வரை அமர்ந்து செல்லவும், 200 பேர் வரை நின்று செல்லவும் முடியும்.
* மொத்தம் 12 பெட்டிகளுடன் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் இந்த ரயில் இயங்கும்.
The post சென்னை கடற்கரை-காட்பாடி இடையே ‘வந்தே மெட்ரோ ரயில்’ சோதனை ஓட்டம்: வாலாஜாவுடன் திடீர் நிறுத்தம் appeared first on Dinakaran.